திருப்பல்லவனீச்சரம் – சம்பந்தர் தேவாரம் (1):

<– திருப்பல்லவனீச்சரம்

(1)
அடையார்தம் புரங்கள் மூன்றும் ஆரழலில் அழுந்த
விடையார் மேனியராய்ச் சீறும் வித்தகர் மேயஇடம்
கடையார்மாட நீடியெங்கும் கங்குல் புறந்தடவப்
படையார் புரிசைப் பட்டினம்சேர் பல்லவனீச்சரமே
(2)
எண்ணார் எயில்கள் மூன்றும்சீறும் எந்தைபிரான், இமையோர்
கண்ணாய் உலகம் காக்கநின்ற கண்ணுதல் நண்ணுமிடம்
மண்ணார் சோலைக் கோலவண்டு வைகலும் தேனருந்திப்
பண்ணார் செய்யும் பட்டினத்துப் பல்லவனீச்சரமே
(3)
மங்கைஅங்கோர் பாகமாக, வாள்நிலவார் சடைமேல்
கங்கைஅங்கே வாழவைத்த கள்வன் இருந்தஇடம்
பொங்கயஞ்சேர் புணரியோத மீதுயர் பொய்கையின்மேல்
பங்கயஞ்சேர் பட்டினத்துப் பல்லவனீச்சரமே
(4)
தாரார் கொன்றை பொன்தயங்கச் சாத்திய மார்பகலம்
நீரார்நீறு சாந்தம்வைத்த நின்மலன் மன்னும்இடம்
போரார் வேற்கண் மாதர், மைந்தர் புக்கிசை பாடலினால்
பாரார்கின்ற பட்டினத்துப் பல்லவனீச்சரமே
(5)
மைசேர் கண்டர், அண்டவாணர், வானவரும் துதிப்ப
மெய்சேர் பொடியர், அடியாரேத்த மேவியிருந்த இடம்
கைசேர் வளையார், விழைவினோடு காதன்மையால் கழலே
பைசேர் அரவார் அல்குலார்சேர் பல்லவனீச்சரமே
(6)
குழலினோசை வீணைமொந்தை கொட்ட, முழவதிரக்
கழலினோசை ஆர்க்கஆடும் கடவுள் இருந்தஇடம்
சுழியிலாரும் கடலில்ஓதம் தெண்திரை மொண்டெறியப்
பழியிலார்கள் பயில்புகாரில் பல்லவனீச்சரமே
(7)
வெந்தலாய வேந்தன்வேள்வி வேரறச் சாடி, விண்ணோர்
வந்தெலாமுன் பேணநின்ற மைந்தன் மகிழ்ந்தஇடம்
மந்தலாய மல்லிகையும் புன்னைவளர் குரவின்
பந்தலாரும் பட்டினத்துப் பல்லவனீச்சரமே
(8)
தேரரக்கன் மால்வரையைத் தெற்றியெடுக்க அவன்
தார்அரக்கும் திண்முடிகள் ஊன்றிய சங்கரன்ஊர்
கார்அரக்கும் கடல்கிளர்ந்த காலமெலாம் உணரப்
பாரர்அக்கம் பயில்புகாரில் பல்லவனீச்சரமே
(9)
அங்கமாறும் வேதநான்கும் ஓதும் அயன்நெடுமால்
தங்கணாலும் நேடநின்ற சங்கரன் தங்குமிடம்
வங்கமாரும் முத்தம்இப்பி வார்கடலூடலைப்பப்
பங்கமில்லார் பயில்புகாரில் பல்லவனீச்சரமே
(10)
உண்டுடுக்கை இன்றியே நின்று ஊர்நகவே திரிவார்
கண்டுடுக்கை மெய்யில் போர்த்தார் கண்டறியாதஇடம்
தண்டுடுக்கை தாளந்தக்கை சார நடம் பயில்வார்
பண்டிடுக்கண் தீரநல்கும் பல்லவனீச்சரமே
(11)
பத்தரேத்தும் பட்டினத்துப் பல்லவனீச்சரத்தெம்
அத்தன் தன்னை அணிகொள் காழி ஞானசம்பந்தன் சொல்
சித்தஞ்சேரச் செப்புமாந்தர் தீவினை நோயிலராய்
ஒத்தமைந்த உம்பர்வானில் உயர்வினொடு ஓங்குவரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page