திருப்பழனம் – அப்பர் தேவாரம் (4):

<– திருப்பழனம்

(1)
அலையார் கடல்நஞ்சம் உண்டார் தாமே
    அமரர்களுக்கருள் செய்யும் ஆதி தாமே
கொலையாய கூற்றம் உதைத்தார் தாமே
    கொல்வேங்கைத் தோலொன்றசைத்தார் தாமே
சிலையால் புரமூன்றெரித்தார் தாமே
    தீநோய் களைந்தென்னை ஆண்டார் தாமே
பலி தேர்ந்தழகாய பண்பர் தாமே
    பழன நகரெம் பிரானார் தாமே
(2)
வெள்ளம் ஒருசடைமேல் ஏற்றார் தாமே
    மேலார்கண் மேலார்கண் மேலார் தாமே
கள்ளம் கடிந்தென்னை ஆண்டார் தாமே
    கருத்துடைய பூதப் படையார் தாமே
உள்ளத்துவகை தருவார் தாமே
    உறுநோய் சிறுபிணிகள் தீர்ப்பார் தாமே
பள்ளப் பரவை நஞ்சுண்டார் தாமே
    பழன நகரெம் பிரானார் தாமே
(3)
இரவும் பகலுமாய் நின்றார் தாமே
    எப்போதும் என் நெஞ்சத்துள்ளார் தாமே
அரவம் அரையில் அசைத்தார் தாமே
    அனலாடி அங்கை மறித்தார் தாமே
குரவம் கமழும் குற்றாலர் தாமே
    கோலங்கள் மேன்மேல் உகப்பார் தாமே
பரவும் அடியார்க்குப் பாங்கர் தாமே
    பழன நகரெம் பிரானார் தாமே
(4)
மாறில் மதில்மூன்றும் எய்தார் தாமே
    வரியரவம் கச்சாக வார்த்தார் தாமே
நீறுசேர் திருமேனி நிமலர் தாமே
    நெற்றி நெருப்புக்கண் வைத்தார் தாமே
ஏறுகொடும் சூலக்கையர் தாமே
    என்பாபரணம் அணிந்தார் தாமே
பாறுண் தலையில் பலியார் தாமே
    பழன நகரெம் பிரானார் தாமே
(5)
சீரால் வணங்கப் படுவார் தாமே
    திசைக்கெல்லாம் தேவாகி நின்றார் தாமே
ஆரா அமுதமும் ஆனார் தாமே
    அளவில் பெருமை உடையார் தாமே
நீறார் நியமம் உடையார் தாமே
    நீள்வரை வில்லாக வளைத்தார் தாமே
பாரார் பரவப் படுவார் தாமே
    பழன நகரெம் பிரானார் தாமே
(6)
காலனுயிர் வௌவ வல்லார் தாமே
    கடிதோடும் வெள்ளை விடையார் தாமே
கோலம் பலவும் உகப்பார் தாமே
    கோணாகம் நாணாகப் பூண்டார் தாமே
நீலம் பொலிந்த மிடற்றார் தாமே
    நீள்வரையின் உச்சி இருப்பார் தாமே
பால விருத்தரும் ஆனார் தாமே
    பழன நகரெம் பிரானார் தாமே
(7)
ஏய்ந்த உமைநங்கை பங்கர் தாமே
    ஏழூழிக்கப்புறமாய் நின்றார் தாமே
ஆய்ந்து மலர்தூவ நின்றார் தாமே
    அளவில் பெருமை உடையார் தாமே
தேய்ந்த பிறைசடைமேல் வைத்தார் தாமே
    தீவாய் அரவதனை ஆர்த்தார் தாமே
பாய்ந்த படர்கங்கை ஏற்றார் தாமே
    பழன நகரெம் பிரானார் தாமே
(8)
ஓராதார் உள்ளத்தில் நில்லார் தாமே
    உள்ளூறும் அன்பர் மனத்தார் தாமே
பேராதென் சிந்தை இருந்தார் தாமே
    பிறர்க்கென்றும் காட்சிக்கரியார் தாமே
ஊராரு மூவுலகத்துள்ளார் தாமே
    உலகை நடுங்காமல் காப்பார் தாமே
பாரார் முழவத்திடையார் தாமே
    பழன நகரெம் பிரானார் தாமே
(9)
நீண்டவர்க்கோர் நெருப்புருவம் ஆனார் தாமே
    நேரிழையை ஒருபாகம் வைத்தார் தாமே
பூண்டரவைப் புலித்தோல்மேல் ஆர்த்தார் தாமே
    பொன்னிறத்த வெள்ளச் சடையார் தாமே
ஆண்டுலகு ஏழனைத்தினையும் வைத்தார் தாமே
    அங்கங்கே சிவமாகி நின்றார் தாமே
பாண்டவரில் பார்த்தனுக்குப் பரிந்தார் தாமே
    பழன நகரெம் பிரானார் தாமே
(10)
விடையேறி வேண்டுலகத்திருப்பார் தாமே
    விரிகதிரோன் சோற்றுத் துறையார் தாமே
புடைசூழத் தேவர் குழாத்தார் தாமே
    பூந்துருத்தி நெய்த்தானம் மேயார் தாமே
அடைவே புனல்சூழ் ஐயாற்றார் தாமே
    அரக்கனையும் ஆற்றல் அழித்தார் தாமே
படையாப் பல்பூதம் உடையார் தாமே
    பழன நகரெம் பிரானார் தாமே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page