திருப்பழனம் – அப்பர் தேவாரம் (3):

<– திருப்பழனம்

(1)
அருவனாய், அத்தி ஈருரி போர்த்துமை
உருவனாய், ஒற்றியூர் பதியாகிலும்
பருவரால் வயல் சூழ்ந்த பழனத்தான்
திருவினால் திருவேண்டும் இத்தேவர்க்கே
(2)
வையம் வந்து வணங்கி வலங்கொளும்
ஐயனை அறியார் சிலர் ஆதர்கள்
பைகொள் ஆடரவார்த்த பழனன்பால்
பொய்யர் காலங்கள் போக்கிடுவார்களே
(3)
வண்ணமாக முறுக்கிய வாசிகை
திண்ணமாகத் திருச்சடைச் சேர்த்தியே
பண்ணுமாகவே பாடும் பழனத்தான்
எண்ணும் நீர் அவன் ஆயிர நாமமே
(4)
மூர்க்கப் பாம்பு பிடித்தது மூச்சிட
வாக்கப் பாம்பினைக் கண்ட துணிமதி
பாக்கப் பாம்பினைப் பற்றும் பழனத்தான்
தார்க்கொள் மாலை சடைக்கணிந்திட்டதே
(5)
நீலமுண்ட மிடற்றினன், நேர்ந்ததோர்
கோலமுண்ட குணத்தால் நிறைந்ததோர்
பாலுமுண்டு பழனன்பால் என்னிடை
மாலும் உண்டிறை எந்தன் மனத்துளே
(6)
மந்தமாக வளர்பிறை சூடியோர்
சந்தமாகத் திருச்சடை சாத்துவான்
பந்தமாயின தீர்க்கும் பழனத்தான்
எந்தை தாய் தந்தை எம்பெருமானுமே
(7)
மார்க்கமொன்றறியார் மதியில்லிகள்
பூக்கரத்தில் புரிகிலர் மூடர்கள்
பார்க்க நின்று பரவும் பழனத்தான்
தாள்கள் நின்று தலை வணங்கார்களே
(8)
ஏறினார் இமையோர்கள் பணிகண்டு
தேறுவார் அலர் தீவினையாளர்கள்
பாறினார் பணி வேண்டும் பழனத்தான்
கூறினான் உமையாளொடும் கூடவே
(9)
சுற்றுவார் தொழுவார் சுடர்வண்ணன் மேல்
தெற்றினார் திரியும் புரம் மூன்றெய்தான்
பற்றினார் வினை தீர்க்கும் பழனனை
எற்றினான் மறக்கேன் எம்பிரானையே
(10)
பொங்கு மாகடல் சூழ் இலங்கைக்கிறை
அங்கமான இறுத்தருள் செய்தவன்
பங்கன் என்றும் பழனன் உமையொடும்
தங்கன் தாள் அடியேனுடை உச்சியே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page