(1)
இருநிலனாய்த் தீயாகி நீருமாகி
இயமானனாய் எறியும் காற்றுமாகி
அருநிலைய திங்களாய் ஞாயிறாகி
ஆகாசமாய் அட்ட மூர்த்தியாகிப்
பெருநலமும் குற்றமும் பெண்ணும் ஆணும்
பிறருருவும் தம்முருவும் தாமேயாகி
நெருநலையாய் இன்றாகி நாளையாகி
நிமிர்புன் சடையடிகள் நின்றவாறே
(2)
மண்ணாகி விண்ணாகி மலையுமாகி
வயிரமுமாய் மாணிக்கம் தானேயாகிக்
கண்ணாகிக் கண்ணுக்கோர் மணியுமாகிக்
கலையாகிக் கலைஞானம் தானேயாகிப்
பெண்ணாகிப் பெண்ணுக்கோர் ஆணுமாகிப்
பிரளயத்துக்கப்பாலோர் அண்டமாகி
எண்ணாகி எண்ணுக்கோர் எழுத்துமாகி
எழுஞ்சுடராய் எம்அடிகள் நின்றவாறே
(3)
கல்லாகிக் களறாகிக் கானுமாகிக்
காவிரியாய்க் கால்ஆறாய்க் கழியுமாகிப்
புல்லாகிப் புதலாகிப் பூடுமாகிப்
புரமாகிப் புரமூன்றும் கெடுத்தானாகிச்
சொல்லாகிச் சொல்லுக்கோர் பொருளுமாகிச்
சுலாவாகிச் சுலாவுக்கோர் சூழலாகி
நெல்லாகி நிலனாகி நீருமாகி
நெடுஞ்சுடராய் நிமிர்ந்தடிகள் நின்றவாறே
(4)
காற்றாகிக் கார்முகிலாய்க் காலம் மூன்றாய்க்
கனவாகி நனவாகிக் கங்குலாகிக்
கூற்றாகிக் கூற்றுதைத்த கொல் களிறுமாகிக்
குரைகடலாய்க் குரைகடற்கோர் கோமானுமாய்
நீற்றானாய் நீறேற்ற மேனியாகி
நீள்விசும்பாய் நீள்விசும்பின் உச்சியாகி
ஏற்றானாய் ஏறூர்ந்த செல்வனாகி
எழுஞ்சுடராய் எம்அடிகள் நின்றவாறே
(5)
தீயாகி நீராகித் திண்மையாகித்
திசையாகி அத்திசைக்கோர் தெய்வமாகித்
தாயாகித் தந்தையாய்ச் சார்வுமாகித்
தாரகையும் ஞாயிறும் தண் மதியுமாகிக்
காயாகிப் பழமாகிப் பழத்தில் நின்ற
இரதங்கள் நுகர்வானும் தானேயாகி
நீயாகி நானாகி நேர்மையாகி
நெடுஞ்சுடராய் நிமிர்ந்தடிகள் நின்றவாறே
(6)
அங்கமா ஆதியாய் வேதமாகி
அருமறையோடு ஐம்பூதம் தானேயாகிப்
பங்கமாய்ப் பலசொல்லும் தானேயாகிப்
பால்மதியோடு ஆதியாய்ப் பான்மையாகிக்
கங்கையாய்க் காவிரியாய்க் கன்னியாகிக்
கடலாகி மலையாகிக் கழியுமாகி
எங்குமாய் ஏறூர்ந்த செல்வனாகி
எழுஞ்சுடராய் எம்அடிகள் நின்றவாறே
(7)
மாதா பிதாவாகி மக்களாகி
மறிகடலும் மால்விசும்பும் தானேயாகிக்
கோதாவிரியாய்க் குமரியாகிக்
கொல்புலித்தோல் ஆடைக் குழகனாகிப்
போதாய மலர்கொண்டு போற்றி நின்று
புனைவார் பிறப்பறுக்கும் புனிதனாகி
யாதானும் என நினைந்தார்க்கெளிதேயாகி
அழல் வண்ண வண்ணர்தாம் நின்றவாறே
(8)
ஆவாகி ஆவினில் ஐந்துமாகி
அறிவாகி அழலாகி அவியுமாகி
நாவாகி நாவுக்கோர் உரையுமாகி
நாதனாய் வேதத்தின் உள்ளோனாகிப்
பூவாகிப் பூவுக்கோர் நாற்றமாகிப்
புக்குளால் வாசமாய் நின்றானாகித்
தேவாகித் தேவர் முதலுமாகிச்
செழுஞ்சுடராய்ச் சென்றடிகள் நின்றவாறே
(9)
நீராகி நீளகலம் தானேயாகி
நிழலாகி நீள்விசும்பின் உச்சியாகிப்
பேராகிப் பேருக்கோர் பெருமையாகிப்
பெருமதில்கள் மூன்றினையும் எய்தானாகி
ஆரேனும் தன்னடைந்தோர் தம்மையெல்லாம்
ஆட்கொள்ளவல்ல எம் ஈசனார்தாம்
பாராகிப் பண்ணாகிப் பாடலாகிப்
பரஞ்சுடராய்ச் சென்றடிகள் நின்றவாறே
(10)
மாலாகி நான்முகனாய் மாபூதமாய்
மருக்கமாய் அருக்கமாய் மகிழ்வுமாகிப்
பாலாகி எண்திசைக்கும் எல்லையாகிப்
பரப்பாகிப் பரலோகம் தானேயாகிப்
பூலோக புவலோக சுவலோகமாய்ப்
பூதங்களாய்ப் புராணன் தானேயாகி
ஏலாதனவெல்லாம் ஏல்விப்பானாய்
எழுஞ்சுடராய் எம்அடிகள் நின்றவாறே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...