(1)
கல்வாய் அகிலும் கதிர் மாமணியும்
கலந்துந்தி வரும் நிவவின் கரைமேல்
நெல்வாயில் அரத்துறை நீடுறையும்
நிலவெண்மதி சூடிய நின்மலனே
நல்வாயில் செய்தார் நடந்தார் உடுத்தார்
நரைத்தார் இறந்தார் என்று நானிலத்தில்
சொல்லாய்க் கழிகின்றது அறிந்தடியேன்
தொடர்ந்தேன் உய்யப் போவதொர் சூழல்சொல்லே
(2)
கறிமா மிளகும் மிகுவன் மரமும்
மிகஉந்தி வரும் நிவவின் கரைமேல்
நெறிவார் குழலார்அவர் காண நடஞ்செய்
நெல்வாயில் அரத்துறை நின்மலனே
வறிதே நிலையாத இம்மண்ணுலகின்
நரனாக வகுத்தனை, நானிலையேன்
பொறிவாயில் இவ்வைந்தினையும் அவியப்
பொருது உன்னடியே புகும் சூழல் சொல்லே
(3)
புற்றாடரவம் அரை ஆர்த்துகந்தாய்
புனிதா பொரு வெள்விடை ஊர்தியினாய்
எற்றேஒரு கண்ணிலன் நின்னையல்லால்
நெல்வாயில் அரத்துறை நின்மலனே
மற்றேல்ஒரு பற்றிலன் எம்பெருமான்
வண்டார் குழலாள் மங்கை பங்கினனே
அற்றார் பிறவிக்கடல் நீந்தியேறி
அடியேன் உய்யப் போவதொர் சூழல் சொல்லே
(4)
கோடுயர் கோங்கலர் வேங்கையலர்
மிகவுந்தி வரும் நிவவின் கரைமேல்
நீடுயர் சோலை நெல்வாயில் அரத்
துறை நின்மலனே, நினைவார் மனத்தாய்
ஒடுபுனல் கரையாம் இளமை
உறங்கி விழித்தால்ஒக்கும் இப்பிறவி
வாடியிருந்து வருந்தல் செய்யாது
அடியேன் உய்யப் போவதொர் சூழல்சொல்லே
(5)
உலவும் முகிலில் தலைகண் பொழிய
உயர் வேயொடுஇழி நிவவின் கரைமேல்
நிலவும் மயிலாரவர் தாம் பயிலும்
நெல்வாயில் அரத்துறை நின்மலனே
புலன்ஐந்து மயங்கி அகங்குழையப்
பொரு வேலொர் நமன்தமர் தாம்நலிய
அலமந்து மயங்கி அயர்வதன் முன்
அடியேன் உய்யப் போவதொர் சூழல் சொல்லே
(6)
ஏலம் இலவங்கம் எழிற்கனகம்
மிகவுந்தி வரும் நிவவின் கரைமேல்
நீலம்மலர்ப் பொய்கையில் அன்னமலி
நெல்வாயில் அரத்துறையாய், ஒருநெல்
வாலூன்ற வருந்தும் உடம்பிதனை
மகிழாது அழகா அலந்தேன் இனியான்
ஆலந் நிழலில் அமர்ந்தாய் அமரா
அடியேன் உய்யப் போவதொர் சூழல் சொல்லே
(7)
சிகர முகத்தில் திரளார் அகிலும்
மிகவுந்தி வருந் நிவவின் கரைமேல்
நிகரின் மயிலார்அவர் தாம் பயிலும்
நெல்வாயில் அரத்துறை நின்மலனே
மகரக் குழையாய், மணக் கோலமதே
பிணக்கோலமதாம் பிறவியிது தான்
அகரம் முதலின் எழுத்தாகி நின்றாய்
அடியேன் உய்யப் போவதொர் சூழல்சொல்லே
(8)
திண்தேர் நெடுவீதி இலங்கையர் கோன்
திரள்தோள் இருபதும் நெரித்தருளி
நண்டாடு நெடுவயல் சூழ்புறவின்
நெல்வாயில் அரத்துறை நின்மலனே
பண்டே மிக நான்செய்த பாக்கியத்தால்
பரஞ்சோதி நின் நாமம் பயிலப் பெற்றேன்
அண்டா அமரர்க்கமரர் பெருமான்
அடியேன் உய்யப் போவதொர் சூழல்சொல்லே
(9)
மாணா உருவாகியொர் மண்ணளந்தான்
மலர்மேலவன் நேடியும் காண்பரியாய்
நீணீள்முடி வானவர் வந்திறைஞ்சும்
நெல்வாயில் அரத்துறை நின்மலனே
வாணார் நுதலார் வலைப்பட்டடியேன்
பலவின்கனி ஈயது போல்வதன் முன்
ஆணோடு பெண்ணாம் உருவாகி நின்றாய்
அடியேன் உய்யப் போவதொர் சூழல் சொல்லே
(10)
நீரூரு நெடுவயல் சூழ்புறவின்
நெல்வாயில் அரத்துறை நின்மலனைத்
தேரூர் நெடுவீதி நன்மாடமலி
தென்னாவலர் கோன் அடித்தொண்டன் அணி
ஆரூரன் உரைத்தன நற்றமிழின்
மிகுமாலைஒர் பத்திவை கற்றுவல்லார்
காரூர்களி வண்டறை யானை மன்னர்
அவராகிஒர் விண்முழுதாள்பவரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...