திருப்பரங்குன்றம் – சுந்தரர் தேவாரம்:

<– திருப்பரங்குன்றம்

(1)
கோத்திட்டையும் கோவலும் கோயில் கொண்டீர்
    உமைக் கொண்டுழல்கின்றதோர் கொல்லைச் சில்லைச்
சேத்திட்டுக் குத்தித் தெருவே திரியும்
    சிலபூதமும் நீரும் திசைதிசையன
சோத்திட்டு விண்ணோர் பலரும் தொழநும்
    அரைக்கோவணத்தோடு ஒரு தோல்புடைசூழ்ந்து
ஆர்த்திட்டதும் பாம்பு, கைக்கொண்டதும் பாம்பு
   அடிகேள் உமக்காட் செய அஞ்சுதுமே
(2)
முண்டம் தரித்தீர், முதுகாடு உறைவீர்
    முழுநீறுமெய் பூசுதிர், மூக்கப் பாம்பைக்
கண்டத்திலும் தோளிலும் கட்டி வைத்தீர்
    கடலைக் கடைந்திட்டதோர் நஞ்சை உண்டீர்
பிண்டம் சுமந்து உம்மொடும் கூடமாட்டோம்
    பெரியாரொடு நட்பினிதென்றிருத்தும்
அண்டம் கடந்தப்புறத்தும் இருந்தீர்
   அடிகேள் உமக்காட் செய அஞ்சுதுமே
(3)
மூடாய முயலகன், மூக்கப் பாம்பு
    முடைநாறிய வெண்தலை, மொய்த்த பல்பேய்
பாடாவரு பூதங்கள், பாய்புலித்தோல்
    பரிசொன்றறியாதன பாரிடங்கள்
தோடார் மலர்க் கொன்றையும் துன்னெருக்கும்
    துணை மாமணி நாகம் அரைக்கசைத்தொன்று
ஆடாதனவே செய்தீர், எம்பெருமான்
   அடிகேள் உமக்காட் செய அஞ்சுதுமே
(4)
மஞ்சுண்ட மாலை மதிசூடு சென்னி
    மலையான் மடந்தை மணவாள நம்பி
பஞ்சுண்ட அல்குல் பணை !மென்முலையா
    ளொடு நீரும் ஒன்றாய் இருத்தல் ஒழியீர்
நஞ்சுண்டு தேவர்க்கமுதம் கொடுத்த
    நலமொன்றறியோம், உங்கை நாகம், அதற்கு
அஞ்சுண்டு படம், அது போகவிடீர்
   அடிகேள் உமக்காட் செய அஞ்சுதுமே
(5)
பொல்லாப் புறங்காட்டகத்து ஆட்டொழியீர்
    புலால் வாயன பேயொடு பூச்சொழியீர்
எல்லாம் அறிவீர் இதுவே அறியீர்
    என்றிரங்குவேன், எல்லியும் நண்பகலும்
கல்லால் நிழல் கீழொரு நாள் கண்டதும்
    கடம்பூர்க் கரக்கோயிலில் முன் கண்டதும்
அல்லால் விரகொன்றிலம் எம்பெருமான்
   அடிகேள் உமக்காட் செயஅஞ்சுதுமே
(6)
தென்னாத் தெனாத் தெத்தெனா என்று பாடிச்
    சில்பூதமும் நீரும் திசைதிசையன
பன்னான்மறை பாடுதிர், பாசூருளீர்
    படம்பக்கம் கொட்டும் திருவொற்றியூரீர்
பண்ணார் மொழியாளைஒர் பங்குடையீர்
    படுகாட்டகத்தென்றுமோர் பற்றொழியீர்
அண்ணாமலையேன் என்றீர், ஆரூருளீர்
   அடிகேள் உமக்காட் செய அஞ்சுதுமே
(7)
சிங்கத்துரி மூடுதிர், தேவர் கணம்
    தொழ நிற்றீர், பெற்றம் உகந்தேறிடுதிர்
பங்கம்பல பேசிடப் பாடும் தொண்டர்
    தமைப் பற்றிக் கொண்டாண்டு விடவும் கில்லீர்
கங்கைச் சடையீர், உம் கருத்தறியோம்
    கண்ணு மூன்றுடையீர், கண்ணேயாய் இருந்தால்
அங்கத்துறு நோய் களைந்தாளகில்லீர்
   அடிகேள் உமக்காட் செய அஞ்சுதுமே
(8)
பிணிவண்ணத்த வல்வினை தீர்த்தருளீர்
    பெருங்காட்டகத்தில் பெரும் பேயும்நீரும்
துணிவண்ணத்தின் மேலும்ஓர் தோலுடுத்துச்
    சுற்று நாகத்தராய்ச் சுண்ண நீறுபூசி
மணிவண்ணத்தின் மேலும்ஓர் வண்ணத்தராய்
    மற்றும் மற்றும் பலபல வண்ணத்தராய்
அணி வண்ணத்தராய் நிற்றீர் எம்பெருமான்
    அடிகேள் உமக்காட் செய அஞ்சுதுமே
(9)
கோளாளிய குஞ்சரம் கோளிழைத்தீர்
    மலையின் தலையல்லது கோயில் கொள்ளீர்
வேளாளிய காமனை வெந்தழிய
    விழித்தீர், அதுஅன்றியும் வேய்புரையும்
தோளாள் உமைநங்கையொர் பங்குடையீர்
    உடுகூறையும் சோறும் தந்தாளகில்லீர்
ஆளாளியவே கிற்றீர், எம்பெருமான்
   அடிகேள் உமக்காட் செய அஞ்சுதுமே
(10)
பாரோடு விண்ணும் பகலுமாகிப்
    பனிமால் வரையாகிப் பரவையாகி
நீரோடு தீயும் நெடும் காற்றுமாகி
    நெடு வெள்ளிடையாகி நிலனுமாகித்
தேரோட வரையெடுத்த அரக்கன்
    சிரம்பத்து இறுத்தீர், உம செய்கையெல்லாம்
ஆரோடும் கூடா அடிகேள் இதுஎன்?
    அடியோம் உமக்காட் செய அஞ்சுதுமே
(11)
அடிகேள் உமக்காட் செய அஞ்சுதும் என்று
    அமரர் பெருமானை ஆரூரன் அஞ்சி
முடியால் உலகாண்ட மூவேந்தர் முன்னே
    மொழிந்த ஆறுமோர் நான்குமோர் ஒன்றினையும்
படியாஇவை கற்றுவல்ல அடியார்
    பரங்குன்ற மேய பரமன் அடிக்கே
குடியாகி வானோர்க்கும் ஓர் கோவுமாகிக்
    குலவேந்தராய் விண்முழுது ஆள்பவரே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page