(1)
சித்த நீநினை என்னொடு சூளறு வைகலும்
மத்த யானையின் ஈருரி போர்த்த மணாளன் ஊர்
பத்தர் தாம்பலர் பாடி நின்றாடும் பழம்பதி
பொத்தில் ஆந்தைகள் பாட்டறாப் புனவாயிலே
(2)
கருதி நீமனம் என்னொடு சூளறு வைகலும்
எருது மேற்கொளும் எம்பெருமாற்கிடமாவது
மருத வானவர் வைகும்இடம், மறவேடுவர்
பொருது சாத்தொடு பூசலறாப் புனவாயிலே
(3)
தொக்காய் மனம் என்னொடு சூளறு வைகலும்
நக்கான்நமை ஆளுடையான் நவிலும் இடம்
அக்கோடு அரவார்த்த பிரான் அடிக்கன்பராய்ப்
புக்காரவர் போற்றொழியாப் புனவாயிலே
(4)
வற்கென்றிருத்தி கண்டாய் மனம் என்னொடு சூளறு
பொற்குன்றம் சேர்ந்ததொர் காக்கை பொன்னாம் அதுவேபுகல்
கற்குன்றும் தூறும் கடுவெளியும் கடற்கானல் வாய்ப்
புற்கென்று தோன்றிடும் எம்பெருமான் புனவாயிலே
(5)
நில்லாய் மனம் என்னொடு சூளறு வைகலும்
நல்லான் நமைஆளுடையான் நவிலும் இடம்
வில்வாய்க் கணை வேட்டுவராட்ட வெருண்டு போய்ப்
புல்வாய்க் கணம் புக்கொளிக்கும் புனவாயிலே
(6)
மறவல் நீமனம் என்னொடு சூளறு வைகலும்
உறவும் ஊழியும்ஆய பெம்மாற்கிடமாவது
பிறவு கள்ளியின் நீள் கவட்டேறித் தன் பேடையைப்
புறவம் கூப்பிடப் பொன்புனம் சூழ் புனவாயிலே
(7)
ஏசற்று நீநினை, என்னொடு சூளறு வைகலும்
பாசற்றவர் பாடி நின்றாடும் பழம்பதி
தேசத்தடியவர் வந்திரு போதும் வணங்கிடப்
பூசற்றுடி பூசலறாப் புனவாயிலே
(8)
கொள்ளிவாயின கூரெயில் தேனம் கிழிக்கவே
தெள்ளி மாமணி தீவிழிக்கும் இடம் செந்தறை
கள்ளிவற்றிப் புற்றீந்து வெங்கானம் கழிக்கவே
புள்ளி மானினம் புக்கொளிக்கும் புனவாயிலே
(9)
எற்றே நினை என்னொடு சூளறு வைகலும்
மற்றேதும் வேண்டா வல்வினையாயின மாய்ந்தறக்
கற்றூறு கார்க் காட்டிடை மேய்ந்த கார்க்கோழி போய்ப்
புற்றேறிக் கூகூ என அழைக்கும் புனவாயிலே
(10)
பொடியாடு மேனியன் பொன்புனம் சூழ் புனவாயிலை
அடியார் அடியன் நாவலவூரன் உரைத்தன
மடியாது கற்றிவை ஏத்தவல்லார் வினை மாய்ந்து போய்க்
குடியாகிப் பாடி நின்றாட வல்லார்க்கு இல்லை குற்றமே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...