திருப்பாதிரிப்புலியூர் – அப்பர் தேவாரம்:

<– திருப்பாதிரிப்புலியூர்

(1)
ஈன்றாளுமாய், எனக்கு எந்தையுமாய், உடன் தோன்றினராய்
மூன்றாய் உலகம் படைத்துகந்தான், மனத்துள் இருக்க
ஏன்றான், இமையவர்க்கன்பன், திருப்பாதிரிப்புலியூர்த்
தோன்றாத் துணையாய் இருந்தனன் தன் அடியோங்களுக்கே
(2)
பற்றாய் நினைந்திடப் போதுநெஞ்சே, இந்தப் பாரை முற்றும்
சுற்றாய் அலைகடல் மூடினும் கண்டேன் புகல்நமக்கு
உற்றான் உமையவட்கன்பன், திருப்பாதிரிப்புலியூர்
முற்றா முளைமதிக் கண்ணியினான் தன் மொய்கழலே
(3)
விடையான், விரும்பிஎன் உள்ளத்திருந்தான், இனிநமக்கிங்கு
அடையா அவலம், அருவினை சாரா, நமனை அஞ்சோம்
புடையார் கமலத்தயன் போல்பவர், பாதிரிப்புலியூர்
உடையான் அடியர் அடியடியோங்கட்கு அரியதுண்டே
(4)
மாயமெல்லாம் முற்றவிட்டிருள் நீங்க மலைமகட்கே
நேய நிலாவ இருந்தான், அவன் தன் திருவடிக்கே
தேயமெல்லா நின்றிறைஞ்சும் திருப்பாதிரிப்புலியூர்
மேயநல்லான் மலர்ப் பாதமென் சிந்தையுள் நின்றனவே
(5)
வைத்த பொருள் நமக்காம்என்று சொல்லி மனத்தடைத்துச்
சித்தம்ஒருக்கிச் சிவாய நமவென்று இருக்கினல்லால்
மொய்த்த கதிர்மதி போல்வார் அவர் பாதிரிப்புலியூர்
அத்தன் அருள் பெறலாமோ அறிவிலாப் பேதை நெஞ்சே
(6)
கருவாய்க் கிடந்துன் கழலே நினையும் கருத்துடையேன்
உருவாய்த் தெரிந்து உந்தன் நாமம் பயின்றேன் உனதருளால்
திருவாய்ப் பொலியச் சிவாய நமவென்று நீறணிந்தேன்
தருவாய் சிவகதி நீ பாதிரிப்புலியூர் அரனே
(7)
எண்ணாதமரர் இரக்கப் பரவையுள் நஞ்சை உண்டாய்
திண்ணார் அசுரர் திரிபுரம் தீயெழச் செற்றவனே
பண்ணார்ந்தமைந்த பொருள்கள் பயில் பாதிரிப்புலியூர்க்
கண்ணார் நுதலாய் கழனம்  கருத்தில் உடையனவே
(8)
புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி என்மனத்தே
வழுவாதிருக்க வரம் தர வேண்டும், இவ்வையகத்தே
தொழுவார்க்கிரங்கி இருந்தருள் செய் பாதிரிப்புலியூர்ச்
செழுநீர்ப் புனல்கங்கை செஞ்சடைமேல் வைத்த தீவண்ணனே
(9)
மண்பாதலம் புக்கு மால்கடல் மூடி, மற்றேழுலகும்
விண்பாறிசை கெட்டு இருசுடர் வீழினும் அஞ்சல் நெஞ்சே
திண்பால் நமக்கொன்று கண்டோம், திருப்பாதிரிப்புலியூர்க்
கண்பாவு நெற்றிக் கடவுள் சுடரான் கழலிணையே
(10)
திருந்தா அமணர் தம் தீநெறிப்பட்டுத் திகைத்து, முத்தி
தரும் தாளிணைக்கே சரணம் புகுந்தேன், வரையெடுத்த
பொருந்தா அரக்கனுடல் நெரித்தாய், பாதிரிப்புலியூர்
இருந்தாய், அடியேன் இனிப்பிறவாமல் வந்து ஏன்றுகொள்ளே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page