திருப்புகலூர் – அப்பர் தேவாரம் (20) – (பொது):

<– திருப்புகலூர்

சரக்கறைத் திருவிருத்தம்:

(1)
விடையும் விடைப்பெரும் பாகா, என் விண்ணப்பம், வெம்மழுவாள்
படையும் படையாய, நிரைத்த பல்பூதமும் பாய்புலித் தோல்
உடையும் உடைதலை மாலையும், மாலைப் பிறையொதுங்கும்
சடையும் இருக்கும் சரக்கறையோ என்தனி நெஞ்சமே
(2)
விஞ்சத் தடவரை வெற்பா, என் விண்ணப்பம், மேலிலங்கு
சங்கக் கலனும் சரிகோவணமும் தமருகமும்
அந்திப் பிறையும் அனல்வாய்அரவும் விரவியெல்லாம்
சந்தித்திருக்கும் சரக்கறையோ என்தனி நெஞ்சமே
(3)
வீந்தார் தலைகலன் ஏந்தீ, என் விண்ணப்பம், மேலிலங்கு
சாந்தாய வெந்த தவள வெண்ணீறும் தகுணிச்சமும்
பூந்தாமரை மேனிப் புள்ளியுழை மான்அதள் புலித்தோல்
தாந்தாம் இருக்கும் சரக்கறையோ என்தனி நெஞ்சமே
(4)
வெஞ்சமர் வேழத்துரியா, என் விண்ணப்பம், மேலிலங்கு
வஞ்சமா வந்த வருபுனல் கங்கையும் வான்மதியும்
நஞ்சமா நாக நகுசிர மாலை நகுவெண்தலை
தஞ்சமா வாழும் சரக்கறையோ என்தனி நெஞ்சமே
(5)
வேலைக் கடல்நஞ்சம் உண்டாய், என் விண்ணப்பம், மேலிலங்கு
காலற் கடந்தான் இடம் கயிலாயமும், காமர் கொன்றை
மாலைப் பிறையும் அணிவாய், அரவும் விரவியெல்லாம்
சாலக் கிடக்கும் சரக்கறையோ என்தனி நெஞ்சமே
(6)
வீழிட்ட கொன்றையந்தாராய், என் விண்ணப்பம், மேலிலங்கு
சூழிட்டிருக்கு நற்சூளாமணியும் சுடலைநீறும்
ஏழிட்டிருக்கு நல்அக்கும் அரவும் என்பாமையோடும்
தாழிட்டிருக்கும் சரக்கறையோ என்தனி நெஞ்சமே
(7)
விண்டார் புரமூன்றும் எய்தாய், என் விண்ணப்பம், மேலிலங்கு
தொண்டாடிய தொண்டடிப் பொடிநீறும் தொழுது பாதம்
கண்டார்கள் கண்டிருக்கும் கயிலாயமும், காமர் கொன்றைத்
தண்தார் இருக்கும் சரக்கறையோ என்தனி நெஞ்சமே
(8)
விடுபட்டி ஏறுகந்தேறீ, என் விண்ணப்பம், மேலிலங்கு
கொடுகொட்டி கொக்கரை தக்கை குழல்தாளம் வீணைமொந்தை
வடுவிட்ட கொன்றையும் வன்னியும் மத்தமும் வாளரவும்
தடுகுட்டமாடும் சரக்கறையோ என்தனி நெஞ்சமே
(9)
வெண்திரைக் கங்கை விகிர்தா, என் விண்ணப்பம், மேலிலங்கு
கண்டிகை பூண்டு கடி சூத்திர மேல் கபாலவடம்
குண்டிகை கொக்கரை கோணல் பிறைகுறள் பூதப்படை
தண்டி வைத்திட்ட சரக்கறையோ என்தனி நெஞ்சமே
(10)
வேதித்த வெம்மழு வாளீ, என் விண்ணப்பம், மேலிலங்கு
சோதித்திருக்கும் நற்சூளாமணியும் சுடலைநீறும்
பாதிப் பிறையும் படுதலைத் துண்டமும் பாய்புலித்தோல்
சாதித்திருக்கும் சரக்கறையோ என்தனி நெஞ்சமே
(11)
விவந்தாடிய கழல்எந்தாய், என் விண்ணப்பம், மேலிலங்கு
தவந்தான் எடுக்கத் தலைபத்திறுத்தனை, தாழ்புலித்தோல்
சிவந்தாடிய பொடிநீறும் சிரமாலை சூடிநின்று
தவந்தான் இருக்கும் சரக்கறையோ என்தனி நெஞ்சமே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page