திருப்பல்லவனீச்சரம் – சம்பந்தர் தேவாரம் (2):

<– திருப்பல்லவனீச்சரம்

(1)
பரசு பாணியர், பாடல் வீணையர், பட்டினத்துறை பல்லவனீச்சரத்து
அரசுபேணி நின்றார் இவர் தன்மை அறிவார்ஆர்
(2)
பட்ட நெற்றியர், நட்டமாடுவர், பட்டினத்துறை பல்லவனீச்சரத்து
இட்டமாய் இருப்பார் இவர் தன்மை அறிவார்ஆர்
(3)
பவள மேனியர், திகழு நீற்றினர், பட்டினத்துறை பல்லவனீச்சரத்து
அழகராய் இருப்பார் இவர்தன்மை அறிவார்ஆர்
(4)
பண்ணில் யாழினர், பயிலு மொந்தையர், பட்டினத்துறை பல்லவனீச்சரத்து
அண்ணலாய் இருப்பார் இவர்தன்மை அறிவார்ஆர்
(5)
பல்லில் ஓட்டினர், பலிகொண்டுண்பவர், பட்டினத்துறை பல்லவனீச்சரத்து
எல்லி ஆட்டுகந்தார் இவர்தன்மை அறிவார்ஆர்
(6)
பச்சை மேனியர், பிச்சை கொள்பவர், பட்டினத்துறை பல்லவனீச்சரத்து
இச்சையாய் இருப்பார் இவர்தன்மை அறிவார்ஆர்
(7)
பைங்கண் ஏற்றினர், திங்கள் சூடுவர், பட்டினத்துறை பல்லவனீச்சரத்து
எங்குமாய் இருப்பார் இவர்தன்மை அறிவார்ஆர்
(8)
பாதம்கைதொழ வேதம்ஓதுவர், பட்டினத்துறை பல்லவனீச்சரத்து
ஆதியாய் இருப்பார் இவர்தன்மை அறிவார்ஆர்
(9)
படிகொள் மேனியர், கடிகொள் கொன்றையர், பட்டினத்துறை பல்லவனீச்சரத்து
அடிகளாய் இருப்பார் இவர்தன்மை அறிவார்ஆர்
(10)
பறைகொள் பாணியர், பிறைகொள் சென்னியர், பட்டினத்துறை பல்லவனீச்சரத்து
இறைவராய் இருப்பார் இவர்தன்மை அறிவார்ஆர்
(11)
வானம்ஆள்வதற்கு ஊனமொன்றிலை, மாதர் பல்லவனீச்சரத்தானை
ஞானசம்பந்தன் நற்றமிழ் சொல்ல வல்லவர் நல்லவரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page