(1)
குறிகலந்த இசை பாடலினான், நசையால் இவ்வுலகெல்லாம்
நெறி கலந்ததொரு நீர்மையனான், எருதேறிப் பலிபேணி
முறிகலந்ததொரு தோல் அரைமேல்உடையான் இடம், மொய்ம்மலரின்
பொறிகலந்த பொழில் சூழ்ந்தயலே புயலாரும் புகலூரே
(2)
காதிலங்கு குழையன், இழைசேர் திருமார்பன், ஒருபாகம்
மாதிலங்கு திருமேனியினான், கருமானின் உரியாடை
மீதிலங்க அணிந்தான், இமையோர் தொழ மேவும் இ டம், சோலைப்
போதிலங்கு நசையால் வரிவண்டிசை பாடும் புகலூரே
(3)
பண்ணிலாவும் மறை பாடலினான், இறைசேரும் வளை அங்கைப்
பெண்ணிலாவ உடையான், பெரியார்கழல் என்றும் தொழுதேத்த
உண்ணிலாவி அவர் சிந்தையுள் நீங்கா ஒருவன் இடமென்பர்
மண்ணிலாவும் அடியார் குடிமைத்தொழில் மல்கும் புகலூரே
(4)
நீரின்மல்கு சடையன், விடையன், அடையார்தம் அரண்மூன்றும்
சீரின்மல்கு மலையே சிலையாக முனிந்தான் உலகுய்யக்
காரின்மல்கு கடல் நஞ்சமதுண்ட கடவுள் இடமென்பர்
ஊரின்மல்கி வளர் செம்மையினால் உயர்வெய்தும் புகலூரே
(5)
செய்யமேனி வெளிய பொடிப் பூசுவர், சேரும் அடியார் மேல்
பையநின்ற வினை பாற்றுவர்; போற்றிசைத்தென்றும் பணிவாரை
மெய்யநின்ற பெருமான் உறையும் இடமென்பர், அருள்பேணிப்
பொய்யிலாத மனத்தார் பிரியாது பொருந்தும் புகலூரே
(6)
கழலினோசை, சிலம்பின் ஒலியோசை கலிக்கப்பயில் கானில்
குழலினோசை குறள் பாரிடம் போற்றக் குனித்தார் இடமென்பர்
விழவினோசை அடியார் மிடைவுற்று விரும்பிப் பொலிந்தெங்கும்
முழவினோசை முந்நீர் அயர்வெய்த முழங்கும் புகலூரே
(7)
வெள்ளமார்ந்து மிளிர் செஞ்சடை தன்மேல் விளங்கும் மதிசூடி
உள்ளமார்ந்த அடியார் தொழுதேத்த உகக்கும் அருள் தந்தெம்
கள்ளமார்ந்து கழியப் பழிதீர்த்த கடவுள் இடமென்பர்
புள்ளையார்ந்த வயலின் விளைவால் வளம் மல்கும் புகலூரே
(8)
தென்னிலங்கை அரையன் வரை பற்றியெடுத்தான் முடிதிண்தோள்
தன்னிலங்கு விரலால் நெரிவித்திசை கேட்டன்றருள் செய்த
மின்னிலங்கு சடையான் மடமாதொடு மேவும் இடமென்பர்
பொன்னிலங்கு மணிமாளிகை மேல் மதிதோயும் புகலூரே
(9)
நாகம்வைத்த முடியான், அடி கை தொழுதேத்தும் அடியார்கள்
ஆகம்வைத்த பெருமான் பிரமன்னொடு மாலும் தொழுதேத்த
ஏகம்வைத்த எரியாய் மிகஓங்கிய எம்மான் இடம்போலும்
போகம்வைத்த பொழிலின் நிழலால் மதுவாரும் புகலூரே
(10)
செய் தவத்தர், மிகு தேரர்கள், சாக்கியர் செப்பில் பொருளல்லாக்
கைதவத்தர் மொழியைத் தவிர்வார்கள் கடவுள் இடம் போலும்
கொய்து பத்தர் மலரும் புனலும்கொடு தூவித் துதிசெய்து
மெய்தவத்தின் முயல்வார் உயர்வானகம் எய்தும் புகலூரே
(11)
புற்றில்வாழும் அரவம் அரையார்த்தவன் மேவும் புகலூரைக்
கற்றுநல்ல அவர் காழியுண் ஞானசம்பந்தன் தமிழ்மாலை
பற்றியென்றும் இசைபாடிய மாந்தர் பரமன் அடிசேர்ந்து
குற்றமின்றிக் குறை பாடொழியாப் புகழோங்கிப் பொலிவாரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...