திருப்பாற்றுறை:

<– சோழ நாடு (காவிரி வடகரை)

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(சம்பந்தர் தேவாரம்):

(1)
காரார் கொன்றை கலந்த முடியினர்
சீரார் சிந்தை செலச் செய்தார்
பாரார் நாளும் பரவிய பாற்றுறை
ஆரார் ஆதி முதல்வரே
(2)
நல்லாரும் அவர், தீயர் எனப்படும்
சொல்லார், நன்மலர் சூடினார்
பல்லார் வெண்தலைச் செல்வர் எம் பாற்றுறை
எல்லாரும் தொழும் ஈசரே
(3)
விண்ணார் திங்கள் விளங்கு நுதலினர்
எண்ணார் வந்தென் எழில் கொண்டார்
பண்ணார் வண்டினம் பாடல்செய் பாற்றுறை
உண்ணா நாள்நாளும் உறைவரே
(4)
பூவும் திங்கள் புனைந்த முடியினர்
ஏவின் அல்லார் எயிலெய்தார்
பாவம்தீர் புனல் மல்கிய பாற்றுறை
ஓவென் சிந்தை ஒருவரே
(5)
மாகம் தோய் மதிசூடி மகிழ்ந்தெனது
ஆகம் பொன்னிறம் ஆக்கினார்
பாகம் பெண்ணும் உடையவர் பாற்றுறை
நாகம் பூண்ட நயவரே
(6)
போது பொன்திகழ் கொன்றை புனைமுடி
நாதர் வந்தென் நலம் கொண்டார்
பாதம் தொண்டர் பரவிய பாற்றுறை
வேதம் ஓதும் விகிர்தரே
(7)
வாடல் வெண்தலை சூடினர், மால்விடை
கோடல் செய்த குறிப்பினார்
பாடல் வண்டினம் பண்செயும் பாற்றுறை
ஆடல் நாகம் அசைத்தாரே
(8)
வெவ்வ மேனியராய் வெள்ளை நீற்றினர்
எவ்வம் செய்தென் எழில் கொண்டார்
பவ்வ நஞ்சடை கண்டர்எம் பாற்றுறை
மவ்வல் சூடிய மைந்தரே
(9)
ஏனம் அன்னமும் ஆனவருக்கு, எரி
ஆன வண்ணத்தெம் அண்ணலார்
பானலம் மலர் விம்மிய பாற்றுறை
வான வெண்பிறை மைந்தரே
(10)
வெந்த நீற்றினர்; வேலினர்; நூலினர்
வந்தென் நன்னலம் வௌவினார்
பைந்தண் மாதவி சூழ்தரு பாற்றுறை
மைந்தர் தாமோர் மணாளரே
(11)
பத்தர் மன்னிய பாற்றுறை மேவிய
பத்து நூறு பெயரனைப்
பத்தன் ஞானசம்பந்தனது இன்தமிழ்
பத்தும் பாடிப் பரவுமே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page