திருப்பழனம் – அப்பர் தேவாரம் (2):

<– திருப்பழனம்

(1)
சொல்மாலை பயில்கின்ற குயிலினங்காள் சொல்லீரே
பன்மாலை வரிவண்டு பண்மிழற்றும் பழனத்தான்
முன்மாலை நகுதிங்கள் முகிழ்விளங்கு முடிச்சென்னிப்
பொன்மாலை மார்பன்என் புதுநலம் உண்டிகழ்வானோ
(2)
கண்டகங்காள், முண்டகங்காள், கைதைகாள், நெய்தல்காள்
பண்டரங்க வேடத்தான், பாட்டோவாப் பழனத்தான்
வண்டுலாம் தடமூழ்கி மற்றவனென் தளிர் வண்ணம்
கொண்டநாள் தான் அறிவான் குறிக்கொள்ளாதொழிவானோ
(3)
மனைக்காஞ்சி இளங்குருகே மறந்தாயோ, மதமுகத்த
பனைக்கை மா உரிபோர்த்தான் பலர்பாடும் பழனத்தான்
நினைக்கின்ற நினைப்பெல்லாம் உரையாயோ நிகழ்வண்டே
சுனைக்குவளை மலர்க்கண்ணாள் சொல் தூதாய்ச் சோர்வாளோ
(4)
புதியையாய் இனியையாம் பூந்தென்றால், புறங்காடு
பதியாவதிது என்று பலர்பாடும் பழனத்தான்
மதியாதார் வேள்விதனை மதித்திட்ட மதிகங்கை
விதியாளன், என்னுயிர்மேல் விளையாடல் விடுத்தானோ
(5)
மண்பொருந்தி வாழ்பவர்க்கும் மாதீர்த்த வேதியர்க்கும்
விண்பொருந்து தேவர்க்கும் வீடுபேறாய் நின்றானைப்
பண்பொருந்த இசைபாடும் பழனஞ்சேர் அப்பனைஎன்
கண்பொருந்தும் போதத்தும் கைவிடநான் கடவேனோ
(6)
பொங்கோத மால்கடலில் புறம்புறம்போய் இரைதேரும்
செங்கால்வெண் மடநாராய் செயற்படுவது அறியேனான்
அங்கோல வளை கவர்ந்தான் அணிபொழில்சூழ் பழனத்தான்
தங்கோல நறுங்கொன்றைத் தார் அருளாதொழிவானோ
(7)
துணையார முயங்கிப்போய்த் துறைசேரும் மடநாராய்
பணையார வாரத்தான், பாட்டோவாப் பழனத்தான்
கணையார இருவிசும்பில் கடிஅரணம் பொடிசெய்த
இணையார மார்பன்என் எழில்நலம் உண்டிகழ்வானோ
(8)
கூவைவாய் மணிவரன்றிக் கொழித்தோடும் காவிரிப்பூம்
பாவைவாய் முத்திலங்கப் பாய்ந்தாடும் பழனத்தான்
கோவைவாய் மலைமகள்கோன் கொல்லேற்றின் கொடியாடைப்
பூவைகாள் மழலைகாள் போகாத பொழுதுளதே
(9)
புள்ளிமான் பொறியரவம் புள்ளுயர்த்தான் மணிநாகப்
பள்ளியான் தொழுதேத்த இருக்கின்ற பழனத்தான்
உள்ளுவார் வினைதீர்க்கும் என்றுரைப்பர் உலகெல்லாம்
கள்ளியேன் நான்இவர்க்கென் கனவளையும் கடவேனோ
(10)
வஞ்சித்தென் வளைகவர்ந்தான் வாரானே ஆயிடினும்
பஞ்சிக்கால் சிறகன்னம் பரந்தார்க்கும் பழனத்தான்
அஞ்சிப் போய்க் கலிமெலிய அழலோம்பும் அப்பூதி
குஞ்சிப் பூவாய் நின்ற சேவடியாய் கோடியையே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page