திருப்பாண்டிக்கொடுமுடி – சம்பந்தர் தேவாரம்:

<– திருப்பாண்டிக்கொடுமுடி

(1)
பெண்ணமர் மேனியினாரும், பிறைபுல்கு செஞ்சடையாரும்
கண்ணமர் நெற்றியினாரும், காதமரும் குழையாரும்
எண்அமரும் குணத்தாரும், இமையவர்ஏத்த நின்றாரும்
பண்ணமர் பாடலினாரும் பாண்டிக் கொடுமுடியாரே
(2)
தனைக் கணி மாமலர் கொண்டு தாள்தொழுவார் அவர் தங்கள்
வினைப்பகையாயின தீர்க்கும் விண்ணவர், விஞ்சையர், நெஞ்சில்
நினைத்தெழுவார் துயர் தீர்ப்பார், நிரைவளை மங்கை நடுங்கப்
பனைக்கைப் பகட்டுரி போர்த்தார் பாண்டிக் கொடுமுடியாரே
(3)
சடையமர் கொன்றையினாரும், சாந்த வெண்ணீறணிந்தாரும்
புடையமர் பூதத்தினாரும், பொறிகிளர் பாம்பசைத்தாரும்
விடையமரும் கொடியாரும், வெண்மழு மூவிலைச் சூலப்
படையமர் கொள்கையினாரும் பாண்டிக் கொடுமுடியாரே
(4)
நறைவளர் கொன்றையினாரும், ஞாலமெல்லாம் தொழுதேத்தக்
கறைவளர் மாமிடற்றாரும், காடரங்காக் கனலேந்தி
மறைவளர் பாடலினோடு மண்முழவம் குழல் மொந்தை
பறைவளர் பாடலினாரும் பாண்டிக் கொடுமுடியாரே
(5)
போகமும் இன்பமுமாகிப் போற்றி என்பார்அவர் தங்கள்
ஆகம் உறைவிடமாக அமர்ந்தவர், கொன்றையினோடும்
நாகமும் திங்களும் சூடி, நன்னுதல் மங்கை தன் மேனிப்
பாகம்உகந்தவர் தாமும் பாண்டிக் கொடுமுடியாரே
(6)
கடிபடு கூவிள மத்தம் கமழ்சடை மேலுடையாரும்
பொடிபட முப்புரம் செற்ற பொருசிலை ஒன்றுடையாரும்
வடிவுடை மங்கை தன்னோடு மணம்படு கொள்கையினாரும்
படிபடு கோலத்தினாரும் பாண்டிக் கொடுமுடியாரே
(7)
ஊனமர் வெண்தலையேந்தி உண்பலிக்கென்றுழல்வாரும்
தேனமரும் மொழிமாது சேர் திருமேனியினாரும்
கானமர் மஞ்ஞைகள்ஆலும் காவிரிக் கோலக் கரைமேல்
பானல நீறணிவாரும் பாண்டிக் கொடுமுடியாரே
(8)
புரந்தரன் தன்னொடு வானோர் போற்றி என்றேத்த நின்றாரும்
பெருந்திறல் வாளரக்கனைப் பேரிடர் செய்துகந்தாரும்
கருந்திரை மாமிடற்றாரும், காரகில் பன்மணி உந்திப்
பரந்திழி காவிரிப் பாங்கர்ப் பாண்டிக் கொடுமுடியாரே
(9)
திருமகள் காதலினானும், திகழ்தரு மாமலர் மேலைப்
பெருமகனும் அவர் காணாப் பேரழலாகிய பெம்மான்
மருமலி மென்மலர்ச் சந்து வந்திழி காவிரி மாடே
பருமணி நீர்த்துறையாரும் பாண்டிக் கொடுமுடியாரே
(10)
புத்தரும், புந்தியிலாத சமணரும் பொய் மொழியல்லால்
மெய்த்தவம் பேசிட மாட்டார், வேடம் பலபலவற்றால்
சித்தரும் தேவரும் கூடிச் செழுமலர் நல்லன கொண்டு
பத்தர்கள் தாம் பணிந்தேத்தும் பாண்டிக் கொடுமுடியாரே
(11)
கலமல்கு தண்கடல் சூழ்ந்த காழியுண் ஞானசம்பந்தன்
பலமல்கு வெண்தலை ஏந்தி பாண்டிக் கொடுமுடி தன்னைச்
சொலமல்கு பாடல்கள் பத்தும் சொல்ல வல்லார் துயர் தீர்ந்து
நலமல்கு சிந்தையராகி நன்னெறி எய்துவர் தாமே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page