திருப்பழனம் – அப்பர் தேவாரம் (5):

<– திருப்பழனம்

(1)
மேவித்து நின்று விளைந்தன வெந்துயர் துக்கமெல்லாம்
ஆவித்து நின்று கழிந்தன அல்லலவைஅறுப்பான்
பாவித்த பாவனை நீஅறிவாய் பழனத்தரசே
கூவித்துக் கொள்ளும்தனை அடியேனைக் குறிக்கொள்வதே
(2)
சுற்றி நின்றார் புறங்காவல் அமரர் கடைத்தலையில்
மற்று நின்றார் திருமாலொடு நான்முகன் வந்தடிக்கீழ்ப்
பற்றி நின்றார் பழனத்தரசே உன் பணியறிவான்
உற்று நின்றார், அடியேனைக் குறிக்கொண்டு அருளுவதே
(3)
ஆடிநின்றாய் அண்டம்ஏழும் கடந்துபோய் மேலவையும்
கூடி நின்றாய், குவிமென் முலையாளையும் கொண்டுடனே
பாடி நின்றாய், பழனத்தரசே, அங்கொர் பால்மதியம்
சூடிநின்றாய், அடியேனை அஞ்சாமைக் குறிக்கொள்வதே
(4)
எரித்துவிட்டாய் அம்பினால் புரமூன்று முன்னே படவும்
உரித்துவிட்டாய் உமையாள் நடுக்கெய்தஓர் குஞ்சரத்தைப்
பரித்துவிட்டாய் பழனத்தரசே கங்கை வார்சடை மேல்
தரித்துவிட்டாய் அடியேனைக் குறிக்கொண்டருளுவதே
(5)
முன்னியும் உன்னி முளைத்தன மூவெயிலும் உடனே
மன்னியும் அங்கும் இருந்தனை, மாய மனத்தவர்கள்
பன்னிய நூலின் பரிசறிவாய் பழனத்தரசே
முன்னியும் உன்னடியேனைக் குறிக்கொண்டருளுவதே
(6)
ஏய்ந்தறுத்தாய் இன்பனாய் இருந்தே படைத்தான் தலையைக்
காய்ந்தறுத்தாய் கண்ணினால் அன்று காமனைக், காலனையும்
பாய்ந்தறுத்தாய், பழனத்தரசே என் பழவினை நோய்
ஆய்ந்தறுத்தாய், அடியேனைக் குறிக்கொண்டுருளுவதே
(7)
மற்று வைத்தாய் அங்கொர் மாலொரு பாகம் மகிழ்ந்துடனே
உற்று வைத்தாய் உமையாளொடும் கூடும் பரிசெனவே
பற்றிவைத்தாய் பழனத்தரசே அங்கொர் பாம்பொருகை
சுற்றிவைத்தாய், அடியேனைக் குறிக்கொண்டருளுவதே
(8)
ஊரினின் தாயொன்றி நின்று விண்டாரையும் ஒள்ளழலால்
போரில் நின்றாய், பொறையாய் உயிராவி சுமந்துகொண்டு
பாரில் நின்றாய் பழனத்தரசே பணி செய்பவர்கட்கு
ஆரநின்றாய், அடியேனைக் குறிக்கொண்டருளுவதே
(9)
போகம் வைத்தாய், புரி புன்சடை மேலொர் புனலதனை
யாகம் வைத்தாய், மலையான் மடமங்கை மகிழ்ந்துடனே
பாகம் வைத்தாய், பழனத்தரசே உன் பணியருளால்
ஆகம் வைத்தாய், அடியேனைக் குறிக்கொண்டருளுவதே
(10)
அடுத்திருந்தாய், அரக்கன் முடி வாயொடு தோள்நெரியக்
கெடுத்திருந்தாய், கிளர்ந்தார் வலியைக் கிளையோடுடனே
படுத்திருந்தாய், பழனத்தரசே புலியின் உரிதோல்
உடுத்திருந்தாய், அடியேனைக் குறிக்கொண்டருளுவதே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page