திருப்பழனம் – அப்பர் தேவாரம் (1):

<– திருப்பழனம்

(1)
ஆடினார் ஒருவர் போலும்; மலர்கமழ் குழலினாளைக்
கூடினார் ஒருவர் போலும்; குளிர்புனல் வளைந்த திங்கள்
சூடினார் ஒருவர் போலும்; தூயநன் மறைகள் நான்கும்
பாடினார் ஒருவர் போலும் பழனத்தெம் பரமனாரே
(2)
போவதோர் நெறியுமானார்; புரிசடைப் புனிதனார்; நான்
வேவதோர் வினையில் பட்டு வெம்மைதான் விடவும் கில்லேன்
கூவல்தான் அவர்கள் கேளார், குணமிலா ஐவர் செய்யும்
பாவமே தூர நின்றார் பழனத்தெம் பரமனாரே
(3)
கண்டராய் முண்டராகிக் கையிலோர் கபாலமேந்தித்
தொண்டர்கள் பாடியாடித் தொழுகழல் பரமனார்தாம்
விண்டவர் புரங்கள் எய்த வேதியர், வேத நாவர்
பண்டைஎன் வினைகள் தீர்ப்பார் பழனத்தெம் பரமனாரே
(4)
நீரவன் தீயினோடு நிழலவன் எழிலதாய
பாரவன் விண்ணின் மிக்க பரமவன் பரமயோகி
ஆரவன் அண்டமிக்க திசையினோடு எளிகளாகிப்
பாரகத்தமிழ்தம் ஆனார் பழனத்தெம் பரமனாரே
(5)
ஊழியார் ஊழிதோறும் உலகினுக்கொருவராகிப்
பாழியார் பாவம் தீர்க்கும் பராபரர் பரமதாய
ஆழியான் அன்னத்தானும் அன்றவர்க்கு அளப்பரிய
பாழியார் பரவியேத்தும் பழனத்தெம் பரமனாரே
(6)
ஆலின்கீழ் அறங்கள் எல்லாம் அன்றவர்க்கருளிச் செய்து
நூலின்கீழ் அவர்கட்கெல்லா நுண்பொருளாகி நின்று
காலின்கீழ்க் காலன் தன்னைக் கடுகத்தான் பாய்ந்து பின்னும்
பாலின்கீழ் நெய்யுமானார் பழனத்தெம் பரமனாரே
(7)
ஆதித்தன் அங்கி சோமன் அயனொடு மால் புதன்னும்
போதித்து நின்றுலகில் போற்றிசைத்தார் இவர்கள்
சோதித்தார் ஏழுலகும் சோதியுள் சோதியாகிப்
பாதிப்பெண் உருவமானார் பழனத்தெம் பரமனாரே
(8)
காற்றனால் காலற் காய்ந்து, காருரி போர்த்த ஈசர்
தோற்றனார் கடலுள் நஞ்சைத், தோடுடைக் காதர், சோதி
ஏற்றினார் இளவெண் திங்கள் இரும்பொழில் சூழ்ந்த காயம்
பாற்றினார் வினைகள் எல்லாம் பழனத்தெம் பரமனாரே
(9)
கண்ணனும் பிரமனோடு காண்கிலராகி வந்தே
எண்ணியும் துதித்தும் ஏத்த எரியுருவாகி நின்று
வண்ணநன் மலர்கள் தூவி வாழ்த்துவார் வாழ்த்தியேத்தப்
பண்ணுலாம் பாடல் கேட்டார் பழனத்தெம் பரமனாரே
(10)
குடையுடை அரக்கன் சென்று குளிர்கயிலாய வெற்பின்
இடை மடவரலை அஞ்ச எடுத்தலும் இறைவ நோக்கி
விடையுடை விகிர்தன் தானும் விரலினால் ஊன்றி மீண்டும்
படைகொடை அடிகள் போலும் பழனத்தெம் பரமனாரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page