திருப்பரங்குன்றம் – சம்பந்தர் தேவாரம்:

<– திருப்பரங்குன்றம்

(1)
நீடலர்சோதி வெண்பிறையோடு நிரைகொன்றை
சூடலன், அந்திச் சுடரெரி ஏந்திச் சுடுகானில்
ஆடலன், அஞ்சொல் அணியிழையாளை ஒருபாகம்
பாடலன் மேய நன்னகர் போலும் பரங்குன்றே
(2)
அங்கமொர்ஆறும் அருமறை நான்கும் அருள்செய்து
பொங்கு வெண்ணூலும் பொடியணி மார்பில் பொலிவித்துத்
திங்களும் பாம்பும் திகழ்சடை வைத்தோர் தேன்மொழி
பங்கினன் மேய நன்னகர் போலும் பரங்குன்றே
(3)
நீரிடம் கொண்ட நிமிர்சடை தன்மேல் நிரைகொன்றை
சீரிடம் கொண்ட எம்இறைபோலும், சேய்தாய
ஓருடம்புள்ளே உமையொரு பாகம் உடனாகிப்
பாரிடம் பாட இனிதுறை கோயில் பரங்குன்றே
(4)
வளர் பூங்கோங்க மாதவியோடு மல்லிகைக்
குளிர் பூஞ்சாரல் வண்டறை சோலைப் பரங்குன்றம்
தளிர்போல் மேனித் தையல் நல்லாளோடு ஒருபாகம்
நளிர் பூங்கொன்றை சூடினன் மேய நகர் தானே
(5)
பொன்னியல் கொன்றை, பொறிகிளர் நாகம் புரிசடைத்
துன்னிய சோதியாகிய ஈசன், தொல்மறை
பன்னிய பாடல் ஆடலன் மேய பரங்குன்றை
உன்னிய சிந்தை உடையவர்க்கில்லை உறுநோயே
(6)
கடை நெடுமாடக் கடியரண் மூன்றும் கனல்மூழ்கத்
தொடை நவில்கின்ற வில்லினன், அந்திச் சுடுகானில்
புடைநவில் பூதம் பாட நின்றாடும் பொருசூலப்
படைநவில்வான் தன் நன்னகர் போலும் பரங்குன்றே
(7)
அயிலுடை வேலோர் அனல்புல்கு கையின் அம்பொன்றால்
எயில்பட எய்த எம்இறை மேயஇடம் போலும்
மயில்பெடை புல்கி மாநடமாடும் வளர் சோலைப்
பயில்பெடை வண்டு பாடலறாத பரங்குன்றே
(8)
மைத்தகு மேனி வாளரக்கன் தன் மகுடங்கள்
பத்தின திண்தோள் இருபதும் செற்றான், பரங்குன்றைச்
சித்தமதொன்றிச் செய்கழல் உன்னிச் சிவனென்று
நித்தலும் ஏத்தத் தொல்வினை நம்மேல் நில்லாவே
(9)
முந்தி இவ்வையம் தாவிய மாலும், மொய்யொளி
உந்தியில் வந்திங்கருமறை ஈந்த உரவோனும்
சிந்தையினாலும் தெரிவரிதாகித் திகழ்சோதி
பந்தியல் அங்கை மங்கையொர் பங்கன் பரங்குன்றே
(10)
குண்டாய் முற்றும் திரிவார் கூறை மெய்போர்த்து
மிண்டாய் மிண்டர் பேசிய பேச்சு மெய்யல்ல
பண்டு ஆல்நீழல் மேவிய ஈசன் பரங்குன்றைத்
தொண்டால் ஏத்தத் தொல்வினை நம்மேல் நில்லாவே
(11)
தடமலி பொய்கைச் சண்பைமன் ஞானசம்பந்தன்
படமலி நாகம் அரைக்கசைத்தான் தன் பரங்குன்றைத்
தொடைமலி பாடல் பத்தும் வல்லார்தம் துயர்போகி
விடமலி கண்டன் அருள்பெறும் தன்மை மிக்கோரே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page