(1)
பிறவாதே தோன்றிய பெம்மான் தன்னைப்
பேணாதார் அவர்தம்மைப் பேணாதானைத்
துறவாதே கட்டறுத்த சோதியானைத்
தூநெறிக்கும் தூநெறியாய் நின்றான் தன்னைத்
திறமாய எத்திசையும் தானேயாகித்
திருப்புன்கூர் மேவிய சிவலோகனை
நிறமாம் ஒளியானை நீடூரானை
நீதனேன் என்னேநான் நினையாவாறே
(2)
பின்தானும் முன்தானும் ஆனான் தன்னைப்
பித்தர்க்குப் பித்தனாய் நின்றான் தன்னை
நன்றாங்கறிந்தவர்க்கும் தானேயாகி
நல்வினையும் தீவினையும் ஆனான் தன்னைச்
சென்றோங்கி விண்ணளவும் தீயானானைத்
திருப்புன்கூர் மேவிய சிவலோகனை
நின்றாய நீடூர் நிலாவினானை
நீதனேன் என்னேநான் நினையாவாறே
(3)
இல்லானை, எவ்விடத்தும் உள்ளான் தன்னை
இனிய நினையாதார்க்கு இன்னாதானை
வல்லானை வல்லடைந்தார்க்கு அருளும் வண்ணம்
மாட்டாதார்க்கு எத்திறத்தும் மாட்டாதானைச்
செல்லாத செந்நெறிக்கே செல்விப்பானைத்
திருப்புன்கூர் மேவிய சிவலோகனை
நெல்லால் விளைகழனி நீடூரானை
நீதனேன் என்னேநான் நினையாவாறே
(4)
கலைஞானம் கல்லாமே கற்பித்தானைக்
கடுநரகம் சாராமே காப்பான் தன்னைப்
பலவாய வேடங்கள் தானேயாகிப்
பணிவார்கட்கு அங்கங்கே பற்றானானைச்
சிலையால் புரமெரித்த தீயாடியைத்
திருப்புன்கூர் மேவிய சிவலோகனை
நிலையார் மணிமாட நீடுரானை
நீதனேன் என்னேநான் நினையாவாறே
(5)
நோக்காதே எவ்வளவும் நோக்கினானை
நுணுகாதே யாதொன்றும் நுணுகினானை
ஆக்காதே யாதொன்றும் ஆக்கினானை
அணுகாதார் அவர்தம்மை அணுகாதானைத்
தேக்காதே தெண்கடல் நஞ்சுண்டான் தன்னைத்
திருப்புன்கூர் மேவிய சிவலோகனை
நீக்காத பேரொளிசேர் நீடூரானை
நீதனேன் என்னேநான் நினையாவாறே
(6)
பூணலாப் பூணானைப், பூசாச் சாந்தம்
உடையானை, முடைநாறும் புன்கலத்தில்
ஊணலா ஊணானை, ஒருவர் காணா
உத்தமனை, ஒளிதிகழும் மேனியானைச்
சேணுலாம் செழும்பவளக் குன்றொப்பானைத்
திருப்புன்கூர் மேவிய சிவலோகனை
நீணுலா மலர்க்கழனி நீடுரானை
நீதனேன் என்னேநான் நினையாவாறே
(7)
உரையார் பொருளுக்கு உலப்பிலானை
ஒழியாமே எவ்வுருவும் ஆனான் தன்னைப்
புரையாய்க் கனமாய் ஆழ்ந்து ஆழாதானைப்
புதியனவுமாய் மிகவும் பழையான் தன்னைத்
திரையார் புனல்சேர் மகுடத்தானைத்
திருப்புன்கூர் மேவிய சிவலோகனை
நிரையார் மணிமாட நீடூரானை
நீதனேன் என்னேநான் நினையாவாறே
(8)
கூரரவத்தணையானும் குளிர்தண் பொய்கை
மலரவனும் கூடிச் சென்றறிய மாட்டார்
ஆரொருவர் அவர்தன்மை அறிவார், தேவர்
அறிவோம் என்பார்க்கெல்லாம் அறியலாகாச்
சீரரவக் கழலானை, நிழலார் சோலைத்
திருப்புன்கூர் மேவிய சிவலோகனை
நீரரவத் தண்கழனி நீடூரானை
நீதனேன் என்னேநான் நினையாவாறே
(9)
கையெலாம் நெய்பாயக் கழுத்தே கிட்டக்
கால்நிமிர்த்து நின்றுண்ணும் கையர் சொன்ன
பொய்யெலாம் மெய்யென்று கருதிப் புக்குப்
புள்ளுவரால் அகப்படாது உய்யப் போந்தேன்
செய்யெலாம் செழுங்கமலப் பழனவேலித்
திருப்புன்கூர் மேவிய சிவலோகனை
நெய்தல்வாய்ப் புனற்படப்பை நீடூரானை
நீதனேன் என்னேநான் நினையாவாறே
(10)
இகழுமாறு எங்ஙனே ஏழை நெஞ்சே
இகழாது பரந்தொன்றாய் நின்றான் தன்னை
நகழ மால்வரைக் கீழிட்ட அரக்கர் கோனை
நலனழித்து நன்கருளிச் செய்தான் தன்னைத்
திகழுமா மதகரியின் உரி போர்த்தானைத்
திருப்புன்கூர் மேவிய சிவலோகனை
நிகழுமா வல்லானை நீடூரானை
நீதனேன் என்னேநான் நினையாவாறே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...