திருப்புகலூர் – அப்பர் தேவாரம் (17) – (பொது):

<– திருப்புகலூர்

பாவநாசத் திருப்பதிகம்:

(1)
பற்றற்றார் சேர் பழம்பதியைப், பாசூர் நிலாய பவளத்தைச்
சிற்றம்பலத்தெம் திகழ் கனியைத், தீண்டற்கரிய திருவுருவை
வெற்றியூரில் விரிசுடரை, விமலர் கோனைத், திரைசூழ்ந்த
ஒற்றியூர்எம் உத்தமனை உள்ளத்துள்ளே வைத்தேனே
(2)
ஆனைக்காவில் அணங்கினை, ஆரூர் நிலாய அம்மானைக்
கானப்பேரூர்க் கட்டியைக், கானூர் முளைத்த கரும்பினை
வானப் பேரார் வந்தேத்தும், வாய்மூர் வாழும் வலம்புரியை
மானக் கயிலை மழகளிற்றை, மதியைச் சுடரை மறவேனே
(3)
மதியம் கண்ணி ஞாயிற்றை, மயக்கம் தீர்க்கும் மருந்தினை
அதிகை மூதூர் அரசினை, ஐயாறமர்ந்த ஐயனை
விதியைப் புகழை, வானோர்கள் வேண்டித்தேடும் விளக்கினை
நெதியை, ஞானக் கொழுந்தினை, நினைந்தேற்கு உள்ளம் நிறைந்ததே
(4)
புறம்பயத்தெம் முத்தினைப், புகலூர் இலங்கு பொன்னினை
உறந்தையோங்கு சிராப்பள்ளி, உலகம் விளக்கு ஞாயிற்றைக்
கறங்கும் அருவிக் கழுக்குன்றில் காண்பார் காணும்  கண்ணானை
அறஞ்சூழ் அதிகை வீரட்டத்தரிமான் ஏற்றை அடைந்தேனே
(5)
கோலக்காவில் குருமணியைக், குடமூக்குறையும் விடமுணியை
ஆலங்காட்டில் அந்தேனை, அமரர் சென்னியாய், மலரைப்
பாலில் திகழும் பைங்கனியைப், பராய்த்துறை எம் பசும்பொன்னைச்
சூலத்தானைத், துணையிலியைத், தோளைக் குளிரத் தொழுதேனே
(6)
மருகல்உறை மாணிக்கத்தை, வலஞ்சுழியின் மாலையைக்
கருகாவூரில் கற்பகத்தைக், காண்டற்கரிய கதிரொளியைப்
பெருவேளூர்எம் பிறப்பிலியைப் பேணுவார்கள் பிரிவரிய
திருவாஞ்சியத்தெம் செல்வனைச் சிந்தையுள்ளே வைத்தேனே
(7)
எழிலார் இராச சிங்கத்தை, இராமேச்சுரத்தெம் எழிலேற்றைக்
குழலார் கோதை வரைமார்பில் குற்றாலத்தெம் கூத்தனை
நிழலார் சோலை நெடுங்களத்து நிலாய நித்த மணாளனை
அழலார் வண்ணத்தம்மானை அன்பில் அணைத்து வைத்தேனே
(8)
மாலைத் தோன்றும் வளர்மதியை, மறைக்காட்டுறையும் மணாளனை
ஆலைக் கரும்பினில் சாற்றை, அண்ணாமலைஎம் அண்ணலைச்
சோலைத் துருத்தி நகர்மேய சுடரில் திகழும் துளக்கிலியை
மேலை வானோர் பெருமானை, விருப்பால் விழுங்கி இட்டேனே
(9)
சோற்றுத்துறைஎம் சோதியைத் துருத்தி மேய தூமணியை
ஆற்றில் பழனத்தம்மானை, ஆலவாய்எம் அருமணியை
நீற்றில் பொலிந்த நிமிர்திண்தோள் நெய்த்தானத்தெம் நிலாச்சுடரைத்
தோற்றக் கடலை அடலேற்றைத் தோளைக் குளிரத் தொழுதேனே
(10)
புத்தூர் உறையும் புனிதனைப், பூவணத்தெம் போரேற்றை
வித்தாய் மிழலை முளைத்தானை, வேள்விக்குடிஎம் வேதியனைப்
பொய்த்தார் புரமூன்றெரித்தானைப், பொதியின் மேய புராணனை
வைத்தேன் எந்தன் மனத்துள்ளே மாத்தூர் மேய மருந்தையே
(11)
முந்தித் தானே முளைத்தானை, மூரி வெள்ளேரூர்ந்தானை
அந்திச் செவ்வான் படியானை, அரக்கன் ஆற்றல் அழித்தானைச்
சிந்தை வெள்ளப் புனலாட்டிச் செஞ்சொல் மாலை அடிச்சேர்த்தி
எந்தை பெம்மான் என்எம்மான் என்பார் பாவநாசமே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page