திருப்பாச்சிலாச்சிராமம் – சம்பந்தர் தேவாரம்:

<– திருப்பாச்சிலாச்சிராமம்

(1)
துணிவளர் திங்கள் துளங்கி விளங்கச், சுடர்ச்சடை சுற்றிமுடித்துப்
பணிவளர் கொள்கையர் பாரிடம்சூழ வாரிடமும் பலிதேர்வர்
அணிவளர் கோலமெலாம் செய்து பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
மணிவளர் கண்டரோ, மங்கையை வாட மயல்செய்வதோ இவர் மாண்பே
(2)
கலைபுனை மானுரி தோலுடைஆடை, கனல் சுடரால் இவர் கண்கள்
தலையணி சென்னியர், தாரணி மார்பர், தம்அடிகள் இவரென்ன
அலைபுனல் பூம்பொழில் சூழ்ந்தமர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
இலைபுனை வேலரோ, ஏழையை வாட இடர் செய்வதோ இவர்ஈடே
(3)
வெஞ்சுடர் ஆடுவர், துஞ்சிருள் மாலை வேண்டுவர், பூண்பது வெண்ணூல்
நஞ்சடை கண்டர், நெஞ்சிடமாக நண்ணுவர் நம்மை நயந்து
மஞ்சடை மாளிகை சூழ்தரு பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
செஞ்சுடர் வண்ணரோ, பைந்தொடி வாடச் சிதை செய்வதோ இவர் சீரே
(4)
கனமலர்க் கொன்றை அலங்கல் இலங்கக் கனதரு தூமதிக்கண்ணி
புனமலர்மாலை அணிந்தழகாய புனிதர் கொலாம் இவரென்ன
வனமலி வண்பொழில் சூழ்தரு பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
மனமலி மைந்தரோ, மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே
(5)
மாந்தர்தம் பால் நறுநெய் மகிழ்ந்தாடி, வளர்சடை மேல் புனல் வைத்து
மோந்தை முழாக்குழல், தாளமொர் வீணை, முதிரவோர் வாய்மூரி பாடி
ஆந்தைவிழிச் சிறு பூதத்தர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
சாந்தணி மார்பரோ, தையலை வாடச் சதுர் செய்வதோ இவர் சார்வே
(6)
நீறுமெய் பூசி, நிறைசடை தாழ, நெற்றிக்கண்ணால் உற்றுநோக்கி
ஆறது சூடி, ஆடரவாட்டி, ஐவிரல் கோவணஆடை
பாறரு மேனியர், பூதத்தர், பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
ஏறது ஏறியர், ஏழையை வாட இடர் செய்வதோ இவர் ஈடே
(7)
பொங்கிள நாகமொர் ஏகவடத்தோடு, ஆமை வெண்ணூல் புனை கொன்றை
கொங்கிள மாலை புனைந்தழகாய குழகர் கொலாம் இவரென்ன
அங்கிள மங்கையோர் பங்கினர், பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
சங்கொளி வண்ணரோ, தாழ்குழல் வாடச் சதிர் செய்வதோ இவர் சார்வே
(8)
ஏவலத்தால் விசயற்கருள் செய்து, இராவணனை ஈடழித்து
மூவரிலும் முதலாய் நடுவாய மூர்த்தியை அன்றி மொழியாள்
யாவர்களும் பரவும் எழில் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
தேவர்கள் தேவரோ சேயிழை வாடச் சிதை செய்வதோ இவர் சார்வே
(9)
மேலது நான்முகன் எய்தியதில்லை, கீழது சேவடி தன்னை
நீலது வண்ணனும் எய்தியதில்லை எனஇவர் நின்றதும் அல்லால்
ஆலது மாமதிதோய் பொழில் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
பாலது வண்ணரோ, பைந்தொடி வாடப் பழி செய்வதோ இவர் பண்பே
(10)
நாணொடு கூடிய சாயினரேனும் நகுவர்அவர், இருபோதும்
ஊணொடு கூடிய உட்கு நகையால் உரைகள்அவை கொள வேண்டா
ஆணொடு பெண் வடிவாயினர், பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
பூணெடு மார்பரோ, பூங்கொடிவாடப் புனை செய்வதோ இவர் பொற்பே
(11)
அகமலி அன்பொடு தொண்டர் வணங்க ஆச்சிராமத்து உறைகின்ற
புகைமலி மாலை புனைந்தழகாய புனிதர் கொலாம் இவரென்ன
நகைமலி தண்பொழில் சூழ்தரு காழி நற்றமிழ் ஞானசம்பந்தன்
தகைமலி தண்தமிழ் கொண்டு இவையேத்தச் சாரகிலா வினைதானே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page