திருப்புகலூர் – அப்பர் தேவாரம் (9)- (பொது):

<– திருப்புகலூர்

குறைந்த நேரிசை:

(1)
வென்றிலேன் புலன்கள் ஐந்தும், வென்றவர் வளாகம் தன்னுள்
சென்றிலேன், ஆதலாலே செந்நெறி அதற்கும் சேயேன்
நின்றுளே துளும்புகின்றேன், ஈசனே ஈசனேயோ
இன்றுளேன் நாளை இல்லேன் என்செய்வான் தோன்றினேனே
(2)
கற்றிலேன் கலைகள் ஞானம், கற்றவர் தங்களோடும்
உற்றிலேன், ஆதலாலே உணர்வுக்கும் சேயனானேன்
பெற்றிலேன் பெருந்தடங்கண் பேதைமார் தமக்கும் பொல்லேன்
எற்றுளேன் இறைவனே நான் என்செய்வான் தோன்றினேனே
(3)
மாட்டினேன் மனத்தை முன்னே மறுமையை உணர மாட்டேன்
மூட்டிநான் முன்னை நாளே முதல்வனே வணங்க மாட்டேன்
பாட்டினாய் போல நின்று பற்றதாம் பாவம் தன்னை
ஈட்டினேன் களைய மாட்டேன் என்செய்வான் தோன்றினேனே
(4)
கரைக் கடந்தோதமேறும் கடல்விடம் உண்ட கண்டன்
உரைக் கடந்தோது நீர்மை உணர்ந்திலேன் ஆதலாலே
அரைக் கிடந்தசையும் நாகம் அசைப்பனே இன்ப வாழ்க்கைக்கு
இரைக் கடைந்துருகுகின்றேன் என்செய்வான் தோன்றினேனே
(5)
செம்மை வெண்ணீறு பூசும் சிவனவன் தேவதேவன்
வெம்மைநோய் வினைகள் தீர்க்கும் விகிர்தனுக்கார்வமெய்தி
அம்மை நின்றடிமை செய்யா வடிவிலா முடிவில் வாழ்க்கைக்கு
இம்மை நின்றுருகுகின்றேன் என்செய்வான் தோன்றினேனே
(6)
பேச்சொடு பேச்சுக்கெல்லாம் பிறர்தமைப் புறமே பேசக்
கூச்சிலேன் ஆதலாலே கொடுமையை விடுமாறோரேன்
நாச்சொலி நாளும் மூர்த்தி நன்மையை உணர மாட்டேன்
ஏச்சுளே நின்று மெய்யே என்செய்வான் தோன்றினேனே
(7)
தேசனைத் தேசமாகும் திருமாலோர் பங்கன் தன்னைப்
பூசனைப் புனிதன் தன்னைப் புணரும் புண்டரிகத்தானை
நேசனை நெருப்பன் தன்னை நிவஞ்சகத்தகன்ற செம்மை
ஈசனை அறிய மாட்டேன் என்செய்வான் தோன்றினேனே
(8)
விளைக்கின்ற வினையை நோக்கி வெண்மயிர் விரவி மேலும்
முளைக்கின்ற வினையைப் போக முயல்கிலேன் இயல வெள்ளம்
திளைக்கின்ற முடியினான்தன் திருவடி பரவ மாட்டா
திளைக்கின்றேன் இருமியூன்றி என்செய்வான் தோன்றினேனே
(9)
விளைவறிவு இலாமையாலே வேதனைக் குழியிலாழ்ந்து
களைகணும் இல்லேன் எந்தாய் காமரம் கற்றுமில்லேன்
தளையவிழ் கோதை நல்லார் தங்களோடின்பம் எய்த
இளையனும் அல்லேன் எந்தாய் என்செய்வான் தோன்றினேனே
(10)
வெட்டன உடையனாகி வீரத்தால் மலையெடுத்த
துட்டனைத் துட்டுத் தீர்த்துச் சுவைபடக் கீதம் கேட்ட
அட்டமா மூர்த்தியாய ஆதியை ஓதி நாளும்
எட்டனை எட்ட மாட்டேன் என்செய்வான் தோன்றினேனே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page