திருப்புத்தூர் – சம்பந்தர் தேவாரம்:

<– திருப்புத்தூர்

(1)
வெங்கள் விம்மு வெறியார் பொழிற்சோலை
திங்களோடு திளைக்கும் திருப்புத்தூர்க்
கங்கை தங்கு முடியார் அவர் போலும்
எங்கள்உச்சி உறையும் இறையாரே
(2)
வேனல் விம்மு வெறியார் பொழிற்சோலைத்
தேனும் வண்டும் திளைக்கும் திருப்புத்தூர்
ஊனமின்றி உறைவார் அவர் போலும்
ஏன முள்ளும் எயிறும் புனைவாரே
(3)
பாங்கு நல்ல வரிவண்டிசை பாடத்
தேங்கொள் கொன்றை திளைக்கும் திருப்புத்தூர்
ஓங்கு கோயில் உறைவார் அவர் போலும்
தாங்கு திங்கள் தவழ்புன் சடையாரே
(4)
நாற விண்ட நறுமா மலர் கவ்வித்
தேறல் வண்டு திளைக்கும் திருப்புத்தூர்
ஊறல் வாழ்க்கை உடையார் அவர் போலும்
ஏறு கொண்ட கொடிஎம் இறையாரே
(5)
இசை விளங்கும் எழில் சூழ்ந்தியல்பாகத்
திசை விளங்கும் பொழில்சூழ் திருப்புத்தூர்
பசை விளங்கப் படித்தார் அவர் போலும்
வசை விளங்கும் வடிசேர் நுதலாரே
(6)
வெண்ணிறத்த விரையோடு அலருந்தித்
தெண்ணிறத்த புனல்பாய் திருப்புத்தூர்
ஒள்நிறத்த ஒளியார் அவர்போலும்
வெண்ணிறத்த விடைசேர் கொடியாரே
(7)
நெய்தல் ஆம்பல் கழுநீர் மலர்ந்தெங்கும்
செய்கண் மல்கு சிவனார் திருப்புத்தூர்த்
தையல் பாகம் மகிழ்ந்தார் அவர் போலும்
மையுண் நஞ்சம் மருவு மிடற்றாரே
(8)
கருக்கமெல்லாம் கமழும் பொழிற்சோலைத்
திருக்கொள் செம்மை விழவார் திருப்புத்தூர்
இருக்கவல்ல இறைவர் அவர் போலும்
அரக்கன் ஒல்க விரலால் அடர்த்தாரே
(9)
மருவியெங்கும் வளரும் மடமஞ்ஞை
தெருவு தோறும் திளைக்கும் திருப்புத்தூர்ப்
பெருகி வாழும் பெருமான் அவர் போலும்
பிரமன் மாலும் அறியாப் பெரியோனே
(10)
கூறை போர்க்கும் தொழிலார் அமண்கூறல்
தேறல் வேண்டா தெளிமின் திருப்புத்தூர்
ஆறு நான்கும் அமர்ந்தார் அவர் போலும்
ஏறு கொண்ட கொடிஎம் இறையாரே
(11)
நல்ல கேள்வி ஞானசம்பந்தன்
செல்வர் சேடர் உறையும் திருப்புத்தூர்ச்
சொல்லல் பாடல் வல்லார் தமக்கென்றும்
அல்லல் தீரும் அவலம் அடையாவே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page