திருப்புகலூர் – சுந்தரர் தேவாரம்:

<– திருப்புகலூர்

(1)
தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும்
    சார்கினும் தொண்டர் தருகிலாப்
பொய்ம்மையாளரைப் பாடாதே, எந்தை
    புகலூர் பாடுமின் புலவீர்காள்
இம்மையே தரும், சோறும் கூறையும்
    ஏத்தலாம், இடர் கெடலுமாம்
அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு
    யாதும் ஐயுறவில்லையே
(2)
மிடுக்கிலாதானை வீமனே, விறல்
    விசயனே வில்லுக்கு இவனென்று
கொடுக்கிலாதானைப் பாரியே என்று
    கூறினும் கொடுப்பாரிலை
பொடிக்கொள் மேனிஎம் புண்ணியன்; !புக
    லூரைப் பாடுமின் புலவீர்காள்
அடுக்கு மேல் அமருலகம் ஆள்வதற்கு
    யாதும் ஐயுறவில்லையே
(3)
காணியேல் பெரிதுடையனே, கற்று
    நல்லனே, சுற்றம் நன்கிளை
பேணியே, விருந்தோம்புமே என்று
    பேசினும் கொடுப்பாரிலை
பூணி பூண்டுழப் புட்சிலம்பும் தண்
    புகலூர் பாடுமின் புலவீர்காள்
ஆணியாய் அமருலகம் ஆள்வதற்கு
    யாதும் ஐயுறவில்லையே
(4)
நரைகள் போந்து மெய் தளர்ந்து மூத்துடல்
    நடுங்கி நிற்கும் இக்கிழவனை
வரைகள் போல் திரள் தோளனே என்று
    வாழ்த்தினும் கொடுப்பாரிலை
புரை வெள்ளேறுடைப் புண்ணியன், !புக
    லூரைப் பாடுமின் புலவீர்காள்
அரையனாய் அமருலகம் ஆள்வதற்கு
    யாதும் ஐயுறவில்லையே
(5)
வஞ்ச நெஞ்சனை, மாசழக்கனைப்
    பாவியை, வழக்கில்லியைப்
பஞ்ச துட்டனைச் சாதுவே என்று
    பாடினும் கொடுப்பாரிலை
பொன்செய் செஞ்சடைப் புண்ணியன், !புக
    லூரைப் பாடுமின் புலவீர்காள்
நெஞ்சில் நோயறுத்துஞ்சு போவதற்கு
    யாதும் ஐயுறவில்லையே
(6)
நலமிலாதானை நல்லனே என்று
    நரைத்த மாந்தனை இளையனே
குலமிலாதானைக் குலவனே என்று
    கூறினும் கொடுப்பாரிலை
புலமெலாம் வெறி கமழும் !பூம்புக
    லூரைப் பாடுமின் புலவீர்காள்
அலமராது அமருலகம் ஆள்வதற்கு
    யாதும் ஐயுறவில்லையே
(7)
நோயனைத் தடந்தோளனே என்று
    நொய்ய மாந்தனை விழுமிய
தாயன்றோ புலவோர்க்கெலாம் என்று
    சாற்றினும் கொடுப்பாரிலை
போயுழன்று கண் குழியாதே எந்தை
    புகலூர் பாடுமின் புலவீர்காள்
ஆயமின்றிப் போய் அண்டம் ஆள்வதற்கு
    யாதும் ஐயுறவில்லையே
(8)
எள்விழுந்துஇடம் பார்க்கும்ஆகிலும்
    ஈக்கும் ஈகிலனாகிலும்
வள்ளலே எங்கள் மைந்தனே என்று
    வாழ்த்தினும் கொடுப்பாரிலை
புள்ளெலாம் சென்று சேரும் !பூம்புக
    லூரைப் பாடுமின் புலவீர்காள்
அள்ளல் பட்டழுந்தாது போவதற்கு
    யாதும் ஐயுறவில்லையே
(9)
கற்றிலாதானைக் கற்று நல்லனே
    காம தேவனை ஒக்குமே
முற்றிலாதானை முற்றனே என்று
    மொழியினும் கொடுப்பாரிலை
பொத்தில் ஆந்தைகள் பாட்டறாப் !புக
    லூரைப் பாடுமின் புலவீர்காள்
அத்தனாய் அமருலகம் ஆள்வதற்கு
    யாதும் ஐயுறவில்லையே
(10)
தையலாருக்கொர் காமனே சால
    நல அழகுடை ஐயனே
கையுலாவிய வேலனே என்று
    கழறினும் கொடுப்பாரிலை
பொய்கை வாவியின் மேதி பாய் !புக
    லூரைப் பாடுமின் புலவீர்காள்
ஐயனாய் அமருலகம் ஆள்வதற்கு
    யாதும் ஐயுறவில்லையே
(11)
செறுவினில் செழுங்கமலம் ஓங்குதென்
    புகலூர் மேவிய செல்வனை
நறவம் பூம்பொழில் நாவலூரன்
    வனப்பகை அப்பன், சடையன்தன்
சிறுவன், வன்தொண்டன், ஊரன் பாடிய
    பாடல் பத்திவை வல்லவர்
அறவனார்அடி சென்று சேர்வதற்கு
    யாதும் ஐயுறவில்லையே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page