திருப்பாசூர் – அப்பர் தேவாரம் (2):

<– திருப்பாசூர்

(1)
விண்ணாகி நிலனாகி விசும்புமாகி
    வேலைசூழ் ஞாலத்தார் விரும்புகின்ற
எண்ணாகி எழுத்தாகி இயல்புமாகி
    ஏழுலகும் தொழுதேத்திக் காண நின்ற
கண்ணாகி மணியாகிக் காட்சியாகிக்
    காதலித்தங்கடியார்கள் பரவ நின்ற
பண்ணாகி இன்னமுதாம் பாசூர் மேய
    பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்தவாறே
(2)
வேதமோர் நான்காய் ஆறங்கமாகி
    விரிகின்ற பொருட்கெல்லாம் வித்துமாகிக்
கூதலாய்ப் பொழிகின்ற மாரியாகிக்
    குவலயங்கள் முழுதுமாய்க் கொண்டலாகிக்
காதலால் வானவர்கள் போற்றியென்று
    கடிமலர்கள் அவைதூவி ஏத்த நின்ற
பாதியோர் மாதினனைப் பாசூர் மேய
    பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்தவாறே
(3)
தடவரைகள் ஏழுமாய்க் காற்றாய்த் தீயாய்த்
    தண்விசும்பாய்த் தண்விசும்பின் உச்சியாகிக்
கடல்வலயம் சூழ்ந்ததொரு ஞாலமாகிக்
    காண்கின்ற கதிரவனும் கதியுமாகிக்
குடமுழவச் சரிவழியே அனல் கையேந்திக்
    கூத்தாட வல்ல குழகனாகிப்
பட அரவொன்றதாட்டிப் பாசூர் மேய
    பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்தவாறே
(4)
நீராரும் செஞ்சடைமேல் அரவங்கொன்றை
    நிறைமதியம் உடன்சூடி நீதியாலே
சீராரும் மறையோதி உலகம் உய்யச்
    செழுங்கடலைக் கடைந்தகடல் நஞ்சமுண்ட
காராரும் கண்டனைக் கச்சி மேய
    கண்ணுதலைக் கடலொற்றி கருதினானைப்
பாரோரும் விண்ணோரும் பரசும் பாசூர்ப்
    பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்தவாறே
(5)
வேடனாய் விசயன்தன் வியப்பைக் காண்பான்
    விற்பிடித்துக் கொம்புடைய ஏனத்தின்பின்
கூடினார் உமையவளும் கோலம் கொள்ளக்
    கொலைப்பகழி உடன் கோத்துக் கோரப்பூசல்
ஆடினார் பெருங்கூத்துக் காளி காண
    அருமறையோடாறங்கம் ஆய்ந்து கொண்டு
பாடினார் நால்வேதம் பாசூர் மேய
    பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்தவாறே
(6)
புத்தியினால் சிலந்தியும்தன் வாயின் நூலால்
    புதுப்பந்தர் அதுஇழைத்துச் சருகால் மேய்ந்த
சித்தியினால் அரசாண்டு சிறப்புச் செய்யச்
    சிவகணத்துப் புகப்பெய்தார் திறலால் மிக்க
வித்தகத்தால் வெள்ளானை விள்ளா அன்பு
    விரவியவா கண்டதற்கு வீடு காட்டிப்
பத்தர்களுக்கின்னமுதாம் பாசூர் மேய
    பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்தவாறே
(7)
இணையொருவர் தாமல்லால் யாரும் இல்லார்
    இடைமருதோடு ஏகம்பத்தென்றும் நீங்கார்
அணைவரியர் யாவர்க்கும் ஆதிதேவர்
    அருமந்த நன்மையெலாம் அடியார்க்கீவர்
தணல் முழுகு பொடியாடும் செக்கர் மேனித்
    தத்துவனைச் சாந்தகிலின் அளறு தோய்ந்த
பணைமுலையாள் பாகனைஎம் பாசூர் மேய
    பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்தவாறே
(8)
அண்டவர்கள் கடல்கடைய அதனுள் தோன்றி
    அதிர்த்தெழுந்த ஆலாலம் வேலை ஞாலம்
எண்திசையும் சுடுகின்றவாற்றைக் கண்டு
    இமைப்பளவில் உண்டிருண்ட கண்டர் தொண்டர்
வண்டுபடு மதுமலர்கள் தூவி நின்று
    வானவர்கள் தானவர்கள் வணங்கியேத்தும்
பண்டரங்க வேடனைஎம் பாசூர் மேய
    பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே
(9)
ஞாலத்தை உண்ட திருமாலும் மற்றை
    நான்முகனும் அறியாத நெறியார், கையில்
சூலத்தால் அந்தகனைச் சுருளக் கோத்துத்
    தொல்லுலகில் பல்லுயிரைக் கொல்லும் கூற்றைக்
காலத்தால் உதைசெய்து காதல் செய்த
    அந்தணனைக் கைக்கொண்ட செவ்வான் வண்ணர்
பாலொத்த வெண்ணீற்றர் பாசூர் மேய
    பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்தவாறே
(10)
வேந்தன்நெடு முடியுடைய அரக்கர் கோமான்
    மெல்லியலாள் உமைவெருவ விரைந்திட்டோடிச்
சாந்தமென நீறணிந்தான் கயிலை வெற்பைத்
    தடக்கைகளால் எடுத்திடலும் தாளால் ஊன்றி
ஏந்துதிரள் திண்தோளும் தலைகள் பத்தும்
    இறுத்தவன்தன் இசைகேட்டிரக்கம் கொண்ட
பாந்தளணி சடைமுடிஎம் பாசூர் மேய
    பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்தவாறே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page