(1)
ஒன்றுகொலாம் அவர் சிந்தை உயர்வரை
ஒன்றுகொலாம் உயரும் மதி சூடுவர்
ஒன்றுகொலாம் இடு வெண்தலை கையது
ஒன்றுகொலாம் அவர் ஊர்வது தானே
(2)
இரண்டுகொலாம் இமையோர் தொழு பாதம்
இரண்டுகொலாம் இலங்குங்குழை பெண்ணாண்
இரண்டுகொலாம் உருவம் சிறுமான் மழு
இரண்டுகொலாம் அவர் எய்தின தாமே
(3)
மூன்றுகொலாம் அவர் கண்ணுதல்ஆவன
மூன்றுகொலாம் அவர் சூலத்தின் மொய்யிலை
மூன்றுகொலாம் கணை கையது வில்நாண்
மூன்றுகொலாம் புரமெய்தன தாமே
(4)
நாலுகொலாம் அவர் தம்முகம் ஆவன
நாலுகொலாம் சனனம் முதல் தோற்றமும்
நாலுகொலாம் அவர் ஊர்தியின் பாதங்கள்
நாலுகொலாம் மறைபாடின தாமே
(5)
அஞ்சுகொலாம் அவர் ஆடரவின் படம்
அஞ்சுகொலாம் அவர் வெல் புலனாவன
அஞ்சுகொலாம் அவர் காயப்பட்டான் கணை
அஞ்சுகொலாம் அவர் ஆடின தாமே
(6)
ஆறுகொலாம் அவர் அங்கம் படைத்தன
ஆறுகொலாம் அவர்தம் மகனார் முகம்
ஆறுகொலாம் அவர் தார்மிசை வண்டின்கால்
ஆறுகொலாம் சுவையாக்கின தாமே
(7)
ஏழுகொலாம் அவர் ஊழி படைத்தன
ஏழுகொலாம் அவர் கண்ட இருங்கடல்
ஏழுகொலாம் அவர் ஆளும் உலகங்கள்
ஏழுகொலாம் இசையாக்கின தாமே
(8)
எட்டுக்கொலாம் அவர் ஈறில் பெருங்குணம்
எட்டுக்கொலாம் அவர் சூடும் இனமலர்
எட்டுக்கொலாம் அவர் தோளிணை ஆவன
எட்டுக்கொலாம் திசையாக்கின தாமே
(9)
ஒன்பது போல் அவர் வாசல் வகுத்தன
ஒன்பது போல் அவர் மார்பினில் நூலிழை
ஒன்பது போல் அவர் கோலக் குழற்சடை
ஒன்பது போல் அவர் பாரிடம் தானே
(10)
பத்துக்கொலாம் அவர் பாம்பின்கண் பாம்பின்பல்
பத்துக்கொலாம் எயிறும் நெரிந்துக்கன
பத்துக்கொலாம் அவர் காயப்பட்டான் தலை
பத்துக்கொலாம் அடியார் செய்கை தானே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...