(1)
மற்றுப் பற்றெனக்கின்றி நின் திருப்பாதமே மனம் பாவித்தேன்
பெற்றலும் பிறந்தேன், இனிப் பிறவாத தன்மை வந்தெய்தினேன்
கற்றவர் தொழுதேத்தும் சீர்க்கறையூரில் பாண்டிக் கொடுமுடி
நற்றவா, உனை நான்மறக்கினும் சொல்லும்நா நமச்சிவாயவே
(2)
இட்டன் உன்னடி ஏத்துவார் இகழ்ந்திட்ட நாள், மறந்திட்டநாள்
கெட்ட நாள் இவை என்றலால் கருதேன், கிளர்புனல் காவிரி
வட்ட வாசிகை கொண்டு அடி தொழுதேத்து பாண்டிக்கொடுமுடி
நட்டவா, உனை நான்மறக்கினும் சொல்லும்நா நமச்சிவாயவே
(3)
ஓவு நாள், உணர்வழியும் நாள், உயிர்போகும் நாள், உயர் பாடைமேல்
காவு நாள், இவை என்றலால் கருதேன், கிளர்புனல் காவிரிப்
பாவு தண்புனல் வந்திழி பரஞ்சோதி பாண்டிக் கொடுமுடி
நாவலா, உனை நான்மறக்கினும் சொல்லும்நா நமச்சிவாயவே
(4)
எல்லையில் புகழ் எம்பிரான், எந்தை தம்பிரான், என்பொன் மாமணி
கல்லை உந்தி வளம் பொழிந்திழி காவிரி அதன் வாய்க்கரை
நல்லவர் தொழுதேத்தும் சீர்க்கறையூரில் பாண்டிக் கொடுமுடி
வல்லவா, உனை நான் மறக்கினும் சொல்லும்நா நமச்சிவாயவே
(5)
அஞ்சினார்க்கரண் ஆதி என்று அடியேனும் நான்மிக அஞ்சினேன்
அஞ்சலென்றடித் தொண்டனேற்கு அருள் நல்கினாய்க்கு அழிகின்றதென்
பஞ்சின் மெல்லடிப் பாவைமார் குடைந்தாடு பாண்டிக்கொடுமுடி
நஞ்சணி கண்ட, நான் மறக்கினும் சொல்லும்நா நமச்சிவாயவே
(6)
ஏடு வான் இளம்திங்கள் சூடினை, என்பின் கொல்புலித் தோலின்மேல்
ஆடு பாம்பது அரைக்கசைத்த அழகனே, அந்தண் காவிரிப்
பாடு தண்புனல் வந்திழி பரஞ்சோதி பாண்டிக் கொடுமுடிச்
சேடனே, உனை நான்மறக்கினும் சொல்லும்நா நமச்சிவாயவே
(7)
விரும்பி நின்மலர்ப் பாதமே நினைந்தேன், வினைகளும் விண்டன
நெருங்கி வண்பொழில் சூழ்ந்தெழில்பெற நின்ற காவிரிக் கோட்டிடைக்
குரும்பை மென்முலைக் கோதைமார் குடைந்தாடு பாண்டிக் கொடுமுடி
விரும்பனே, உனை நான்மறக்கினும் சொல்லும்நா நமச்சிவாயவே
(8)
செம்பொனேர் சடையாய், திரிபுரம் தீயெழச் சிலை கோலினாய்
வம்புலாம் குழலாளைப் பாகம் அமர்ந்து, காவிரிக் கோட்டிடைக்
கொம்பின் மேற்குயில் கூவ மாமயில ஆடு பாண்டிக் கொடுமுடி
நம்பனே, உனை நான்மறக்கினும் சொல்லும்நா நமச்சிவாயவே
(9)
சாரணன், தந்தை, எம்பிரான், எந்தை தம்பிரான், எம்பொன், மாமணீ என்று
பேரெணாயிர கோடி தேவர் பிதற்றி நின்று பிரிகிலார்
நாரணன் பிரமன் தொழும் கறையூரில் பாண்டிக் கொடுமுடிக்
காரணா, உனை நான் மறக்கினும் சொல்லும்நா நமச்சிவாயவே
(10)
கோணிய பிறை சூடியைக், கறையூரில் பாண்டிக்கொடுமுடி
பேணிய பெருமானைப், பிஞ்ஞகப் பித்தனைப், பிறப்பில்லியைப்
பாணுலா வரி வண்டறை கொன்றைத் தாரனைப், படப்பாம்பரை
நாணனைத், தொண்டன் ஊரன் சொல்லிவை சொல்லுவார்க்கில்லை துன்பமே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...