திருப்புகலூர் – அப்பர் தேவாரம் (16) – (பொது):

<– திருப்புகலூர்

(1)
பருவரை ஒன்றுசுற்றி அரவம்கைவிட்ட இமையோர் இரிந்து பயமாய்த்
திருநெடுமால் நிறத்தை அடுவான் விசும்பு சுடுவானெழுந்து விசைபோய்ப்
பெருகிட, மற்றிதற்கொர் பிதிகாரமொன்றை அருளாய் பிரானே எனலும்
அருள்கொடு மாவிடத்தை எரியாமல்உண்ட அவன் அண்டரண்டர் அரசே
(2)
நிரவொலி வெள்ளமண்டி நெடுஅண்டம்மூட, நிலநின்று தம்பம் அதுஅப்
பரமொரு தெய்வமெய்த, இதுஒப்பதில்லை இருபாலும் நின்று பணியப்
பிரமனும் மாலும் மேலை முடியோடு பாதம்அறியாமை நின்ற பெரியோன்
பரமுதலாய தேவர் சிவனாய மூர்த்தி அவனா நமக்கொர் சரணே
(3)
காலமும் நாள்கள்ஊழி படையாமுன் ஏகஉருவாகி, மூவர்உருவில்
சாலவுமாகி, மிக்க சமயங்கள்ஆறின் உருவாகி நின்ற தழலோன்
ஞாலமும் மேலை விண்ணோடு உலகேழும்உண்டு குறளாய் ஒராலின்இலைமேல்
பாலனும் ஆயவற்கொர் பரமாயமூர்த்தி அவனா நமக்கொர் சரணே
(4)
நீடுயர் விண்ணுமண்ணும் நெடுவேலை குன்றொடு உலகேழும் எங்கும் நலியச்
சூடிய கையராகி இமையோர் கணங்கள் துதியோதி நின்று தொழலும்
ஓடிய தாரகன்தன் உடலம் பிளந்தும் ஒழியாத கோபமொழிய
ஆடிய மாநடத்தெ அனலாடி பாதம் அவையா நமக்கொர் சரணே
(5)
நிலைவலி இன்றியெங்கும் நிலனோடுவிண்ணும் நிதனம் செய்தோடு புரமூன்று
அலைநலி அஞ்சியோடி அரியோடுதேவர் ஆரணம்புகத் தனருளால்
கொலைநலி வாளிமூள அரவங்கை நாணும், அனல்பாயநீறு புரமா
மலைசிலை கையில்ஒல்க வளைவித்த வள்ளல் அவனா நமக்கொர் சரணே
(6)
நீலநன்மேனி செங்கண் வளை வெள்ளெயிற்றன் எரிகேசன் நேடிவருநாள்
காலைநன் மாலைகொண்டு வழிபாடுசெய்யும் அளவின்கண் வந்து குறுகிப்
பாலனை ஓடஓடப் பயமெய்துவித்த உயிர் வவ்வு பாசம் விடும்அக்
காலனை வீடுசெய்த கழல்போலும் அண்டர் தொழுதோது சூடு கழலே
(7)
உயர்தவ மிக்க தக்கன் உயர்வேள்வி தன்னில் அவியுண்ண வந்த இமையோர்
பயமுறும் எச்சன்அங்கி மதியோனும் உற்றபடி கண்டுநின்று பயமாய்
அயனொடு மாலும் எங்கள் அறியாமை ஆதி கமி என்றிறைஞ்சி அகல
சயமுறு தன்மைகண்ட தழல்வண்ணன் எந்தை கழல்கண்டு கொள்கை கடனே
(8)
நலமலி மங்கைநங்கை விளையாடிஓடி நயனத்தலங்கள் கரமா
உலகினை ஏழுமுற்றும் இருள்மூடமூட இருளோட நெற்றி ஒருகண்
அலர்தர வஞ்சி மற்றை நயனங்கைவிட்டு மடவாள் இறைஞ்ச, மதிபோல்
அலர்தரு சோதிபோல அலர்வித்த முக்கண் அவனா நமக்கொர் சரணே
(9)
கழைபடு காடுதென்றல் குயில்கூவ, அஞ்சு கணையோன் அணைந்து புகலும்
மழைவடி வண்ணன் எண்ணி மகவோனை விட்ட மலரான தொட்ட மதனன்
எழில்பொடி வெந்துவீழ, இமையோர் கணங்கள் எரிஎன்றிறைஞ்சி அகலத்
தழல்படு நெற்றியொற்றை நயனஞ்சிவந்த தழல்வண்ணன் எந்தை சரணே
(10)
தடமலர் ஆயிரங்கள் குறைவொன்றதாக நிறைவென்று தன்கண் அதனால்
உடன் வழிபாடுசெய்த திருமாலை எந்தை பெருமான்உகந்து மிகவும்
சுடரடியால் முயன்று சுழல்வித்து அரக்கன் இதயம் பிளந்த கொடுமை
அடல்வலி ஆழியாழி அவனுக்களித்த அவனா நமக்கொர் சரணே
(11)
கடுகிய தேர்செலாது கயிலாயமீது கருதேல் உன்வீரம் ஒழிநீ
முடுகுவதன்று தன்மம் எனநின்றுபாகன் மொழிவானை நன்று முனியா
விடுவிடு என்றுசென்று விரைவுற்ற அரக்கன் வரையுற்றெடுக்க முடிதோள்
நெடுநெடு இற்றுவீழ விரலுற்ற பாதம் நினைவுற்றது எந்தன் மனனே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page