திருப்புறம்பயம் – சுந்தரர் தேவாரம்:

(1)
அங்கம் ஓதியோர் ஆறை மேற்றளி நின்றும் போந்து, வந்து இன்னம்பர்த்
தங்கினோமையும் இன்னதென்றிலர் ஈசனார், எழு நெஞ்சமே
கங்குல் ஏமங்கள் கொண்டு தேவர்கள் ஏத்தி வானவர் தாந்தொழும்
பொங்கு மால்விடை ஏறி செல்வப் புறம்பயம் தொழப் போதுமே
(2)
பதியும், சுற்றமும், பெற்ற மக்களும் பண்டையாரலர், பெண்டிரும்
நிதியில் இம்மனை வாழும் வாழ்க்கையும் நினைப்பொழி மட நெஞ்சமே
மதியஞ்சேர் சடைக் கங்கையான் இடம், மகிழும் மல்லிகை செண்பகம்
புதிய பூமலர்ந்து எல்லி நாறும் புறம்பயம் தொழப் போதுமே
(3)
புறந்திரைந்து நரம்பெழுந்து நரைத்து நீஉரையால் தளர்ந்து
அறம்புரிந்து நினைப்பது ஆண்மை அரிது காண், இஃது அறிதியேல்
திறம்பியாதெழு நெஞ்சமே, சிறுகாலை நாமுறு வாணியம்
புறம்பயத்துறை பூதநாதன் புறம்பயம் தொழப் போதுமே
(4)
குற்றொருவரைக் கூறை கொண்டு, கொலைகள் சூழ்ந்த களவெலாம்
செற்றொருவரைச் செய்த தீமைகள் இம்மையே வரும் திண்ணமே
மற்றொருவரைப் பற்றிலேன் மறவாதெழு மட நெஞ்சமே
புற்றரவுடைப் பெற்றமேறி புறம்பயம் தொழப் போதுமே
(5)
கள்ளி நீசெய்த தீமையுள்ளன பாவமும் பறையும்படி
தெள்ளிதா எழு நெஞ்சமே, செங்கண் சேவுடைச் சிவலோகன்ஊர்
துள்ளி வெள்ளிள வாளைபாய் வயல் தோன்று தாமரைப் பூக்கள்மேல்
புள்ளி நள்ளிகள் பள்ளி கொள்ளும் புறம்பயம் தொழப் போதுமே
(6)
படையெலாம் பகடார ஆளிலும், பௌவம் சூழ்ந்து அரசாளிலும்
கடையெலாம் பிணைத் தேரைவால், கவலாதெழு மடநெஞ்சமே
மடையெலாம் கழுநீர் மலர்ந்து மருங்கெலாம் கரும்பாடத்தேன்
புடையெலா மணம்நாறு சோலைப் புறம்பயம் தொழப் போதுமே
(7)
முன்னைச் செய்வினை இம்மையில்வந்து மூடுமாதலின் முன்னமே
என்னை நீ தியக்காதெழு மட நெஞ்சமே, எந்தை தந்தையூர்
அன்னச் சேவலோடு ஊடிப் பேடைகள் கூடிச் சேரும் அணிபொழில்
புன்னைக் கன்னி களக்கரும்பு புறம்பயம் தொழப் போதுமே
(8)
மலமெலாம் அறும், இம்மையே மறுமைக்கும் வல்வினை சார்கிலா
சலமெலாம் ஒழி நெஞ்சமே, எங்கள் சங்கரன் வந்து தங்கும்ஊர்
கலமெலாம் கடல் மண்டு காவிரி நங்கையாடிய கங்கைநீர்
புலமெலா மண்டிப் பொன்விளைக்கும் புறம்பயம் தொழப் போதுமே
(9)
பண்டரீயன செய்த தீமையும் பாவமும் பறையும்படி
கண்டரீயன கேட்டியேல் கவலாதெழு மட நெஞ்சமே
தொண்டரீயன பாடித் துள்ளி நின்றாடி வானவர் தாம்தொழும்
புண்டரீக மலரும் பொய்கைப் புறம்பயம் தொழப் போதுமே
(10)
துஞ்சியும் பிறந்தும் சிறந்தும் துயக்கறாத மயக்கிவை
அஞ்சி ஊரன் திருப்புறம்பயத்தப்பனைத் தமிழ்ச் சீரினால்
நெஞ்சினாலே புறம்பயம் தொழுதுய்தும் என்று நினைத்தன
வஞ்சியாதுரை செய்ய வல்லவர் வல்ல வானுலகாள்வரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page