(1)
எண்ணுகேன் என்சொல்லி எண்ணுகேனோ
எம்பெருமான் திருவடியே எண்ணினல்லால்
கண்ணிலேன் மற்றோர் களைகண் இல்லேன்
கழலடியே கைதொழுது காணினல்லால்
ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்
ஒக்க அடைக்கும் போதுணர மாட்டேன்
புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணியனே
(2)
அங்கமே பூண்டாய், அனலாடினாய்
ஆதிரையாய் ஆல்நிழலாய் ஆனேறூர்ந்தாய்
பங்கமொன்றில்லாத படர் சடையினாய்
பாம்பொடு திங்கள் பகை தீர்த்தாண்டாய்
சங்கையொன்றின்றியே தேவர் வேண்டச்
சமுத்திரத்தின் நஞ்சுண்டு சாவா மூவாச்
சிங்கமே உன்னடிக்கே போதுகின்றேன்
திருப்புகலூர் மேவிய தேவதேவே
(3)
பையரவக் கச்சையாய், பால் வெண்ணீற்றாய்
பளிக்குக் குழையினாய், பண்ணார் இன்சொல்
மைவிரவு கண்ணாளைப் பாகம் கொண்டாய்
மான்மறிகை ஏந்தினாய், வஞ்சக் கள்வர்
ஐவரையும் என்மேல் தரவறுத்தாய்
அவர்வேண்டும் காரியம் இங்காவதில்லை
பொய்யுரையாது உன்னடிக்கே போதுகின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணியனே
(4)
தெருளாதார் மூவெயிலும் தீயில் வேவச்
சிலைவளைத்துச் செங்கணையால் செற்ற தேவே
மருளாதார் தம்மனத்தில் வாட்டம் தீர்ப்பாய்
மருந்தாய்ப் பிணிதீர்ப்பாய் வானோர்க்கென்றும்
அருளாகி ஆதியாய் வேதமாகி
அலர்மேலான் நீர்மேலான் ஆய்ந்தும் காணாப்
பொருளாவாய் உன்னடிக்கே போதுகின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணியனே
(5)
நீரேறு செஞ்சடைமேல் நிலாவெண்திங்கள்
நீங்காமை வைத்துகந்த நீதியானே
பாரேறு படுதலையில் பலிகொள்வானே
பண்டனங்கற் காய்ந்தானே பாவ நாசா
காரேறு முகிலனைய கண்டத்தானே
கருங்கைக் களிற்றுரிவை கதறப் போர்த்த
போரேறே உன்னடிக்கே போதுகின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணியனே
(6)
விரிசடையாய் வேதியனே, வேத கீதா
விரிபொழில்சூழ் வெண்காட்டாய், மீயச்சூராய்
திரிபுரங்கள் எரிசெய்த தேவதேவே
திருவாரூர்த் திருமூலட்டானம் மேயாய்
மருவினியார் மனத்துளாய், மாகாளத்தாய்
வலஞ்சுழியாய், மாமறைக்காட்டெந்தாய் என்றும்
புரிசடையாய் உன்னடிக்கே போதுகின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணியனே
(7)
தேவார்ந்த தேவனைத் தேவரெல்லாம்
திருவடிமேல் அலரிட்டுத் தேடி நின்று
நாவார்ந்த மறைபாடி நட்டம் ஆடி
நான்முகனும் இந்திரனும் மாலும் போற்றக்
காவார்ந்த பொழிற்சோலைக் கானப்பேராய்
கழுக்குன்றத்துச்சியாய், கடவுளேநின்
பூவார்ந்த பொன்னடிக்கே போதுகின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணியனே
(8)
நெய்யாடி நின்மலனே நீலகண்டா
நிறைவுடையாய் மறைவல்லாய் நீதியானே
மையாடு கண்மடவாள் பாகத்தானே
மான்தோல் உடையா மகிழ்ந்து நின்றாய்
கொய்யாடு கூவிளம் கொன்றை மாலை
கொண்டடியேன் நானிட்டுக் கூறி நின்று
பொய்யாத சேவடிக்கே போதுகின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணியனே
(9)
துன்னஞ்சேர் கோவணத்தாய் தூய நீற்றாய்
துதைந்திலங்கு வெண்மழுவாள் கையிலேந்தித்
தன்அணையும் தண்மதியும் பாம்பும் நீரும்
சடைமுடிமேல் வைத்துகந்த தன்மையானே
அன்ன நடைமடவாள் பாகத்தானே
அக்காரம் பூண்டானே ஆதியானே
பொன்னங்கழலடிக்கே போதுகின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணியனே
(10)
ஒருவனையும் அல்லாது உணராதுள்ளம்
உணர்ச்சித் தடுமாற்றத்துள்ளே நின்ற
இருவரையும் மூவரையும் என்மேல் ஏவி
இல்லாத தரவறுத்தாய்க்கு இல்லேன், ஏலக்
கருவரைசூழ் கானல் இலங்கை வேந்தன்
கடுந்தேர் மீதோடாமைக் காலால் செற்ற
பொருவரையாய் உன்னடிக்கே போதுகின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணியனே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...