திருப்புகலூர் – அப்பர் தேவாரம் (21) – (பொது):

<– திருப்புகலூர்

தனித் திருவிருத்தம்:

(1)
வெள்ளிக் குழைத்துணி போலும் கபாலத்தன் வீழ்ந்திலங்கு
வெள்ளிப் புரியன்ன வெண்புரி நூலன், விரிசடைமேல்
வெள்ளித் தகடன்ன வெண்பிறை சூடி, வெள் என்பணிந்து
வெள்ளிப் பொடிப் பவளப்புறம் பூசிய வேதியனே
(2)
உடலைத் துறந்து உலகேழும் கடந்து, உலவாத துன்பக்
கடலைக் கடந்துய்யப் போயிடலாகும், கனக வண்ணப்
படலைச் சடைப் பரவைத்திரைக் கங்கைப் பனிப்பிறை வெண்
சுடலைப் பொடிக் கடவுட்கு அடிமைக்கண் துணி நெஞ்சமே
(3)
முன்னே உரைத்தால் முகமனே ஒக்கும், இம்மூவுலகுக்கு
அன்னையும் அத்தனும் ஆவாய் அழல்வணா நீயலையோ
உன்னை நினைந்தே கழியுமென் ஆவி, கழிந்ததற்பின்
என்னை மறக்கப் பெறாய், எம்பிரான் உன்னை வேண்டியதே
(4)
நின்னை எப்போது நினையவொட்டாய், நீ நினையப் புகில்
பின்னை அப்போதே மறப்பித்துப் பேர்த்தொன்று நாடுவித்தி
உன்னை எப்போது மறந்திட்டு உனக்கினிதா இருக்கும்
என்னை ஒப்பார் உளரோ சொல்லு வாழி இறையவனே
(5)
முழுத்தழல் மேனித் தவளப் பொடியன், கனகக் குன்றத்து
எழில்பெரும் சோதியை, எங்கள் பிரானை இகழ்திர் கண்டீர்
தொழப்படும் தேவர் தொழப்படுவானைத், தொழுத பின்னைத்
தொழப்படும் தேவர் தம்மால் தொழுவிக்கும் தன்தொண்டரையே
(6)
விண்ணகத்தான், மிக்க வேதத்துளான், விரி நீருடுத்த
மண்ணகத்தான், திருமால்அகத்தான், மருவற்கினிய
பண்ணகத்தான், பத்தர் சித்தத்துளான், பழ நாயடியேன்
கண்ணகத்தான், மனத்தான் சென்னியான் எம் கறைக்கண்டன்
(7)
பெருங்கடல் மூடிப் பிரளயம் கொண்டு பிரமனும்போய்
இருங்கடல் மூடிஇறக்கும் இறந்தான் களேபரமும்
கருங்கடல் வண்ணன் களேபரமும் கொண்டு கங்காளராய்
வருங்கடல் மீளநின்று எம்இறை நல்வீணை வாசிக்குமே
(8)
வானம் துளங்கிலென், மண் கம்பமாகிலென், மால்வரையும்
தானம் துளங்கித் தலைதடுமாறிலென், தண்கடலும்
மீனம் படிலென், விரிசுடர் வீழிலென், வேலைநஞ்சுண்டு
ஊனமொன்றில்லா ஒருவனுக்கு ஆட்பட்ட உத்தமர்க்கே
(9)
சிவனெனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி எம்மான்
அவன்எனை ஆட்கொண்டு அளித்திடுமாகில், அவன்தனை யான்
பவனெனும் நாமம் பிடித்துத் திரிந்து பன்னாள் அழைத்தால்
இவன்எனைப் பன்னாள் அழைப்பொழியான் என்றெதிர்ப்படுமே
(10)
என்னை ஒப்பார் உன்னை எங்ஙனம் காண்பர் இகலிஉன்னை
நின்னை ஒப்பார் நின்னைக் காணும் படித்தன்று நின்பெருமை
பொன்னை ஒப்பாரித்தழலை வளாவிச் செம்மானம் செற்று
மின்னை ஒப்பார மிளிரும் சடைக்கற்றை வேதியனே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page