(1)
வெங்கள்விம்மு குழல் இளையராட வெறிவிரவு நீர்ப்
பொங்குசெங்கண் கருங்கயல்கள் பாயும் புகலூர்தனுள்
திங்கள்சூடித், திரிபுரம் ஒர்அம்பால் எரியூட்டிய
எங்கள் பெம்மான் அடிபரவ நாளும்இடர் கழியுமே
(2)
வாழ்ந்த நாளும், இனிவாழு நாளும் இவை அறிதிரேல்
வீழ்ந்தநாள் எம்பெருமானை ஏத்தா விதியில்லிகாள்
போழ்ந்த திங்கள் புரிசடையினான் தன் புகலூரையே
சூழ்ந்தஉள்ளம் உடையீர்கள் உங்கள்துயர் தீருமே
(3)
மடையின் நெய்தல் கருங்குவளை செய்ய மலர்த் தாமரை
புடைகொள் செந்நெல் விளைகழனி மல்கும் புகலூர் தனுள்
தொடைகொள் கொன்றை புனைந்தான், ஒர் பாகம் மதிசூடியை
அடைய வல்லவர் அமருலகம் ஆளப் பெறுவார்களே
(4)
பூவும்நீரும் பலியும் சுமந்து புகலூரையே
நாவினாலே நவின்றேத்தல் ஓவார், செவித் துளைகளால்
யாவும்கேளார் அவன் பெருமைஅல்லால், அடியார்கள் தாம்
ஓவும்நாளும் உணர்வொழிந்த நாள் என்றுள்ளம் கொள்ளவே
(5)
அன்னம் கன்னிப் பெடைபுல்கி ஒல்கிஅணி நடையவாய்ப்
பொன்னங்காஞ்சி மலர்ச்சின்னம் ஆலும் புகலூர்தனுள்
முன்னம்மூன்று மதிலெரித்த மூர்த்தி திறம் கருதுங்கால்
இன்னரென்னப் பெரிதரியர் ஏத்தச் சிறிதெளியரே
(6)
குலவராகக் குலமிலரும் ஆகக்குணம் புகழுங்கால்
உலகினல்ல கதி பெறுவரேனும் மலர் ஊறுதேன்
புலவமெல்லாம் வெறிகமழும் அந்தண் புகலூர்தனுள்
நிலவமல்கு சடையடிகள் பாதம் நினைவார்களே
(7)
ஆணும் பெண்ணும் என நிற்பரேனும், அரவு ஆரமாப்
பூணுமேனும், புகலூர் தனக்கோர் பொருளாயினான்
ஊணும் ஊரார் இடு பிச்சையேற்று உண்டு, உடை கோவணம்
பேணுமேனும் பிரான்என்பரால் எம்பெருமானையே
(8)
உய்ய வேண்டில் எழுபோத நெஞ்சே, உயர் இலங்கைக்கோன்
கைகள் ஒல்கக் கருவரை எடுத்தானை ஓர்விரலினால்
செய்கை தோன்றச் சிதைத்தருள வல்ல சிவன் மேய !பூம்
பொய்கை சூழ்ந்த புகலூர் புகழப் பொருளாகுமே
(9)
நேமியானும், முகநான்குடைய நெறி அண்ணலும்
ஆமிதென்று தகைந்தேத்தப் போய் ஆரழலாயினான்
சாமிதாதை சரணாகும் என்று தலை சாய்மினோ
பூமியெல்லாம் புகழ்செல்வம் மல்கும் புகலூரையே
(10)
வேர்த்த மெய்யர் உருவத்துடை விட்டுழல்வார்களும்
போர்த்த கூறைப் போதி நீழலாரும் புகலூர்தனுள்
தீர்த்தமெல்லாம் சடைக்கரந்த தேவன் திறம் கருதுங்கால்
ஓர்த்து மெய்யென்று உணராது பாதம் தொழுதுய்ம்மினே
(11)
புந்தியார்ந்த பெரியோர்கள் ஏத்தும் புகலூர்தனுள்
வெந்தசாம்பல் பொடிப் பூசவல்ல விடையூர்தியை
அந்தமில்லா அனலாடலானை அணி !ஞானசம்
பந்தன் சொன்ன தமிழ் பாடியாடக் கெடும் பாவமே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...