திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) – சம்பந்தர் தேவாரம்:

<– திருப்பருப்பதம்

(1)
சுடுமணி உமிழ்நாகம் சூழ்தர அரைக்கசைத்தான்
இடுமணி எழில்ஆனை ஏறலன், எருதேறி
விடமணி மிடறுடையான், மேவிய நெடுங்கோட்டுப்
படுமணி விடுசுடரார் பருப்பதம் பரவுதுமே
(2)
நோய்புல்கு தோல்நிரைய நரைவரு நுகருடம்பில்
நீபுல்கு தோற்றமெல்லாம் நினைஉள்கு மடநெஞ்சே
வாய்புல்கு தோத்திரத்தால் வலஞ்செய்து தலைவணங்கிப்
பாய்புலித் தோலுடையான் பருப்பதம் பரவுதுமே
(3)
துனியுறு துயர்தீரத் தோன்றியோர் நல்வினையால்
இனியுறு பயனாதல் இரண்டுற மனம்வையேல்
கனியுறு மரமேறிக் கருமுசுக் கழையுகளும்
பனியுறு கதிர்மதியான் பருப்பதம் பரவுதுமே
(4)
கொங்கணி நறுங்கொன்றைத் தொங்கலன், குளிர்சடையான்
எங்கள் நோய்அகல நின்றான் எனஅருள் ஈசன்இடம்
ஐங்கணை வரிசிலையால் அநங்கனை அழகழித்த
பைங்கண் வெள்ளேறுடையான் பருப்பதம் பரவுதுமே
(5)
துறைபல சுனைமூழ்கித் தூமலர் சுமந்தோடி
மறையொலி வாய்மொழியால் வானவர் மகிழ்ந்தேத்தச்
சிறையொலி கிளிபயிலும் தேனினம் ஒலியோவாப்
பறைபடு விளங்கருவிப் பருப்பதம் பரவுதுமே
(6)
சீர்கெழு சிறப்போவாச் செய்தவ நெறிவேண்டில்
ஏர்கெழு மடநெஞ்சே இரண்டுற மனம் வையேல்
கார்கெழு நறுங்கொன்றைக் கடவுளதிடம், வகையால்
பார்கெழு புகழ்ஓவாப் பருப்பதம் பரவுதுமே
(7)
புடைபுல்கு படர்கமலம் புகையொடு விரைகமழத்
தொடைபுல்கு நறுமாலை திருமுடி மிசையேற
விடைபுல்கு கொடியேந்தி வெந்த வெண்ணீறணிவான்
படைபுல்கு மழுவாளன் பருப்பதம் பரவுதுமே
(8)
நினைப்பெனும் நெடுங்கிணற்றை நின்று நின்றயராதே
மனத்தினை வலித்தொழிந்தேன் அவலம் வந்தடையாமைக்
கனைத்தெழு திரள்கங்கை கமழ்சடைக் கரந்தான்தன்
பனைத்திரள் பாயருவிப் பருப்பதம் பரவுதுமே
(9)
மருவிய வல்வினை நோய் அவலம் வந்தடையாமல்
திருவுரு அமர்ந்தானும், திசைமுகம் உடையானும்
இருவரும் அறியாமை எழுந்ததோர் எரிநடுவே
பருவரையுற நிமிர்ந்தான் பருப்பதம் பரவுதுமே
(10)
சடங்கொண்ட சாத்திரத்தார் சாக்கியர் சமண்குண்டர்
மடங்கொண்ட விரும்பியராய் மயங்கியோர் பேய்த்தேர்ப் பின்
குடங்கொண்டு நீர்க்குச் செல்வார் போதுமின், குஞ்சரத்தின்
படங்கொண்ட போர்வையினான் பருப்பதம் பரவுதுமே
(11)
வெண்செநெல் விளைகழனி விழவொலி கழுமலத்தான்
பண்செலப் பலபாடல் இசைமுரல் பருப்பதத்தை
நன்சொலினால் பரவு ஞானசம்பந்தன் நல்ல
ஒண்சொலின் இவைமாலை உருவெணத் தவமாமே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page