திருப்புகலூர் – அப்பர் தேவாரம் (3):

<– திருப்புகலூர்

(1)
துன்னக் கோவணச் சுண்ண வெண்ணீறணி
பொன் நக்கன்ன சடைப் புகலூரரோ
மின் நக்கன்ன வெண்திங்களைப் பாம்புடன்
என்னுக்கோ உடன் வைத்திட்டிருப்பதே
(2)
இரைக்கும் பாம்பும் எறிதரு திங்களும்
நுரைக்கும் கங்கையும் நுண்ணிய செஞ்சடைப்
புரைப்பிலாத பொழில் புகலூரரை
உரைக்குமா சொல்லி ஒள்வளை சோருமே
(3)
ஊசலாம் அரவல்குல் என்சோர் குழல்
ஏலாம் பழி தந்தெழில் கொண்டனர்
ஓ சொலாய் மகளே முறையோ என்று
பூசல் நாமிடுதும் புகலூரர்க்கே
(4)
மின்னின் நேரிடையாள் உமை பங்கனைத்
தன்னை நேரொப்பிலாத தலைவனைப்
புன்னைக் கானல் பொழில் புகலூரனை
என்னுளாக வைத்து இன்புற்றிருப்பனே
(5)
விண்ணினார் மதிசூடிய வேந்தனை
எண்ணி நாமங்களோதி எழுத்தஞ்சும்
கண்ணினால் கழல் காண்பிடம் ஏதெனில்
புண்ணியன் புகலூரும் என் நெஞ்சுமே
(6)
அண்ட வாணர் அமுதுண நஞ்சுண்டு
பண்டு நான்மறை ஓதிய பாடலன்
தொண்டராகித் தொழுது மதிப்பவர்
புண்டரீகத்துளார் புகலூரரே
(7)
தத்துவம் தலை கண்டறிவார் இலைத்
தத்துவம் தலை கண்டவர் கண்டிலர்
தத்துவம் தலை நின்றவர்க்ல்லது
தத்துவன் அலன் தண்புகலூரனே
(8)
பெருங்கையாகிப் பிளிறி வருவதோர்
கருங்கை யானைக் களிற்றுரி போர்த்தவர்
வருங்கை யானை மதகளிறஞ்சினைப்
பொருங்கை யானை கண்டீர் புகலூரரே
(9)
பொன்னொத்த நிறத்தானும் பொருகடல்
தன்னொத்த நிறத்தானும் அறிகிலாப்
புன்னைத் தாது பொழில் புகலூரரை
என்அத்தா என என்னிடர் தீருமே
(10)
மத்தனாய் மதியாது மலைதனை
எத்தினான் திரள்தோள் முடி பத்திற
ஒத்தினான் விரலால் ஒருங்கேத்தலும்
பொத்தினான் புகலூரைத் தொழுமினே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page