திருப்புகலூர் – அப்பர் தேவாரம் (15) – (பொது):

<– திருப்புகலூர்

ஆருயிர்த் திருவிருத்தம்:

(1)
எட்டாம் திசைக்கும் இருதிசைக்கும் இறைவா முறையென்று
இட்டார் அமரர் வெம்பூசலெனக் கேட்டு எரிவிழியா
ஒட்டாக் கயவர் திரிபுரம் மூன்றையும் ஓரம்பினால்
அட்டான் அடிநிழல் கீழதன்றோ எந்தன் ஆருயிரே
(2)
பேழ்வா அரவின் அரைக்கமர்ந்தேறிப் பிறங்கிலங்கு
தேய்வாய் இளம்பிறை செஞ்சடை மேல்வைத்த தேவர்பிரான்
மூவான் இளகான் முழுஉலகோடு மண் விண்ணுமற்றும்
ஆவான் அடிநிழல் கீழதன்றோ எந்தன் ஆருயிரே
(3)
தரியா வெகுளியனாய்த் தக்கன் வேள்வி தகர்த்துகந்த
எரியார் இலங்கிய சூலத்தினான், இமையாத முக்கண்
பெரியான், பெரியார் பிறப்பறுப்பான், என்றும் தன்பிறப்பை
அரியான், அடிநிழல் கீழதன்றோ எந்தன் ஆருயிரே
(4)
வடிவுடை வாள்நெடுங்கண் உமையாளைஒர் பால் மகிழ்ந்து
வெடிகொள் அரவொடு வேங்கை அதள்கொண்டு மேல்மருவிப்
பொடிகொள் அகலத்துப் பொன் பிதிர்ந்தன்ன பைங் கொன்றையந்தார்
அடிகள் அடிநிழல் கீழதன்றோ எந்தன் ஆருயிரே
(5)
பொறுத்தான் அமரர்க்கமுதருளி, நஞ்சமுண்டு கண்டம்
கறுத்தான் கறுப்பழகா உடையான், கங்கை செஞ்சடைமேல்
செறுத்தான், தனஞ்சயன் சேணார் அகலம் கணையொன்றினால்
அறுத்தான், அடிநிழல் கீழதன்றோ எந்தன் ஆருயிரே
(6)
காய்ந்தான் செறற்கரியான் என்று காலனைக் காலொன்றினால்
பாய்ந்தான், பணைமதில் மூன்றும் கணையென்னும் ஒள்ளழலால்
மேய்ந்தான், வியனுலகேழும் விளங்க விழுமியநூல்
ஆய்ந்தான், அடிநிழல் கீழதன்றோ எந்தன் ஆருயிரே
(7)
உளைந்தான் செறுதற்கரியான் தலையை உகிரொன்றினால்
களைந்தான், அதனை நிறைய நெடுமால் கணார் குருதி
வளைந்தான், ஒருவிரலின்னொடு வீழ்வித்துச் சாம்பர் வெண்ணீறு
அளைந்தான், அடிநிழல் கீழதன்றோ எந்தன் ஆருயிரே
(8)
முந்தி வட்டத்திடைப் பட்டதெல்லாம் முடிவேந்தர் தங்கள்
பந்தி வட்டத்திடைப் பட்டு அலைப்புண்பதற்கு அஞ்சிக்கொல்லோ
நந்தி வட்டம் நறுமாமலர்க் கொன்றையும் நக்கசென்னி
அந்தி வட்டத்தொளியான் அடிச் சேர்ந்ததென் ஆருயிரே
(9)
மிகத்தான் பெரியதொர் வேங்கை அதள்கொண்டு மெய்ம்மருவி
அகத்தான் வெருவ நல்லாளை நடுக்குறுப்பான், வரும்பொன்
முகத்தால் குளிர்ந்திருந்துள்ளத்தினால் உகப்பான், இசைந்த
அகத்தான் அடிநிழல் கீழதன்றோ எந்தன் ஆருயிரே
(10)
பைம்மாண் அரவல்குல் பங்கயச் சீறடியாள் வெருவக்
கைம்மா வரிசிலைக் காமனை அட்ட கடவுள், முக்கண்
எம்மான் இவனென்று இருவருமேத்த எரிநிமிர்ந்த
அம்மான் அடிநிழல் கீழதன்றோ எந்தன் ஆருயிரே
(11)
பழகவொர் ஊர்தி அரன், பைங்கண் பாரிடம் பாணிசெய்யக்
குழலு முழவொடு மாநடமாடி, உயரிலங்கைக்
கிழவன் இருபது தோளும் ஒருவிரலால் இறுத்த
அழகன், அடிநிழல் கீழதன்றோ எந்தன் ஆருயிரே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page