திருப்பாசூர் – அப்பர் தேவாரம் (1):

<– திருப்பாசூர்

(1)
முந்தி மூவெயில் எய்த முதல்வனார்
சிந்திப்பார் வினை தீர்த்திடும் செல்வனார்
அந்திக்கோன் தனக்கே அருள் செய்தவர்
பந்திச் செஞ்சடைப் பாசூர் அடிகளே
(2)
மடந்தை பாகம் மகிழ்ந்த மணாளனார்
தொடர்ந்த வல்வினை போக்கிடும் சோதியார்
கடந்த காலனைக் கால்கொடு பாய்ந்தவர்
படர்ந்த நாகத்தர் பாசூர் அடிகளே
(3)
நாறு கொன்றையும் நாகமும் திங்களும்
ஆறும் செஞ்சடை வைத்த அழகனார்
காறு கண்டத்தர், கையதோர் சூலத்தர்
பாறின் ஓட்டினர் பாசூர் அடிகளே
(4)
வெற்றியூர் உறை வேதியராவர், நல்
ஒற்றி ஏறுகந்தேறும் ஒருவனார்
நெற்றிக் கண்ணினர், நீளரவம் தனைப்
பற்றி ஆட்டுவர் பாசூர் அடிகளே
(5)
மட்டவிழ்ந்த மலர்நெடுங் கண்ணிபால்
இட்ட வேட்கையராகி இருப்பவர்
துட்டரேல் அறியேன் இவர் சூழ்ச்சிமை
பட்ட நெற்றியர் பாசூர் அடிகளே
(6)
பல்லில் ஓடு கையேந்திப் பகலெலாம்
எல்லி நின்றிடு பெய்பலி ஏற்பவர்
சொல்லிப் போய்ப் புகுமூர்அறியேன் சொலீர்
பல்கு நீற்றினர் பாசூர் அடிகளே
(7)
கட்டி விட்ட சடையர் கபாலியர்
எட்டி நோக்கி வந்தில் புகுந்தவ்வவர்
இட்டமா அறியேன் இவர் செய்வன
பட்ட நெற்றியர் பாசூர் அடிகளே
(8)
வேதமோதி வந்தில் புகுந்தாரவர்
காதில் வெண்குழை வைத்த கபாலியார்
நீதியொன்று அறியார் நிறை கொண்டனர்
பாதி வெண்பிறைப் பாசூர் அடிகளே
(9)
சாம்பல் பூசுவர், தாழ்சடை கட்டுவர்
ஓம்பல் மூதெருதேறும் ஒருவனார்
தேம்பல் வெண்மதி சூடுவர், தீயதோர்
பாம்பும் ஆட்டுவர் பாசூர் அடிகளே
(10)
மாலினோடு மறையவன் தானுமாய்
மேலும் கீழும் அளப்பரிதாயவர்
ஆலின் நீழல் அறம் பகர்ந்தார் மிகப்
பால்வெண் நீற்றினர் பாசூர் அடிகளே
(11)
திரியும் மூஎயில் செங்கணை ஒன்றினால்
எரிய எய்தனரேனும், இலங்கைக்கோன்
நெரிய ஊன்றியிட்டார் விரலொன்றினால்
பரியர் நுண்ணியர் பாசூர் அடிகளே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page