திருப்புறம்பயம் – அப்பர் தேவாரம்:

<– திருப்புறம்பயம்

(1)
கொடிமாட நீள்தெருவு கூடல் கோட்டூர்
    கொடுங்கோளூர் தண்வளவி கண்டியூரும்
நடமாடு நன்மருகல் வைகி நாளும்
    நலமாகும் ஒற்றியூர் ஒற்றியாகப்
படுமாலை வண்டறையும் பழனம் பாசூர்
    பழையாறும் பாற்குளமும் கைவிட்டிந்நாள்
பொடியேறு மேனியராய்ப் பூதம் சூழப்
    புறம்பயம் நம்மூரென்று போயினாரே
(2)
முற்றொருவர் போல முழுநீறாடி
    முளைத்திங்கள் சூடி முந்நூலும் பூண்டு
ஒற்றொருவர் போல உறங்குவேன் கை
    ஒளிவளையை ஒன்றொன்றா எண்ணுகின்றார்
மற்றொருவர் இல்லைத் துணையெனக்கு
    மால்கொண்டால் போல மயங்குவேற்குப்
புற்றரவக் கச்சார்த்துப் பூதம்சூழப்
    புறம்பயம் நம்மூரென்று போயினாரே
(3)
ஆகாத நஞ்சுண்ட அந்தி வண்ணர்
    ஐந்தலைய மாசுணம் கொண்டம்பொன் தோள்மேல்
ஏகாசமா விட்டு, ஓடொன்றேந்தி வந்து
    இடுதிருவே பலியென்றார்க்கு இல்லே புக்கேன்
பாகேதும் கொள்ளார், பலியும் கொள்ளார்
    பாவியேன் கண்ணுள்ளே பற்றி நோக்கிப்
போகாத வேடத்தர் பூதம் சூழப்
    புறம்பயம் நம்மூரென்று போயினாரே
(4)
பன்மலிந்த வெண்தலை கையிலேந்திப்
    பனிமுகில் போல் மேனிப்ப வந்த நாதர்
நெல்மலிந்த நெய்த்தானம் சோற்றுத்துறை
    நியமம் துருத்தியும் நீடூர் பாச்சில்
கல் மலிந்தோங்கு கழுநீர்க் குன்றம்
    கடல்நாகைக் காரோணம் கைவிட்டிந்நாள்
பொன்மலிந்த கோதையரும் தாமும் எல்லாம்
    புறம்பயம் நம்மூரென்று போயினாரே
(5)
செத்தவர்தம் தலைமாலை கையிலேந்திச்
    சிரமாலை சூடிச் சிவந்த மேனி
மத்தகத்த யானை உரிவை மூடி
    மடவாள் அவளோடு மானொன்றேந்தி
அத்தவத்த தேவர் அறுபதின்மர்
    ஆறு நூறாயிரவர்க்கு ஆடல் காட்டிப்
புத்தகம் கைக்கொண்டு புலித்தோல் வீக்கிப்
    புறம்பயம் நம்மூரென்று போயினாரே
(6)
நஞ்சடைந்த கண்டத்தர் வெண்ணீறாடி
    நல்ல புலியதள் மேல் நாகம்கட்டிப்
பஞ்சடைந்த மெல்விரலாள் பாகமாகப்
    பராய்த்துறையேன் என்றார் பவள வண்ணர்
துஞ்சிடையே வந்து துடியும் கொட்டத்
    துண்ணென்று எழுந்திருந்தேன் சொல்ல மாட்டேன்
புன்சடையின் மேலோர் புனலும் சூடிப்
    புறம்பயம் நம்மூரென்று போயினாரே
(7)
மறியிலங்கு கையர் மழுவொன்றேந்தி
    மறைக்காட்டேன் என்றோர் மழலை பேசிச்
செறியிலங்கு திண்தோள்மேல் நீறு கொண்டு
    திருமுண்டமா இட்ட திலக நெற்றி
நெறியிலங்கு கூந்தலார் பின்பின் சென்று
    நெடுங்கண் பனிசோர நின்று நோக்கிப்
பொறியிலங்கு பாம்பார்த்துப் பூதம் சூழப்
    புறம்பயம் நம்மூரென்று போயினாரே
(8)
நில்லாதே பல்லூரும் பலிகள் வேண்டி
    நிரைவளையார் பலிபெய்ய நிறையும் கொண்டு
கொல்லேறும் கொக்கரையும் கொடுகொட்டியும்
    குடமூக்கில் அங்கொழியக் குளிர்தண் பொய்கை
நல்லாளை நல்லூரே தவிரேன் என்று
    நறையூரில் தாமும் தவிர்வார் போலப்
பொல்லாத வேடத்தர் பூதம் சூழப்
    புறம்பயம் நம்மூரென்று போயினாரே
(9)
விரையேறு நீறணிந்தோர் ஆமை பூண்டு
    வெண்தோடு பெய்திடங்கை வீணையேந்தித்
திரையேறு சென்னிமேல் திங்கள் தன்னைத்
    திசைவிளங்க வைத்துகந்த செந்தீ வண்ணர்
அரையேறு மேகலையாள் பாகமாக
    ஆரிடத்தில் ஆடல்அமர்ந்த ஐயன்
புரையேறு தாமேறிப் பூதம் சூழப்
    புறம்பயம் நம்மூரென்று போயினாரே
(10)
கோவாய இந்திரன் உள்ளிட்டாராகக்
    குமரனும் விக்கின விநாயகன்னும்
பூவாய பீடத்து மேல் அயன்னும்
    பூமி அளந்தானும் போற்றிசைப்பப்
பாவாய இன்னிசைகள் பாடியாடிப்
    பாரிடமும் தாமும் பரந்து பற்றிப்
பூவார்ந்த கொன்றை பொறி வண்டார்க்கப்
    புறம்பயம் நம்மூரென்று போயினாரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page