(1)
கரப்பர், காலம் அடைந்தவர் தம்வினை
சுருக்குமாறு வல்லார், கங்கை செஞ்சடைப்
பரப்பு நீர்வரு காவிரித் தென்கரைத்
திருப்பராய்த்துறை மேவிய செல்வரே
(2)
மூடினார் களி யானையின் ஈருரி
பாடினார் மறை நான்கினோடு ஆறங்கம்
சேடனார் தென்பராய்த்துறைச் செல்வரைத்
தேடிக் கொண்டு அடியேன் சென்று காண்பனே
(3)
பட்ட நெற்றியர், பால்மதிக் கீற்றினர்
நட்டமாடுவர் நள்ளிருள் ஏமமும்
சிட்டனார் தென்பராய்த்துறைச் செல்வனார்
இட்டமாய் இருப்பாரை அறிவரே
(4)
முன்பெலாம் சில மோழைமை பேசுவர்
என்பெலாம் பல பூண்டங்குழிதர்வர்
தென்பராய்த்துறை மேவிய செல்வனார்
அன்பராய் இருப்பாரை அறிவரே
(5)
போது தாதொடு கொண்டு புனைந்துடன்
தாதவிழ் சடைச் சங்கரன் பாதத்துள்
வாதை தீர்க்க என்றேத்திப் பராய்த்துறைச்
சோதியானைத் தொழுதெழுந்து உய்ம்மினே
(6)
நல்ல நான்மறை ஓதிய நம்பனைப்
பல்லில் வெண்தலையில் பலி கொள்வனைத்
தில்லையான் தென் பராய்த்துறைச் செல்வனை
வல்லையாய் வணங்கித் தொழு வாய்மையே
(7)
நெருப்பினால் குவித்தால் ஒக்கு நீள்சடைப்
பருப்பதம் மதயானை உரித்தவன்
திருப்பராய்த்துறையார் திருமார்பின் நூல்
பொருப்பராவி இழிபுனல் போன்றதே
(8)
எட்ட விட்ட விடுமணல் எக்கர்மேல்
பட்ட நுண்துளி பாயும் பராய்த்துறைச்
சிட்டன் சேவடி சென்றடைகிற்றிரேல்
விட்டு நம்வினை உள்ளன வீடுமே
(9)
நெருப்பராய் நிமிர்ந்தால் ஒக்கு நீள்சடை
மருப்பராய் வளைந்தால் ஒக்கும் வாண்மதி
திருப்பராய்த்துறை மேவிய செல்வனார்
விருப்பராய் இருப்பாரை அறிவரே
(10)
தொண்டு பாடியும் தூமலர் தூவியும்
இண்டை கட்டி இணையடி ஏத்தியும்
பண்டரங்கர் பராய்த்துறைப் பாங்கரைக்
கண்டு கொண்டு அடியேன் உய்ந்து போவனே
(11)
அரக்கன் ஆற்றல் அழித்த அழகனைப்
பரக்கு நீர்ப்பொன்னி மன்னு பராய்த்துறை
இருக்கை மேவிய ஈசனை ஏத்துமின்
பொருக்க நும்வினை போயறும் காண்மினே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...