திருப்பனையூர் – சம்பந்தர் தேவாரம்:

<– திருப்பனையூர்

(1)
அரவச் சடைமேல் மதிமத்தம்
விரவிப் பொலிகின்றவன் ஊராம்
நிரவிப் பல தொண்டர்கள் நாளும்
பரவிப் பொலியும் பனையூரே
(2)
எண் ஒன்றி நினைந்தவர் தம்பால்
உள் நின்று மகிழ்ந்தவன் ஊராம்
கள் நின்றெழு சோலையில் வண்டு
பண் நின்று ஒலிசெய் பனையூரே
(3)
அலரும் எறி செஞ்சடை தன்மேல்
மலரும் பிறையொன்றுடையான் ஊர்
சிலரென்றும் இருந்து அடிபேணப்
பலரும் பரவும் பனையூரே
(4)
இடியார் கடல் நஞ்சமுதுண்டு
பொடியாடிய மேனியினான் ஊர்
அடியார் தொழ, மன்னவர் ஏத்தப்
படியார் பணியும் பனையூரே
(5)
அறையார் கழல் மேல் அரவாட
இறையார் பலிதேர்ந்தவன் ஊராம்
பொறையார் மிகுசீர் விழமல்கப்
பறையார் ஒலிசெய் பனையூரே
(6)
அணியார் தொழவல்லவர் ஏத்த
மணியார் மிடறொன்றுடையான் ஊர்
தணியார் மலர் கொண்டு இருபோதும்
பணிவார் பயிலும் பனையூரே
(7)
அடையாதவர் மூவெயில் சீறும்
விடையான், விறலார் கரியின் தோல்
உடையானவன், எண் பலபூதப்
படையான் அவன்ஊர் பனையூரே
(8)
இலகும் முடிபத்துடையானை
அலல் கண்டருள் செய்த எம்அண்ணல்
உலகில் உயிர்நீர் நிலமற்றும்
பல கண்டவன் ஊர் பனையூரே
(9)
வரம் உன்னி மகிழ்ந்தெழுவீர்காள்
சிரமுன் அடிதாழ வணங்கும்
பிரமன்னொடு மாலறியாத
பரமன் உறையும் பனையூரே
(10)
அழிவல் அமணரொடு தேரர்
மொழிவல்லன சொல்லிய போதும்
இழிவில்லதொர் செம்மையினான் ஊர்
பழியில்லவர் சேர் பனையூரே
(11)
பாரார் விடையான் பனையூர்மேல்
சீரார் தமிழ்ஞான சம்பந்தன்
ஆராத சொல் மாலைகள் பத்தும்
ஊரூர் நினைவார் உயர்வாரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page