திருப்புத்தூர் – அப்பர் தேவாரம்:

<– திருப்புத்தூர்

(1)
புரிந்தமரர் தொழுதேத்தும் புகழ் தக்கோன் காண்
    போர்விடையின் பாகன் காண், புவனமேழும்
விரிந்து பல உயிராகி விளங்கினான் காண்
    விரைக்கொன்றைக் கண்ணியன் காண், வேதம் நான்கும்
தெரிந்துமுதல் படைத்தோனைச் சிரங்கொண்டோன் காண்
    தீர்த்தன் காண், திருமாலோர் பாகத்தான் காண்
திருந்துவயல் புடைதழுவு திருப்புத்தூரில்
    திருத்தளியான் காண் அவனென் சிந்தையானே
(2)
வாராரும் முலைமங்கை பாகத்தான் காண்
    மாமறைகள் ஆயவன் காண், மண்ணும் விண்ணும்
கூரார் வெந்தழலவனும் காற்றும் நீரும்
    குலவரையும் ஆயவன் காண், கொடு நஞ்சுண்ட
காராரும் கண்டன் காண், எண்தோளன் காண்
    கயிலைமலைப் பொருப்பன் காண், விருப்போடு என்றும்
தேராரும் நெடுவீதித் திருப்புத்தூரில்
    திருத்தளியான் காண் அவனென் சிந்தையானே
(3)
மின்காட்டும் கொடி மருங்குல் உமையாட்கென்றும்
    விருப்பவன் காண், பொருப்புவலிச் சிலைக் கையோன் காண்
நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி
    நற்கனகக் கிழி தருமிக்கருளினோன் காண்
பொன்காட்டக் கடிக்கொன்றை மருங்கே நின்ற
    புனக்காந்தள் கைகாட்டக் கண்டு, வண்டு
தென்காட்டும் செழும்புறவின் திருப்புத்தூரில்
    திருத்தளியான் காண் அவனென் சிந்தையானே
(4)
ஏடேறு மலர்க் கமலத்தயனும் மாலும்
    இந்திரனும் பணிந்தேத்த இருக்கின்றான் காண்
தோடேறு மலர்க் கடுக்கை வன்னி மத்தம்
    துன்னிய செஞ்சடையான் காண், துகள்தீர் சங்கம்
மாடேறி முத்தீனும் கானல் வேலி
    மறைக்காட்டு மாமணி காண், வளங்கொள் மேதி
சேடேறி மடுப்படியும் திருப்புத்தூரில்
    திருத்தளியான் காண் அவனென் சிந்தையானே
(5)
கருமருவு வல்வினை நோய் காற்றினான் காண்
    காமரு பூங்கச்சி ஏகம்பத்தான் காண்
பெருமருவு பேருலகில் பிணிகள் தீர்க்கும்
    பெரும்பற்றத் தண்புலியூர் மன்றாடி காண்
தருமருவு கொடைத்தடக்கை அளகைக்கோன் தன்
    சங்காதி, ஆரூரில் தனியானை காண்
திருமருவு பொழில்புடை சூழ் திருப்புத்தூரில்
    திருத்தளியான் காண் அவனென் சிந்தையானே
(6)
காம்பாடு தோள்உமையாள் காண நட்டம்
    கலந்தாடல் புரிந்தவன் காண், கையில் வெய்ய
பாம்பாடப் படுதலையில் பலிகொள்வோன் காண்
    பவளத்தின் பருவரைபோல் படிவத்தான் காண்
தாம்பாடு சினவிடையே பகடாக் கொண்ட
    சங்கரன் காண், பொங்கரவக் கச்சையோன் காண்
சேம்பாடு வயல்புடைசூழ் திருப்புத்தூரில்
    திருத்தளியான் காண் அவனென் சிந்தையானே
(7)
வெறிவிரவு மலர்க் கொன்றை விளங்கு திங்கள்
    வன்னியொடு விரிசடைமேல் மிலைச்சினான் காண்
பொறிவிரவு கதநாகம் அக்கினோடு
    பூண்டவன் காண், பொருபுலித்தோல் ஆடையான் காண்
அறிவரிய நுண்பொருள்கள் ஆயினான் காண்
    ஆயிரம்பேர் உடையவன் காண், அந்தண் கானல்
செறிபொழில்சூழ் மணிமாடத் திருப்புத்தூரில்
    திருத்தளியான் காண், அவனென் சிந்தையானே
(8)
புக்கடைந்த வேதியற்காக் காலற் காய்ந்த
    புண்ணியன் காண், வெண்ணகை வெள்வளையாள் அஞ்ச
மிக்கெதிர்ந்த கரிவெருவ உரித்த கோன் காண்
    வெண்மதியைத் தலைசேர்த்த தண்மையோன் காண்
அக்கரும்பு பெரும்புன்னை நெருங்கு சோலை
    ஆரூருக்கதிபதி காண், அந்தண் தென்றல்
திக்கணைந்து வருமருங்கின் திருப்புத்தூரில்
    திருத்தளியான் காண் அவனென் சிந்தையானே
(9)
பற்றவன் காண், ஏனோர்க்கும் வானோருக்கும்
    பராபரன் காண், தக்கன் தன் வேள்வி செற்ற
கொற்றவன் காண், கொடுஞ்சினத்தை அடங்கச் செற்று
    ஞானத்தை மேன்மிகுத்தல் கோளாக் கொண்ட
பெற்றியன் காண், பிறங்கருவிக் கழுக்குன்றத்தெம்
    பிஞ்ஞகன் காண், பேரெழிலார் காமவேளைச்
செற்றவன் காண், சீர்மருவு திருப்புத்தூரில்
    திருத்தளியான் காண் அவனென் சிந்தையானே
(10)
உரம் மதித்த சலந்தரன் தன் ஆகம் கீண்ட
    ஓராழி படைத்தவன் காண், உலகு சூழும்
வரம் மதித்த கதிரவனைப் பற்கொண்டான் காண்
    வானவர்கோன் புயம் நெரித்த வல்லாளன் காண்
அரமதித்துச் செம்பொன்னின் ஆரம் பூணா
    அணிந்தவன் காண், அலைகடல்சூழ் இலங்கை வேந்தன்
சிரம்நெரித்த சேவடி காண், திருப்புத்தூரில்
    திருத்தளியான் காண் அவனென் சிந்தையானே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page