திருநெல்வாயில் அரத்துறை – அப்பர் தேவாரம்:

<– திருநெல்வாயில் அரத்துறை

(1)
கடவுளைக், கடலுள் எழு நஞ்சுண்ட
உடலுளானை, ஒப்பார் இலாத எம்
அடலுளானை, அரத்துறை மேவிய
சுடருளானைக் கண்டீர் நாம் தொழுவதே
(2)
கரும்பொப்பானைக் கரும்பினில் கட்டியை
விரும்பொப்பானை, விண்ணோரும் அறிகிலா
அரும்பொப்பானை, அரத்துறை மேவிய
சுரும்பொப்பானைக் கண்டீர் நாம் தொழுவதே
(3)
ஏறொப்பானை, எல்லா உயிர்க்கும் இறை
வேறொப்பானை, விண்ணோரும் அறிகிலா
ஆறொப்பானை, அரத்துறை மேவிய
ஊறொப்பானைக் கண்டீர் நாம் தொழுவதே
(4)
பரப்பொப்பானைப் பகலிருள் நன்னிலா
இரப்பொப்பானை இளமதி சூடிய
அரப்பொப்பானை அரத்துறை மேவிய
சுரப்பொப்பானைக் கண்டீர் நாம் தொழுவதே
(5)
நெய் ஒப்பானை, நெய்யில் சுடர் போல்வதோர்
மெய் ஒப்பானை, விண்ணோரும் அறிகிலார்
ஐயொப்பானை, அரத்துறை மேவிய
கையொப்பானைக் கண்டீர் நாம் தொழுவதே
(6)
நெதி ஒப்பானை, நெதியில் கிழவனை
விதி ஒப்பானை, விண்ணோரும் அறிகிலார்
அதி ஒப்பானை, அரத்துறை மேவிய
கதி ஒப்பானைக் கண்டீர் நாம் தொழுவதே
(7)
புனல் ஒப்பானைப் பொருந்தலர் தம்மையே
மினல் ஒப்பானை, விண்ணோரும் அறிகிலார்
அனல் ஒப்பானை, அரத்துறை மேவிய
கனல் ஒப்பானைக் கண்டீர் நாம் தொழுவதே
(8)
பொன் ஒப்பானைப், பொன்னின் சுடர் போல்வதோர்
மின் ஒப்பானை, விண்ணோரும் அறிகிலார்
அன் ஒப்பானை, அரத்துறை மேவிய
தன் ஒப்பானைக் கண்டீர் நாம் தொழுவதே
(9)
காழியானைக், கனவிடை ஊருமெய்
வாழியானை, வல்லோரும் என்று இன்னவர்
ஆழியான் பிரமற்கும் அரத்துறை
ஊழியானைக் கண்டீர் நாம் தொழுவதே
(10)
கலை ஒப்பானைக், கற்றார்க்கோர் அமுதினை
மலை ஒப்பானை, மணிமுடி ஊன்றிய
அலை ஒப்பானை, அரத்துறை மேவிய
நிலை ஒப்பானைக் கண்டீர் நாம் தொழுவதே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page