(1)
சிந்தையிடையார், தலையின் மிசையார், செஞ்சொல்லார்
வந்து மாலை வைகும் போழ்தென் மனத்துள்ளார்
மைந்தா மணாளா என்ன மகிழ்வார் ஊர் போலும்
பைந்தண் மாதவி சோலை சூழ்ந்த பாசூரே
(2)
பேரும் பொழுதும், பெயரும் பொழுதும், பெம்மான்என்று
ஆருந்தனையும் அடியார்ஏத்த அருள் செய்வார்
ஊரும் அரவம் உடையார் வாழுமூர் போலும்
பாரின் மிசையார் பாடல் ஓவாப் பாசூரே
(3)
கையால் தொழுது தலை சாய்த்துள்ளம் கசிவார்கள்
மெய்யார் குறையும் துயரும் தீர்க்கும் விகிர்தனார்
நெய்யாடுதல் அஞ்சுடையார் நிலாவும்ஊர் போலும்
பைவாய் நாகம் கோடல்ஈனும் பாசூரே
(4)
பொங்காடரவும் புனலும் சடைமேல் பொலிவெய்தக்
கொங்கார் கொன்றை சூடியென் உள்ளம் குளிர்வித்தார்
தங்காதலியும் தாமும் வாழுமூர் போலும்
பைங்கால் முல்லை பல்அரும்பீனும் பாசூரே
(5)
ஆடல் புரியும் ஐவாய் அரவொன்றரைச் சாத்தும்
சேடச் செல்வர் சிந்தையுள் என்றும் பிரியாதார்
வாடல் தலையில் பலிதேர் கையார் ஊர்போலும்
பாடல் குயில்கள் பயில் பூஞ்சோலைப் பாசூரே
(6)
கால்நின்றதிரக் கனல்வாய் நாகம் கச்சாகத்
தோல்ஒன்றுடையார், விடையார், தம்மைத் தொழுவார்கள்
மால் கொண்டோட மையல் தீர்ப்பார் ஊர் போலும்
பால்வெண் மதிதோய் மாடம் சூழ்ந்த பாசூரே
(7)
கண்ணின்அயலே கண்ணொன்றுடையார், கழலுன்னி
எண்ணும் தனையும் அடியார்ஏத்த அருள் செய்வார்
உண்ணின்றுருக உகவை தருவார் ஊர்போலும்
பண்ணின் மொழியார் பாடல் ஓவாப் பாசூரே
(8)
தேசு குன்றாத் தெண்ணீர் இலங்கைக் கோமானைக்
கூச அடர்த்துக் கூர்வாள் கொடுப்பார், தம்மையே
பேசிப் பிதற்றப் பெருமை தருவார் ஊர் போலும்
பாசித் தடமும் வயலும் சூழ்ந்த பாசூரே
(9)
நகுவாய் மலர்மேல் அயனும், நாகத்தணையானும்
புகுவாய் அறியார் புற நின்றோரார் போற்றோவார்
செகுவாய் உகுபல் தலைசேர் கையார் ஊர் போலும்
பகுவாய் நாரையாரல் வாரும் பாசூரே
(10)
தூய வெயிலில் நின்றுழல்வார், துவர்தோய் ஆடையார்
நாவில் வெய்ய சொல்லித் திரிவார், நயமில்லார்
காவல் வேவக் கணைஒன்றெய்தார் ஊர் போலும்
பாவைக் குரவம்பயில் பூஞ்சோலைப் பாசூரே
(11)
ஞானம்உணர்வான் காழி ஞானசம்பந்தன்
தேனும் வண்டும் இன்னிசை பாடும் திருப்பாசூர்க்
கானம் உறைவார் கழல்சேர் பாடல் இவைவல்லார்
ஊனம் இலராய் உம்பர் வானத்துறைவாரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...