திருப்பறியலூர்:

<-- சோழ நாடு (காவிரி தென்கரை)

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(சம்பந்தர் தேவாரம்):

(1)
கருத்தன்; கடவுள்; கனலேந்தி ஆடும்
நிருத்தன்; சடைமேல் நிரம்பா மதியன்
திருத்தம் உடையார் திருப்பறியலூரில்
விருத்தன் எனத்தகும் வீரட்டத்தானே
(2)
மருந்தன்; அமுதன்; மயானத்துள் மைந்தன்
பெருந்தண் புனல் சென்னி வைத்த பெருமான்
திருந்து மறையோர் திருப்பறியலூரில்
விரிந்த மலர்ச்சோலை வீரட்டத்தானே
(3)
குளிர்ந்தார் சடையன்; கொடுஞ்சிலை விற்காமன்
விளிந்தான் அடங்க வீந்தெய்தச் செற்றான்
தெளிந்தார் மறையோர் திருப்பறியலூரில்
மிளிர்ந்தார் மலர்ச்சோலை வீரட்டத்தானே
(4)
பிறப்புஆதி இல்லான்; பிறப்பார் பிறப்புச்
செறப்பு ஆதிஅந்தம் செலச் செய்யும் தேசன்
சிறப்பாடு உடையார் திருப்பறியலூரில்
விறல் பாரிடம்சூழ வீரட்டத்தானே
(5)
கரிந்தார் இடுகாட்டில் ஆடும் கபாலி
புரிந்தார் படுதம் புறங்காட்டிலாடும்
தெரிந்தார் மறையோர் திருப்பறியலூரில்
விரிந்தார் மலர்ச்சோலை வீரட்டத்தானே
(6)
அரவுற்ற நாணா அனல் அம்பதாகச்
செருவுற்றவர் புரம் தீயெழச் செற்றான்
தெருவில் கொடிசூழ் திருப்பறியலூரில்
வெருவுற்றவர் தொழும் வீரட்டத்தானே
(7)
நரையார் விடையான்; நலங்கொள் பெருமான்
அரையார் அரவம் அழகா அசைத்தான்
திரையார் புனல்சூழ் திருப்பறியலூரில்
விரையார் மலர்ச்சோலை வீரட்டத்தானே
(8)
வளைக்கும் எயிற்றின் அரக்கன் வரைக்கீழ்
இளைக்கும் படிதான் இருந்து, ஏழையன்னம்
திளைக்கும் படுகர்த் திருப்பறியலூரில்
விளைக்கும் வயல்சூழ்ந்த வீரட்டத்தானே
(9)
இளங்கொள் மலர்மேல் அயன்; ஓத வண்ணன்
துளங்கும் மனத்தார் தொழத் தழலாய் நின்றான்
இளம் கொம்பனாளோடு இணைந்தும் பிணைந்தும்
விளங்கும் திருப்பறியல் வீரட்டத்தானே
(10)
சடையன்; பிறையன்; சமண் சாக்கியரோடு
அடை அன்பிலாதான்; அடியார் பெருமான்
உடையன் புலியின் உரிதோல் அரைமேல்
விடையன் திருப்பறியல் வீரட்டத்தானே
(11)
நறுநீர்உகும் காழி ஞானசம்பந்தன்
வெறிநீர்த் திருப்பறியல் வீரட்டத்தானைப்
பொறிநீடு அரவன் புனைபாடல் வல்லார்க்கு
அறும் நீடவல மறும்பிறப்புத் தானே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page