(1)
மாட மாளிகை கோபுரத்தொடு
மண்டபம் வளரும் வளர்பொழில்
பாடல் வண்டறையும் பழனத் திருப்பனையூர்த்
தோடு பெய்தொரு காதினில் குழை
தூங்கத் தொண்டர்கள் துள்ளிப் பாடநின்று
ஆடுமாறு வல்லார் அவரே அழகியரே
(2)
நாறு செங்கழு நீர்மலர்
நல்ல மல்லிகை சண்பகத்தொடு
சேறுசெய் கழனிப் பழனத் திருப்பனையூர்
நீறு பூசி நெய்யாடித் தம்மை
நினைப்பவர் தம் மனத்தராகி நின்று
ஆறு சூடவல்லார் அவரே அழகியரே
(3)
செங்கண் மேதிகள் சேடெறிந்து
தடம்படிதலில் சேலினத்தொடு
பைங்கண் வாளைகள்பாய் பழனத் திருப்பனையூர்த்
திங்கள் சூடிய செல்வனார் அடியார்தம்
மேல்வினை தீர்ப்பராய்விடில்
மேல்வினை தீர்ப்பராய்விடில்
அங்கிருந்துறைவார் அவரே அழகியரே
(4)
வாளை பாய மலங்கிளம் கயல்
வரிவரால் உகளும் கழனியுள்
பாளை ஒண்கமுகம் புடைசூழ் திருப்பனையூர்த்
தோளும் ஆகமும் தோன்ற நட்டமிட்டு
ஆடுவார் அடித்தொண்டர் தங்களை
ஆளுமாறு வல்லார் அவரே அழகியரே
(5)
கொங்கையார் பலரும் குடைந்து
ஆட நீர்க்குவளை மலர்தரப்
பங்கயம் மலரும் பழனத் திருப்பனையூர்
மங்கை பாகமும் மாலொர் பாகமும்
தாமுடையவர் மான் மழுவினொடு
அங்கைத் தீயுகப்பார் அவரே அழகியரே
(6)
காவிரி புடைசூழ் சோணாட்டவர்
தாம் பரவிய கருணையங் கடல்
பாவிரி புலவர் பயிலும் திருப்பனையூர்
மாவிரி மட நோக்கி அஞ்ச
மதகரிஉரி போர்த்துகந்தவர்
ஆவில் ஐந்துகப்பார் அவரே அழகியரே
(7)
மரங்கள் மேல் மயிலால மண்டப
மாடமாளிகை கோபுரத்தின் மேல்
திரங்கல் வன்முகவன் புகப்பாய் திருப்பனையூர்த்
துரங்கன் வாய் பிளந்தானும், தூமலர்த்
தோன்றலும் அறியாமை தோன்றிநின்று
அரங்கில் ஆடவல்லார் அவரே அழகியரே
(8)
மண்ணிலா முழவம் அதிர்தர
மாட மாளிகை கோபுரத்தின் மேல்
பண்ணி யாழ்முரலும் பழனத் திருப்பனையூர்
வெண்ணிலாச் சடை மேவிய
விண்ணவரொடு மண்ணவர்தொழ
அண்ணலாகி நின்றார் அவரே அழகியரே
(9)
குரக்கினம் குதி கொள்ளத் தேனுகக்
குண்டு தன்னயல் கெண்டை பாய்தரப்
பரக்கும் தண்கழனிப் பழனத் திருப்பனையூர்
இரக்கம் இல்லவர் ஐந்தொடு ஐந்தலை
தோளிருபது தாள் நெரிதர
அரக்கனை அடர்த்தார் அவரே அழகியரே
(10)
வஞ்சி நுண்ணிடை மங்கை பங்கினர்
மாதவர் வளரும் வளர்பொழில்
பஞ்சின் மெல்லடியார் பயிலும் திருப்பனையூர்
வஞ்சியும் வளர் நாவலூரன்
வனப்பகை அவள்அப்பன் வன்தொண்டன்
செஞ்சொல் கேட்டுகப்பார் அவரே அழகியரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...