திருப்புறம்பயம் – சம்பந்தர் தேவாரம்:

<– திருப்புறம்பயம்

(1)
மறம்பய மலைந்தவர் மதில் பரிசறுத்தனை
நிறம் பசுமை செம்மையொடு இசைந்துனது நீர்மை
திறம் பயனுறும் பொருள் தெரிந்துணரு நால்வர்க்கு
அறம் பயன் உரைத்தனை, புறம்பயம் அமர்ந்தோய்
(2)
விரித்தனை திருச்சடை, அரித்தொழுகு வெள்ளம்
தரித்தனை, அதன்றியும் மிகப்பெரிய காலன்
எருத்திற உதைத்தனை, இலங்கிழையொர் பாகம்
பொருத்துதல் கருத்தினை, புறம்பயம் அமர்ந்தோய்
(3)
விரிந்தனை குவிந்தனை, விழுங்குயிர் உமிழ்ந்தனை
திரிந்தனை, குருந்தொசி பெருந்தகையும் நீயும்
பிரிந்தனை புணர்ந்தனை, பிணம்புகு மயானம்
புரிந்தனை மகிழ்ந்தனை, புறம்பயம் அமர்ந்தோய்.
(4)
வளங்கெழு கடும்புனலொடும் சடையொடுங்கத்
துளங்கமர் இளம்பிறை சுமந்தது விளங்க
உளங்கொள வளைந்தவர் சுடும்சுடலை நீறு
புளங்கொள விளங்கினை, புறம்பயம் அமர்ந்தோய்
(5)
பெரும்பிணி பிறப்பினொடு இறப்பிலை, ஒர் பாகம்
கரும்பொடு படும்சொலின் மடந்தையை மகிழ்ந்தோய்
சுரும்புண அரும்பவிழ் திருந்தியெழு கொன்றை
விரும்பினை, புறம்பயம் அமர்ந்த இறையோனே
(6)
அனற்படு தடக்கையவர் எத்தொழிலரேனும்
நினைப்புடை மனத்தவர் வினைப் பகையும் நீயே
தனற்படு சுடர்ச்சடை தனிப்பிறையொடு ஒன்றப்
புனற்படு கிடக்கையை புறம்பயம் அமர்ந்தோய்
(7)
மறத்துறை மறுத்தவர் தவத்தடியர் உள்ளம்
அறத்துறை ஒறுத்துனது அருட்கிழமை பெற்றோர்
திறத்துள திறத்தினை மதித்தகல நின்றும்
புறத்துள திறத்தினை புறம்பயம் அமர்ந்தோய்
(8)
இலங்கையர் இறைஞ்சிறை விலங்கலின் முழங்க
உலங்கெழு தடக்கைகள் அடர்த்திடலும் அஞ்சி
வலங்கொள எழுந்தவன் அலங்கவின அஞ்சு
புலங்களை விலங்கினை, புறம்பயம் அமர்ந்தோய்
(9)
வடங்கெட நுடங்குள இடந்த இடையல்லிக்
கிடந்தவன் இருந்தவன் அளந்துணரலாகார்
தொடர்ந்தவர் உடம்பொடு நிமிர்ந்துடன் வணங்கப்
புடங்கருள் செய்தொன்றினை புறம்பயம் அமர்ந்தோய்
(10)
விடக்கொருவர் நன்றென விடக்கொருவர் தீதென
உடற்குடை களைந்தவர், உடம்பினை மறைக்கும்
படக்கர்கள் பிடக்குரை படுத்து, உமையொர் பாகம்
அடக்கினை, புறம்பயம் அமர்ந்த உரவோனே
(11)
கருங்கழி பொருந்திரை கரைக்குலவு முத்தம்
தரும் கழுமலத்திறை தமிழ்க்கிழமை ஞானன்
சுரும்பவிழ் புறம்பயம் அமர்ந்த தமிழ் வல்லார்
பெரும்பிணி மருங்கற ஒருங்குவர் பிறப்பே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page