(1)
எந்தை ஈசன் எம்பெருமான் ஏறமர் கடவுள் என்றேத்திச்
சிந்தை செய்பவர்க்கல்லால் சென்று கை கூடுவதன்றால்
கந்தமா மலர்உந்திக் கடும்புனல் நிவாமல்கு கரைமேல்
அந்தண் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே
(2)
ஈர வார்சடை தன்மேல் இளம்பிறை அணிந்த எம்பெருமான்
சீரும் செல்வமும் ஏத்தாச் சிதடர்கள் தொழச் செல்வதன்றால்
வாரி மாமலர் உந்தி வருபுனல் நிவா மல்கு கரைமேல்
ஆரும் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே
(3)
பிணி கலந்த புன்சடை மேல் பிறையணி சிவனெனப் பேணிப்
பணி கலந்து செய்யாத பாவிகள் தொழச் செல்வதன்றால்
மணி கலந்து பொன்உந்தி வருபுனல் நிவா மல்கு கரைமேல்
அணி கலந்த நெல்வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே
(4)
துன்ன ஆடை ஒன்றுடுத்துத், தூய வெண்ணீற்றினராகி
உன்னி நைபவர்க்கல்லால் ஒன்றும் கை கூடுவதன்றால்
பொன்னு மாமணி உந்திப் பொருபுனல் நிவாமல்கு கரைமேல்
அன்னமாரும் நெல்வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே
(5)
வெருகுரிஞ்சு வெங்காட்டில் ஆடிய விமலன் என்றுள்கி
உருகி நைபவர்க்கல்லால் ஒன்றும் கை கூடுவதன்றால்
முருகுரிஞ்சு பூஞ்சோலை மொய்ம்மலர் சுமந்திழி நிவாவந்து
அருகுரிஞ்சு நெல்வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே
(6)
உரவு நீர்சடைக் கரந்த ஒருவன் என்றுள் குளிர்ந்தேத்திப்
பரவி நைபவர்க்கல்லால் பரிந்து கை கூடுவதன்றால்
குரவ நீடுயர் சோலைக் குளிர்புனல் நிவாமல்கு கரைமேல்
அரவமாரும் நெல்வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே
(7)
நீல மாமணி மிடற்று நீறணி சிவனெனப் பேணும்
சீல மாந்தர்கட்கல்லால் சென்று கை கூடுவதன்றால்
கோல மாமலர் உந்திக் குளிர்புனல் நிவா மல்கு கரைமேல்
ஆலும் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே
(8)
செழுந்தண் மால்வரை எடுத்த செருவலி இராவணன் அலற
அழுந்த ஊன்றிய விரலான், போற்றி என்பார்க்கல்லது அருளான்
கொழுங்கனி சுமந்துந்திக் குளிர்புனல் நிவாமல்கு கரைமேல்
அழுந்தும் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே
(9)
நுணங்கு நூலயன் மாலும் இருவரும் நோக்கரியானை
வணங்கி நைபவர்க்கல்லால் வந்து கை கூடுவதன்றால்
மணம் கமழ்ந்து பொன்உந்தி வருபுனல் நிவாமல்கு கரைமேல்
அணங்கும் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே
(10)
சாக்கியப் படுவாரும், சமண் படுவார்களும், மற்றும்
பாக்கியப்படகில்லாப் பாவிகள் தொழச் செல்வதன்றால்
பூக்கமழ்ந்து பொன் உந்திப் பொருபுனல் நிவாமல்கு கரைமேல்
ஆர்க்கும் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே
(11)
கறையினார் பொழில் சூழ்ந்த காழியுண் ஞானசம்பந்தன்
அறையும் பூம்புனல் பரந்த அரத்துறை அடிகள்தம் அருளை
முறைமையால் சொன்ன பாடல் மொழியும் மாந்தர்தம் வினைபோய்ப்
பறையும், ஐயுறவில்லை, பாட்டிவை பத்தும் வல்லார்க்கே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...