திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) – அப்பர் தேவாரம்:

<– திருப்பருப்பதம்

(1)
கன்றினார் புரங்கள் மூன்றும் கனலெரியாகச் சீறி
நின்றதோர் உருவம் தன்னால் நீர்மையும் நிறையும் கொண்டு
ஒன்றியாங்குமையும் தாமும் ஊர்பலி தேர்ந்து பின்னும்
பன்றிப்பின் வேடராகிப் பருப்பத நோக்கினாரே
(2)
கற்றமா மறைகள் பாடிக் கடைதொறும் பலியும் தேர்வார்
வற்றலோர் தலைகையேந்தி வானவர் வணங்கி வாழ்த்த
முற்றவோர் சடையில் நீரையேற்ற முக்கண்ணர் தம்மைப்
பற்றினார்க்கருள்கள் செய்து பருப்பத நோக்கினாரே
(3)
கரவிலா மனத்தராகிக் கை தொழுவார்கட்கென்றும்
இரவு நின்றெரியதாடி இன்னருள் செய்யும் எந்தை
மருவலார் புரங்கள் மூன்றும் ஆட்டிய வகையராகிப்
பரவுவார்க்கருள்கள் செய்து பருப்பத நோக்கினாரே
(4)
கட்டிட்ட தலைகை ஏந்திக் கனலெரியாடிச் சீறிச்
சுட்டிட்ட நீறு பூசிக் சுடுபிணக் காடராகி
விட்டிட்ட வேட்கையார்க்கு வேறிருந்தருள்கள் செய்து
பட்டிட்ட உடையராகிப் பருப்பத நோக்கினாரே
(5)
கையராய்க் கபாலம் ஏந்திக் காமனைக் கண்ணால் காய்ந்து
மெய்யராய் மேனி தன்மேல் விளங்கு வெண்ணீறுபூசி
உய்வராய் உள்குவார்கட்கு வகைகள் பலவும் செய்து
பையராவரையில் ஆர்த்துப் பருப்பத நோக்கினாரே
(6)
வேடராய் வெய்யராகி வேழத்தின் உரிவை போர்த்து
ஓடராய் உலகமெல்லாம் உழிதர்வர் உமையும் தாமும்
காடராய்க் கனல் கையேந்திக் கடியதோர் விடைமேல் கொண்டு
பாடராய்ப் பூதம்சூழப் பருப்பத நோக்கினாரே
(7)
மேகம்போல் மிடற்றராகி, வேழத்தின் உரிவை போர்த்து
ஏகம்ப மேவினார் தாம் இமையவர் பரவியேத்தக்
காகம்பர் கழறராகிக் கடியதோர் விடையொன்றேறிப்
பாகம் பெண்ணுருவம்ஆனார் பருப்பத நோக்கினாரே
(8)
பேரிடர்ப் பிணிகள் தீர்க்கும் பிஞ்ஞகன் எந்தை பெம்மான்
காருடைக் கண்டராகிக் கபாலமோர் கையிலேந்திச்
சீருடைச் செங்கண் வெள்ளேறேறிய செல்வர் நல்ல
பாரிடம் பாணி செய்யப் பருப்பத நோக்கினாரே
(9)
அங்கண் மால் உடையராய ஐவரால் ஆட்டுணாதே
உங்கள்மால் தீர வேண்டில் உள்ளத்தால் உள்கியேத்தும்
செங்கண்மால் பரவியேத்திச் சிவனென நின்ற செல்வர்
பைங்கண் வெள்ளேறறேறிப் பருப்பத நோக்கினாரே
(10)
அடல்விடை ஊர்தியாகி அரக்கன்தோள் அடர ஊன்றிக்
கடலிடை நஞ்சம் உண்ட கறையணி கண்டனார் தாம்
சுடர்விடு மேனி தன்மேல் சுண்ண வெண்ணீறு பூசிப்
படர்சடை மதியம் சேர்த்திப் பருப்பத நோக்கினாரே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page