(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)
(சம்பந்தர் தேவாரம்):
(1)
பட்டம் பால்நிற மதியம், படர்சடைச் சுடர்விடு பாணி
நட்டம் நள்ளிருளாடும் நாதன் நவின்றுறை கோயில்
புட்டன் பேடையொடாடும் பூம்புகலூர்த் தொண்டர் போற்றி
வட்டம் சூழ்ந்தடி பரவும் வர்த்தமானீச்சரத்தாரே
(2)
முயல் வளாவிய திங்கள், வாண்முகத்தரிவையில் தெரிவை
இயல் வளாவியதுடைய இன்னமுது எந்தை எம்பெருமான்
கயல் வளாவிய கழனிக் கருநிறக் குவளைகள் மலரும்
வயல் வளாவிய புகலூர் வர்த்தமானீச்சரத்தாரே
(3)
தொண்டர் தண்கயம் மூழ்கித் துணையலும் சாந்தமும் புகையும்
கொண்டு கொண்டடி பரவிக் குறிப்பறி முருகன்செய் கோலம்
கண்டு கண்டு கண்குளிரக் களிபரந்தொளி மல்கு கள்ளார்
வண்டு பண்செயும் புகலூர் வர்த்தமானீச்சரத்தாரே
(4)
பண்ண வண்ணத்தராகிப் பாடலொடு ஆடலறாத
விண்ண வண்ணத்தராய விரி புகலூரர், ஓர் பாகம்
பெண்ண வண்ணத்தராகும் பெற்றியொடு, ஆண்இணை பிணைந்த
வண்ண வண்ணத்தெம் பெருமான் வர்த்தமானீச்சரத்தாரே
(5)
ஈசன், ஏறமர் கடவுள், இன்னமுது. எந்தை எம்பெருமான்
பூசு மாசில் வெண்ணீற்றர், பொலிவுடைப் பூம்புகலூரில்
மூசு வண்டறை கொன்றை முருகன் முப்போதும்செய் முடிமேல்
வாசமாமலர் உடையார் வர்த்தமானீச்சரத்தாரே
(6)
தளிரிளம்கொடி வளரத் தண்கயம்இரிய வண்டேறிக்
கிளரிளம்முழை நுழையக் கிழிதரு பொழில் புகலூரில்
உளரிளம்சுனை மலரும் ஒளிதரு சடைமுடி அதன்மேல்
வளரிளம் பிறையுடையார் வர்த்தமானீச்சரத்தாரே
(7)
தென்சொல் விஞ்சமர் வடசொல் திசைமொழி எழில்நரம்பெடுத்துத்
துஞ்சு நெஞ்சிருள் நீங்கத் தொழுதெழு தொல் புகலூரில்
அஞ்சனம் பிதிர்ந்தனைய அலைகடல் கடைய அன்றெழுந்த
வஞ்ச நஞ்சணி கண்டர் வர்த்தமானீச்சரத்தாரே
(8)
சாம வேதமொர் கீதம் ஓதியத் தசமுகன் பரவும்
நாமதேயமது உடையார், நன்குணர்ந்த அடிகள் என்றேத்தக்
காம தேவனை வேவக் கனலெரி கொளுவிய கண்ணார்
வாமதேவர் தண்புகலூர் வர்த்தமானீச்சரத்தாரே.
(9)
சீரணங்குற நின்ற செருவுறு திசைமுகனோடு
நாரணன் கருத்தழிய நகைசெய்த சடைமுடி நம்பர்
ஆரணங்குறும் உமையை அஞ்சுவித்தருளுதல் பொருட்டால்
வாரணத்துரி போர்த்தார் வர்த்தமானீச்சரத்தாரே
(10)
கையில் உண்டுழல்வாரும், கமழ்துவர் ஆடையினால் தம்
மெய்யைப் போர்த்துழல்வாரும் உரைப்பன மெய்யென விரும்பேல்
செய்யில் வாளைகளோடு செங்கயல் குதிகொளும் புகலூர்
மைகொள் கண்டத்தெம் பெருமான் வர்த்தமானீச்சரத்தாரே
(11)
பொங்கு தண்புனல் சூழ்ந்து போதணி பொழில் புகலூரில்
மங்குல் மாமதி தவழும் வர்த்தமானீச்சரத்தாரைத்
தங்கு சீர்திகழ் ஞானசம்பந்தன் தண்தமிழ் பத்தும்
எங்கும் ஏத்தவல்லார்கள் எய்துவர் இமையவர் உலகே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...