திருப்பழனம் – சம்பந்தர் தேவாரம்:

<– திருப்பழனம்

(1)
வேதமோதி வெண்ணூல்பூண்டு வெள்ளை எருதேறிப்
பூதம்சூழப் பொலிய வருவார், புலியின் உரிதோலார்
நாதாஎனவும், நக்கா எனவும், நம்பா எனநின்று
பாதம் தொழுவார் பாவம் தீர்ப்பார் பழன நகராரே
(2)
கண்மேல் கண்ணும், சடைமேல் பிறையும் உடையார், காலனைப்
புண்ணார் உதிரம் எதிராறோடப் பொன்றப் புறந்தாளால்
எண்ணாதுதைத்த எந்தை பெருமான், இமவான் மகளோடும்
பண்ணார் களிவண்டறை பூஞ்சோலைப் பழன நகராரே
(3)
பிறையும் புனலும் சடைமேல் உடையார், பறைபோல் விழிகள் பேய்
உறையும் மயானம் இடமா உடையார், உலகர் தலைமகன்
அறையும் மலர்கொண்டு அடியார் பரவி ஆடல்பாடல் செய்
பறையும் சங்கும் பலியும் ஓவாப் பழன நகராரே
(4)
உரமன் உயர் கோட்டுலறு கூகை அலறு மயானத்தில்
இரவில்பூதம் பாடஆடி எழிலார் அலர்மேலைப்
பிரமன் தலையில் நறவமேற்ற பெம்மான், எமையாளும்
பரமன் பகவன் பரமேச்சுவரன் பழன நகராரே
(5)
குலவெஞ்சிலையால் மதில்மூன்றெரித்த கொல்லேறுடை அண்ணல்
கலவ மயிலும் குயிலும் பயிலும் கடல்போல் காவேரி
நலமஞ்சுடைய நறுமாங்கனிகள் குதி கொண்டெதிர் உந்திப்
பலவின் கனிகள் திரைமுன் சேர்க்கும் பழன நகராரே
(6)
வீளைக் குரலும், விளிச்சங்கு ஒலியும், விழவின் ஒலிஓவா
மூளைத்தலை கொண்டு அடியார்ஏத்தப் பொடியா மதில்எய்தார்
ஈளைப்படுகு இலையார் தெங்கில் குலையார் வாழையின்
பாளைக்கமுகின் பழம்வீழ் சோலைப் பழன நகராரே
(7)
பொய்யா மொழியார் முறையாலேத்திப் புகழ்வார் திருமேனி
செய்யார், கரிய மிடற்றார், வெண்ணூல் சேர்ந்த அகலத்தார்
கைஆடலினார், புனலால் மல்கு சடைமேல் பிறையோடும்
பையாடரவம் உடனே வைத்தார் பழன நகராரே
(8)
மஞ்சோங்குயரம் உடையான், மலையை மாறாய் எடுத்தான் தோள்
அஞ்சோடஞ்சும் ஆறுநான்கும் அடர ஊன்றினார்
நஞ்சார் சுடலைப் பொடி நீறணிந்த நம்பான் வம்பாரும்
பைந்தாமரைகள் கழனி சூழ்ந்த பழன நகராரே
(9)
கடியார் கொன்றைச் சுரும்பின் மாலை கமழ்புன் சடையார், விண்
முடியாப்படி மூவடியால் உலக முழுதும் தாவிய
நெடியான், நீள் தாமரைமேல் அயனும் நேடிக் காணாத
படியார் பொடியாடு அகலமுடையார் பழன நகராரே
(10)
கண்டான் கழுவா முன்னேஓடிக் கலவைக் கஞ்சியை
உண்டாங்கவர்கள் உரைக்கும் சிறுசொல் ஓரார், பாராட்ட
வண்தாமரையின் மலர்மேல் நறவ மதுவாய் மிகஉண்டு
பண்தான்கெழும வண்டு யாழ்செய்யும் பழன நகராரே
(11)
வேய் முத்தோங்கி விரைமுன் பரக்கும் வேணுபுரம் தன்னுள்
நாவுய்த்தனைய திறலான் மிக்க ஞானசம்பந்தன்
பேசற்கினிய பாடல் பயிலும் பெருமான் பழனத்தை
வாயில் பொலிந்த மாலை பத்தும் வல்லார் நல்லாரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page