திருப்புகலூர் – அப்பர் தேவாரம் (1):

<– திருப்புகலூர்

(1)
செய்யர், வெண்ணூலர், கருமான் மறிதுள்ளும்
கையர், கனைகழல் கட்டிய காலினர்
மெய்யர் மெய்நின்றவர்க்கு, அல்லாதவர்க்கென்றும்
பொய்யர் புகலூர்ப் புரிசடையாரே
(2)
மேகநல் ஊர்தியர், மின்போன் மிளிர்சடைப்
பாகமதி நுதலாளை ஒர் பாகத்தர்
நாக வளையினர், நாக உடையினர்
போகர் புகலூர்ப் புரிசடையாரே
(3)
பெருந்தாழ் சடைமுடி மேல் பிறைசூடிக்
கருந்தாழ் குழலியும் தாமும் கலந்து
திருந்தா மனமுடையார் திறத்தென்றும்
பொருந்தார் புகலூர்ப் புரிசடையாரே
(4)
அக்காரணி வடம் ஆகத்தர், நாகத்தர்
நக்கார் இளமதிக் கண்ணியர், நாள்தொறும்
உக்கார் தலைபிடித்துண் பலிக்கூர்தொறும்
புக்கார் புகலூர்ப் புரிசடையாரே
(5)
ஆர்த்தார் உயிரடும் அந்தகன் தன்னுடல்
பேர்த்தார், பிறைநுதல் பெண்ணினல்லாள் உட்கக்
கூர்த்தார் மருப்பில் கொலைக் களிற்றீருரி
போர்த்தார், புகலூர்ப் புரிசடையாரே
(6)
தூமன் சுறவம் துதைந்த கொடியுடைக்
காமன் கணைவலம் காய்ந்த முக்கண்ணினர்
சேம நெறியினர், சீரை உடையவர்
பூமன் புகலூர்ப் புரிசடையாரே
(7)
உதைத்தார் மறலி உருளவொர் காலால்
சிதைத்தார் திகழ்தக்கன் செய்தநல் வேள்வி
பதைத்தார் சிரங்கரம் கொண்டு, வெய்யோன் கண்
புதைத்தார் புகலூர்ப் புரிசடையாரே
(8)
கரிந்தார் தலையர் கடிமதில் மூன்றும்
தெரிந்தார் கணைகள் செழுந்தழல் உண்ண
விரிந்தார் சடைமேல் விரிபுனல் கங்கை
புரிந்தார் புகலூர்ப் புரிசடையாரே
(9)
ஈண்டார் அழலின் இருவரும் கைதொழ
நீண்டார், நெடுந்தடுமாற்ற நிலையஞ்ச
மாண்டார்தம் என்பு மலர்க்கொன்றை மாலையும்
பூண்டார் புகலூர் புரிசடையாரே
(10)
கறுத்தார் மணிகண்டம், கால் விரலூன்றி
இறுத்தார் இலங்கையர் கோன் முடிபத்தும்
அறுத்தார் புலனைந்தும், ஆயிழை பாகம்
பொறுத்தார் புகலூர்ப் புரிசடையாரே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page