வினா விடைத் திருத்தாண்டகம்:
(1)
அண்டம் கடந்த சுவடுமுண்டோ
அனல்அங்கை ஏந்திய ஆடலுண்டோ
பண்டை எழுவர் படியும் உண்டோ
பாரிடங்கள் பலசூழப் போந்ததுண்டோ
கண்டம் இறையே கறுத்ததுண்டோ
கண்ணின்மேல் கண்ணொன்றுடையதுண்டோ
தொண்டர்கள் சூழத் தொடர்ச்சி உண்டோ
சொல்லீர்எம் பிரானாரைக் கண்டவாறே
(2)
எரிகின்ற இளஞாயிறன்ன மேனி
இலங்கிழையோர் பாலுண்டோ, வெள்ளேறுண்டோ
விரிகின்ற பொறியரவத் தழலுமுண்டோ
வேழத்தின் உரியுண்டோ, வெண்ணூல் உண்டோ
வரிநின்ற பொறியரவச் சடையுமுண்டோ
அச்சடைமேல் இளமதியம் வைத்ததுண்டோ
சொரிகின்ற புனலுண்டோ, சூலம் உண்டோ
சொல்லீர்எம் பிரானாரைக் கண்டவாறே
(3)
நிலாமாலை செஞ்சடைமேல் வைத்ததுண்டோ
நெற்றிமேல் கண்ணுண்டோ, நீறு சாந்தோ
புலால்நாறு வெள்ளெலும்பு பூண்டதுண்டோ
பூதங்கள் சூழ்ந்தனவோ, போரேறுண்டோ
கலாமாலை வேற்கண்ணாள் பாகத்துண்டோ
கார்க்கொன்றை மாலை கலந்ததுண்டோ
சுலாமாலை ஆடரவம் தோள் மேலுண்டோ
சொல்லீர்எம் பிரானாரைக் கண்டவாறே
(4)
பண்ணார்ந்த வீணை பயின்றதுண்டோ
பாரிடங்கள் பலசூழப் போந்ததுண்டோ
உண்ணா வருநஞ்சம் உண்டதுண்டோ
ஊழித்தீ அன்ன ஒளிதான் உண்டோ
கண்ணார் கழல்காலற் செற்றதுண்டோ
காமனையும் கண்ணழலால் காய்ந்ததுண்டோ
எண்ணார் திரிபுரங்கள் எய்ததுண்டோ
எவ்வகைஎம் பிரானாரைக் கண்டவாறே
(5)
நீறுடைய திருமேனி பாகமுண்டோ
நெற்றிமேல் ஒற்றைக்கண் முற்றுமுண்டோ
கூறுடைய கொடுமழுவாள் கையிலுண்டோ
கொல்புலித்தோல் உடையுண்டோ, கொண்ட வேடம்
ஆறுடைய சடையுண்டோ அரவமுண்டோ
அதனருகே பிறையுண்டோ, அளவிலாத
ஏறுடைய கொடியுண்டோ, இலயமுண்டோ
எவ்வகைஎம் பிரானாரைக் கண்டவாறே
(6)
பட்டமும் தோடுமோர் பாகம் கண்டேன்
பார்திகழப் பலிதிரிந்து போதக் கண்டேன்
கொட்டி நின்று இலயங்கள் ஆடக் கண்டேன்
குழைகாதில் பிறைசென்னி இலங்கக் கண்டேன்
கட்டங்கக் கொடிதிண்தோள் ஆடக் கண்டேன்
கனமழுவாள் வலங்கையில் இலங்கக் கண்டேன்
சிட்டனைத் திருஆலவாயில் கண்டேன்
தேவனைக் கனவில்நான் கண்டவாறே
(7)
அலைத்தோடு புனல்கங்கை சடையில் கண்டேன்
அலர்கொன்றைத் தாரணிந்தவாறு கண்டேன்
பலிக்கோடித் திரிவார் கைப்பாம்பு கண்டேன்
பழனம் புகுவாரைப் பகலே கண்டேன்
கலிக்கச்சி மேற்றளியே இருக்கக் கண்டேன்
கறைமிடறும் கண்டேன், கனலும் கண்டேன்
வலித்துடுத்த மான்தோல் அரையில் கண்டேன்
மறைவல்ல மாதவனைக் கண்டவாறே
(8)
நீறேறு திருமேனி நிகழக் கண்டேன்
நீள்சடைமேல் நிறைகங்கை ஏறக் கண்டேன்
கூறேறு கொடுமழுவாள் கொள்ளக் கண்டேன்
கொடுகொட்டி கையலகு கையில் கண்டேன்
ஆறேறு சென்னியணி மதியும் கண்டேன்
அடியார்கட்காரமுதமாகக் கண்டேன்
ஏறேறி இந்நெறியே போதக் கண்டேன்
இவ்வகையெம் பெருமானைக் கண்டவாறே
(9)
விரையுண்ட வெண்ணீறு தானுமுண்டு
வெண்தலை கையுண்டு, ஒருகை வீணையுண்டு
சுரையுண்டு, சூடும் பிறையொன்றுண்டு
சூலமும் தண்டும் சுமந்ததுண்டு
அரையுண்ட கோவண ஆடையுண்டு
வலிக்கோலும் தோலும் அழகா உண்டு
இரைஉண்டறியாத பாம்பும் உண்டு
இமையோர் பெருமான் இலாததென்னே
(10)
மைப்படிந்த கண்ணாளும் தானும் கச்சி
மயானத்தான், வார்சடையான் என்னின்அல்லான்
ஒப்புடையன் அல்லன், ஒருவன் அல்லன்
ஓரூரன் அல்லன், ஓர் உவமன் இல்லி
அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும்
அவனருளே கண்ணாகக் காணின் அல்லால்
இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன்
இவன்இறைவன் என்றெழுதிக் காட்டொணாதே
(11)
பொன்னொத்த மேனிமேல் பொடியும் கண்டேன்
புலித்தோலுடை கண்டேன், புணரத் தன்மேல்
மின்னொத்த நுண்ணிடையாள் பாகம் கண்டேன்
மிளிர்வதொரு பாம்பும் அரைமேல் கண்டேன்
அன்னத்தேர் ஊர்ந்த அரக்கன் தன்னை
அலற அடர்த்திட்ட அடியும் கண்டேன்
சின்ன மலர்க்கொன்றைக் கண்ணி கண்டேன்
சிவனைநான் சிந்தையுள் கண்டவாறே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...